செய்திகள்

ஜெய்சங்கரிடம் இ.தொ.கா முன்வைத்த 4 கோரிக்கைகள்

இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரை, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் (இ.தொ.கா) தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன் மற்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பழனி திகாம்பரம், வே. இராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று (23) சந்தித்தனர்.

இச்சந்திப்பின் போது, இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது இந்தியா வழங்கிய மனிதாபிமான உதவிகளுக்கு இலங்கைத் தரப்பினர் தமது நன்றியைத் தெரிவித்தனர்.

இச்சந்திப்பில், இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் பின்வரும் 4 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தார்:

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் வரை, அவர்களது அவசரத் தேவையைப் பூர்த்தி செய்யத் தற்காலிக வீடுகளை அமைத்துக் கொடுத்தல்.

பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது வசிக்கும் இடத்திலிருந்து மாற்று இடங்களுக்கு இடம்பெயரும் போது, அவர்களது தொழில் ரீதியான வாழ்வாதாரம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்குத் தேவையான நிதியுதவிகளை வழங்குதல்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்த போது அறிவித்த ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தின் கீழ் வழங்கப்படுவதைப் போன்ற மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை, LIC Lanka நிறுவனத்தின் ஊடாக இலங்கையில் அறிமுகப்படுத்தி, பெருந்தோட்ட சமூகத்தினரையும் அதில் உள்வாங்குதல்.

பெருந்தோட்ட சமூகத்தினர் இந்திய வம்சாவளி அந்தஸ்துக்கான OCI (Overseas Citizen of India) அட்டையைப் பெற்றுக்கொள்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைத் தீர்த்தல். குறிப்பாக, பிறப்புச் சான்றிதழில் ‘இந்திய வம்சாவளித் தமிழர்’ எனக் குறிப்பிடப்பட்டிருப்பதையோ அல்லது கண்டியிலுள்ள இந்தியத் தூதரகத்தில் உள்ள வரலாற்று ஆவணங்களையோ ஆதாரமாகக் கொண்டு OCI அட்டையை வழங்குவதை இலகுபடுத்துதல்.

இக்கோரிக்கைகள் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சாதகமான பதிலளிப்பார் என எதிர்பார்ப்பதாக இ.தொ.கா தெரிவித்துள்ளது.