செய்திகள்

சம்பள உயர்வு கோரி ஜூன் 7இல் தோட்டத் தொழிலாளர்கள் போராட்டம்

தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு பேச்சுவார்த்தைத் தொடர்ந்து இழுபறி நிலையில் உள்ளதால் தோட்டக்கம்பனிகளுக்கு எதிராக எதிர்வரும் ஜூன் மாதம் ஏழாம் திகதி தொழிலாளர்களைத் திரட்டிக் கொண்டு கவனயீர்ப்புப் போராட்டத்தை மேற்கொள்ள உள்ளோம் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்ச்ருமான பி.திகாம்பரம் தெரிவித்தார்.

பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக தோட்டப்பகுதிகளிலுள்ள ஆலயங்களுக்கு ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கும் நிகழ்வு 24.05.2015 அன்று டிக்கோயா வனராஜா பிள்ளையார் கோவில் மண்டபத்தில் இடம் பெற்ற போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அமைச்சர் பி.திகாம்பரம் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது.

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பள உயர்வைப் பெற்றுத் தருவோம் என்று உறுதி கூறியவர்கள் இன்று நழுவல் போக்கான பதில்களைக் கூறிக் கொண்டிருக்கின்றனர். முதற்கட்ட பேச்சுவார்த்தைகளில் எவ்விதமான நிலைப்பாடும் எடுக்கப்படவில்லை. இதனால் தொழிலாளர்கள் விரக்தி நிலையை அடைந்துள்ளனர். எனவே தோட்டத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தினை வலியுறுத்தி போராட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆகவே எதிர்வரும் ஏழாம் திகதி இடம் பெற உள்ள போராட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இன்று தொழிலாளர் நலன் கருதி நாம் மேற்கொள்கின்ற சேவைகள் குறித்து சிலர் அரசியல் காழ்ப்புணர்வுடன் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

100 நாட்களுள் எம்மால் 400 வீடுகளைக்கட்டிக் கொடுப்பதற்கு முடியுமென்றால் தொடர்ந்து வரும் ஐந்து வருடகாலத்துக்குள் ஆயிரக்கணக்கான வீடுகளை எம்மால் கட்டிக்கொடுக்க முடியும். எனவே இன்று மலையகத்தமிழ் தம்மை இதுவரை காலமும் ஏமாற்றியவர்கள் யார் என்பதை புரிந்து கொண்டுள்ளனர்.ஆகவே இந்த மக்களுக்கு நாம் நேர்மையுடன் சேவையாற்றுவோம். இன்று வழங்கி வைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கிகள் கட்சி தொழிற்சங்க பேதங்களின்றியே வழங்கப்பட்டுள்ளன.இவற்றினை உரிய வகையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

IMG_2829