புத்தர் சிலையால் உருவான பதற்றம் – பின்னணியில் இருக்கும் பலமான சக்தி?
திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் புதிதாக புத்தர்சிலை வைக்கும் வைபவம் இன்று பிற்பகல் பௌத்த சம்பிரதாய அடிப்படையில் இடம்பெற்றது.
நேற்று (16) இரவு அவசர அவசரமாக தற்காலிக கட்டடம் அமைத்து புத்தர்சிலை கொண்டு வந்து வைக்கமுற்பட்ட போது ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக மீண்டும் புத்தர்சிலை கொண்டு செல்லப்பட்டு இன்றைய தினம் மீண்டும் அதே இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இது தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த_விஜயபால, புத்தர்சிலைக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தினால்தான் திரும்ப கொண்டு சென்றதாகவும் இன்றைய தினம் அதே இடத்தில் வைக்கப்படும் என்ற கருத்தினை வெளியிட்டிருந்தார்.
திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோரமாக அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விஹாரயின் வளாகத்திற்குள் அனுமதி பெறாது, சட்டவிரோதமான முறையில் கட்டுமானப்பணிகள் இடம்பெற்றதுடன்
அதனை பார்வையிட சென்ற கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்கள அதிகாரிகளுக்கும் பௌத்த துறவிகளுக்கும் இடையில் முறுகல் நிலை தொடர்ந்துள்ள நிலையில் இன்று காலையும் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில் இதன் பின்னால் இருந்து சில அரசியல் தரப்புகள் செயற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
குறிப்பாக இந்த புத்தர் சிலையின் பின்னணியில் தென்னிலங்கையை சேர்ந்த பலமான சக்தி உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
கடந்த ஒரு வருடகாலமாக சுமூகமாக அரசாங்கத்தின் செயற்பாடு சென்று கொண்டிருக்கும் நிலையில் திடீரென இவ்வாறான சர்ச்சை ஏற்படுத்தப்பட்டதன் பின்னணில் பெரும் சக்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த காலங்களில் சிங்களவர்களின் ஏகோபித்த ஆதரவினை பெற்று ஆட்சியில் இருந்த தரப்பினரால் திட்டமிட்ட வகையில், இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகு்கள் எழுந்துள்ளன.
எதிர்வரும் 21ஆம் திகதி சமகால அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டம் ஒன்றை முன்னெடுக்க தயார்படுத்தல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறானதொரு நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




