காணிகளைச் சுவீகரிக்கும் வர்த்தமானியை இரத்துச் செய்வதற்கு தயங்குவது ஏன்?
வடக்கில் காணிகளைச் சுவீகரிக்கும் வர்த்தமானியை இரத்துச் செய்வதற்கு தீர்மானித்திருந்த அரசாங்கம், குறித்த இரத்து செய்யும் நடவடிக்கையை நடைமுறைப்படுத்த ஏன் தாமதிக்கிறது என தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் வினவியுள்ளார்.
தனது முகநூலில் இட்டுள்ள பதிவொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
”வடக்கில் 5941 ஏக்கர் காணிகளுக்கான தமது உரித்தை நிரூபிக்குமாறு காணி நிர்ணய சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் 28.03.1025 அன்று 2420/25 இலக்கமிட்ட வர்த்தமானி, காணி உரிமையாளர்களுக்கு கொடுத்த காலக்கெடு 28.06.2025 உடன் முடிவடைகிறது. சட்ட மறுப்புப் போராட்டத்துக்கு நாம் கொடுத்த அவகாசம் முடிவடைவதற்கு 1 நாள் இருக்க, அதை மீளப் பெறப் போவதாக 27. 05.2025 அன்று அரசு அறிவித்தது. அது உடனடியாக செய்யப்படும் என்று நாம் எதிர்பார்த்தோம். ஆனால் 2 வாரமாகியும் இந்த வர்த்தமானி மீள் கைவாங்கப்படாத காரணத்தால் உச்ச நீதிமன்றத்திலே அடிப்படை உரிமை மீறல் வழக்கு (SC FR 112/2025) 12.06.2025 அன்று தாக்கல் செய்தேன். 17.06.2025 இவ் வழக்கு ஆதரிப்பதற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது அமைச்சரவையின் அறிவுறுத்தல் பெறுவதற்கு சட்ட மா அதிபர் இன்று வரை கால அவகாசம் கேட்டிருந்தார். இன்று வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது அரசின் முடிவை அறிவிக்க 27.06.2025 வரை (காலக்கெடு முடிவதற்கு 1 நாள் அவகாசம் இருக்க) மீண்டும் அவகாசம் கோரியிருக்கிறார்! தாம் தீர்மானித்ததாக கூறியதை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் தயங்குவது ஏன்?” என சுமந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.




