இலங்கையில் இருந்து குற்றவாளிகளை இந்தியாவுக்கு அழைத்துச் செல்லும் அந்த நபர் யார்?
இலங்கையிலிருந்து குற்றவாளிகளை கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு அழைத்துச் செல்லும் பிரதான சூத்திரதாரி குறித்து கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு தகவல்களை கண்டறிந்துள்ளது.
இஷாரா செவ்வந்தியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி, கடந்த சனிக்கிழமை கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.
சஞ்சீவவின் கொலைக்குப் பின்னர் அவர் தங்கியிருந்த இடங்களைப் பரிசோதிப்பதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அவர் அந்தப் பகுதிகளில் 3 நாட்கள் தங்கியிருந்து, பின்னர் கடல் மார்க்கமாக இந்தியாவிற்குத் தப்பிச் சென்றுள்ளார்.
இதன்படி, அவருக்கு தங்குமிட வசதிகளை வழங்கிய நான்கு பேர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, சட்டவிரோதமான முறையில் ஆட்களை கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு அழைத்துச் செல்லும் நபர் ஒருவர் குறித்து தெரியவந்துள்ளது.
அவர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தேடுதலில், இலங்கையில் இருந்த பல குற்றவாளிகளை அந்த நபர் கடல் மார்க்கமாக இந்தியாவிற்கு அழைத்துச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
குற்றவாளிகளை இந்தியாவிற்கு அழைத்துச் செல்லும் இந்த வலையமைப்பின் பிரதான சூத்திரதாரி அந்த நபராக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
செவ்வந்தியுடன் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட ஜே.கே. பாய் என்பவர், கெஹெல்பத்தர பத்மே என்பவரின் ஆலோசனையின் பேரில் குறித்த நபரைத் தொடர்பு கொண்டுள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.
அதன்படி, அவரைக் கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக லொக்குஹெட்டியின் ஆலோசனையின் பேரில், அதன் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.பி. விஜேதுங்கவுன் தலைமையில் நடைபெற்று வருகின்றன.
இதேவேளை, ஹிக்கடுவ, மஹவத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் மீது நேற்று இரவு இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.
வீட்டின் உரிமையாளரான பெண்ணின் இரண்டு பிள்ளைகள் இத்தாலியில் வசித்து வருவதுடன், கடந்த சில தினங்களுக்கு முன்னர் இத்தாலியின் நாபோலி நகரில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டி ஒன்றைப் பார்வையிட்ட போது ஏற்பட்ட தகராறு காரணமாகவே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
தென் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத்தின் ஆலோசனையின் பேரில், விசேட பொலிஸ் குழுவொன்று இந்தச் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
இதேவேளை, ஹிக்கடுவ பிரதேசத்தில் குப்பைமேடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கி ஒன்றையும் 24 கைத்துப்பாக்கி ரவைகளையும் காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதன்போது இரண்டு சந்தேகநபர்களும், ஒரு பெண் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், ரஞ்சித் நிஷாந்த என்ற, தற்போது சிறையில் இருக்கும் ஒருவரின் மகன் ஆவார்.
அந்த நபர் கடந்த செப்டெம்பர் மாதம் 1 ஆம் திகதி மீட்டியாகொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிறை வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் நாமல் பெரேராவின் தலைமையில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.




