பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி பொருட்களை விநியோகிக்க செல்வோருக்கான அறிவித்தல்!
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி பொருட்களை விநியோகிக்கச் செல்லும் போது, பிரதேச செயலகங்களை அறிவுறுத்தி, அவர்கள் ஊடாக நன்கொடைகளை விநியோகிப்பதற்கான வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளுமாறு கொழும்பு மாவட்ட செயலாளர் பிரசன்ன கினிகே கோரிக்கை விடுத்துள்ளார்.
நன்கொடையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது தமது பொறுப்பு என்றும், நேரடியாக உதவிகளை விநியோகிக்கச் செல்லும் போது ஏதேனும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், நன்கொடையாளர்களுக்கு இவ்வாறு அறிவுறுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பு மாவட்டத்தில் 397 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த 63,047 குடும்பங்களைச் சேர்ந்த 246,359 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அனர்த்தங்கள் காரணமாக மூன்று பேர் உயிரிழந்துடன், மேலும் இருவர் காணாமல் போயுள்ளனர்.
இதுவரை 6 வீடுகள் முழுமையாகவும், 1,187 வீடுகள் பகுதியளவும் சேதமடைந்துள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.
சுமார் 20,000 இற்கும் மேற்பட்டோர் தற்போது பாதுகாப்பு முகாம்களில் தங்கியுள்ளனர் என்றும் பிரசன்ன கினிகே மேலும் தெரிவித்தார்.




