செய்திகள்

தையிட்டியில் பொலிஸ் சித்திரவதை: நிரோஷ் வைத்தியசாலையில் அனுமதி

தையிட்டியில் அமைக்கப்பட்ட சட்டவிரோத விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இடம்பெற்ற அகிம்சை வழிப் போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட, வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்குறிப்பிட்ட போராட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றபோது, வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் தவத்திரு வேலன் சுவாமிகள் உள்ளிட்ட ஐவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் மல்லாகம் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இவர்கள் கைது செய்யப்பட்டபோது, பொலிஸாரால் கடும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டே கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதல்களுக்கு உள்ளான வேலன் சுவாமிகள் ஏற்கனவே யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, ஆண்கள் விடுதி இலக்கம் 09 இல் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில், வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தற்போது 24 ஆம் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.