செய்திகள்

ஐபிஎல்: சாம்பியன் பட்டம் வென்ற ஆர்சிபி – கோலியின் 18 ஆண்டுக்கால முயற்சி நிறைவேறியது!

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனின் சாம்பியன் பட்டத்தை ஆர்சிபி அணி கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. இதன் மூலம் 18 ஆண்டுகளில் ஆர்சிபி அணி முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றி இருக்கிறது.

அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிய, ஆர்சிபி அணியும் பலப் பரீட்சை நடத்தியது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனை அடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணியில் பில் சால்ட் அதிரடியாக விளையாடி இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் என ஒன்பது பந்துகளில் 16 ரன்கள் சேர்த்தார்.

மறுபுறம் விராட் கோலி தனக்கென உரிய நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தார்.

மாயங் அகர்வால் 18 பந்துகளில் 24 ரன்களிலும், கேப்டன் ரஜத் பட்டிதார் இரண்டு சிக்ஸர் ஒரு பவுண்டரி என 16 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லிவிங்ஸ்டோன் 15 பந்துகளில் 25 ரன்கள் எடுக்க விராட் கோலி 35 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இதில் மூன்று பவுண்டரி அடங்கும். இந்த சூழலில் நடுவரிசையில் விளையாடிய ஜித்தேஷ் ஷர்மா இரண்டு பவுண்டரி, இரண்டு சிக்ஸர் என பத்து பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார்.

ரொமேரியோ செபர்ட் ஒன்பது பந்துகளில் 17 ரன்கள் எடுக்க ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் எடுத்தது.

பஞ்சாப் அணியின் பந்துவீச்சு தரப்பில் ஆர்ஸ்தீப் சிங், ஜெமிசன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களம் இறங்கியது.

தொடக்க வீரராக விளையாடிய பிரியான்ஸ் ஆர்யா 4 பவுண்டரிகள் எடுத்த நிலையில் பில் சால்டின் அபார கேட்சால் 24 ரன்களில் ஆட்டம் இழந்தார்.மறுபுறம் பிராப்சிம்ரன் சிங் 22 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார் .

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க பஞ்சாப் அணிக்கு அது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

பஞ்சாப் அணியின் பலமே அந்த அணியின் தொடக்க வீரர்கள் தான். பிரியான்ஸ் ஆர்யாவும், பிராப் சிம்ரன் சிங்கும் அபாரமாக விளையாடி ரன்களை சேர்ப்பார்கள்.

இந்த சூழலில் ஆட்டத்தில் மூன்றாவது ஓவரில் பிராப்சிம்ரன் அடித்த பந்தை சிக்சர் லைனில் கைக்கு வந்த கேட்சை ஆர்சிபி வீரர் ரோமெரியோ செபர்ட் தவறவிட்டார்.

இது ஆர்சிபிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.கேட்சை விட்டதால் rcb வீரர்கள் நொந்து போய் களத்தில் நின்றனர். இந்த நிலையில் இதனை சரி செய்யும் விதமாக ஆட்டத்தில் ஐந்தாவது ஓவரில் ஒரு அபாரமான சம்பவம் நடைபெற்றது. பஞ்சாப் கிங்ஸ் அணியின் இளம் அதிரடி வீரரான பிரியான்ஸ் ஆர்யா 24 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடிக் கொண்டிருந்த நிலையில், பந்தை சிக்ஸருக்கு அடிக்க முற்பட்டார்.

அப்போது சிக்ஸர் லைனில் நின்று கொண்டிருந்த பில் சால்ட் பந்தை பிடித்து விட்டார். எனினும் 6 லைனில் தாண்டி சென்று விடுவோம் என்பதை உணர்ந்த அவர் பந்தை தூக்கி போட்டுவிட்டு பின்னர் சிக்ஸர் லைனில் மிதித்து மீண்டும் களத்திற்குள் வந்து அந்த பந்தை கேட்ச் பிடித்தார். இது ஆர்சிபி அணிக்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் ஆக மாறியது.

இதேபோன்று ஜோஸ் இங்கிலீஷில் நான்கு சிக்சர்களை பறக்கவிட்டு பஞ்சாப் அணியை கரை சேர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அவரும் 23 பந்துகளில் 39 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.

இறுதியில் முதல் பந்தில் சிக்சர் அடித்த ஸ்டோனிஸ் , 2வது பந்தில் கேட்ச் ஆனார். நெஹல் வதேரா 18 ரன்களிலும், அஸ்மத்துல்லா 1 ரன்னிலும் ஆட்டமிழக்க பஞ்சாப் அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதன் மூலம் ஆர்சிபி அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. சிறப்பாக பந்துவீசிய குர்னல் பாண்டியா 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் விட்டு கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார்.