செய்திகள்

இலங்கை – இந்திய மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்; எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நீண்டகாலமாக மீனவர் பிரச்சினைகள் நிலவி வருவதாகவும், அதற்கு சர்வதேச சட்டங்களுக்கு அமைய நடைமுறைப்படுத்தக்கூடிய நிரந்தரத் தீர்வைக் காண இரு நாடுகளும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ‘இந்து-இலங்கை இருதரப்பு உறவுகள்’ என்ற தலைப்பில் ANI சேவையுடன் நடத்திய கலந்துரையாடலின் போதே இந்தக் கருத்தை வெளியிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், ஐக்கிய நாடுகளின் கடற் சட்டம் பற்றிய சாசனம் நடைமுறையில் உள்ளது என்றும், அதற்கு உட்பட்டு சர்வதேச சட்டங்கள் மற்றும் விதிமுறைகளைக் மதித்து இரு தரப்பினரும் ஒன்றிணைந்து உரிய சட்டங்களை உருவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சட்டவிரோத மீன்பிடியைத் தடுப்பதற்காக, சம்பந்தப்பட்ட சட்ட விதிமுறைகளுக்கு இணங்க பிரச்சினைகளைத் தீர்க்க இரு நாடுகளும் உறுதியளிப்பது முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் இருப்பதை ஏற்றுக்கொண்டாலும், வருமானம் ஈட்டும் செயல்முறை சட்டபூர்வமாக இருக்க வேண்டும் என்பதை இரு அரசாங்கங்களும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச தெளிவுபடுத்தினார்.

“நிரந்தரச் சட்டக் கட்டமைப்பு இல்லாமல் செயற்படுவதை விட, இரு தரப்பினரும் ஒரு நீடித்த தீர்விற்காக இணைந்து செயற்பட வேண்டும்” என்று அவர் இந்தச் சந்தர்ப்பத்தில் வலியுறுத்தினார்.

மேலும், கச்சத்தீவு அருகே உள்ள இலங்கை கடல் எல்லைக்குள் தமிழக மீனவர்கள் நுழைவது குறித்து இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ச்சியான பிரச்சினைகள் நீடிப்பதாகவும், இது பெரும்பாலும் கைதுகள் மற்றும் கடல் எல்லைகள் தொடர்பான மோதல்களுக்கு வழிவகுப்பதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், பிரதமர் ஹரிணி அமரசூரியவின் அண்மைய இந்தியப் பயணத்தின் போது பேசப்பட்ட விடயங்களையும் ANI செய்தி சேவை இந்தக் கலந்துரையாடலில் மேற்கோள் காட்டியது.

பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடையேயான சந்திப்பின் போது, இந்தப் பிரச்சினை ‘உணர்ச்சிபூர்வமான பிரச்சினை’ என்று கூறப்பட்டதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

அதன்படி, இதற்கு ஒரு நடைமுறைத் தீர்வைக் காண இரு நாடுகளுக்கும் இடையே விரிவான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த மீனவர் பிரச்சினை இந்திய-இலங்கை உறவுகளில் மிகவும் சர்ச்சைக்குரிய அம்சமாகத் தொடர்கிறது.

பாக்கு நீரிணையில் தமிழ்நாடு மற்றும் இலங்கையைப் பிரிக்கும் குறுகிய நீர்ப்பரப்பு இரு நாடுகளின் மீனவர்களுக்கும் வளமான மீன்பிடித் தளமாகக் கருதப்படுகிறது.