சாதகமான பதில் இல்லையெனில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்: வேலையற்ற பட்டதாரிகள்
கிழக்கு மாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரச நியமனங்களை வழங்குவது தொடர்பில் எதிர்வரும் 16ஆம் திகதி கிழக்கு மாகாண முதலமைச்சருடன் இடம்பெறும் பேச்சுவார்த்தையில் சாதகமான சமிக்ஞைகள் கிடைக்காவிட்டால் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தினை முன்னெடுப்பது என மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் கூட்டம் இன்று சனிக்கிழமை காலை மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் உ.உதயவேந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பட்டதாரிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
வேலையற்ற பட்டதாரிகள் கடந்த காலங்களில் பல போராட்டங்களை நடாத்தியபோதிலும் இதுவரையில் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாது தொடர்பில் இங்கு கவலை தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதிகள் தங்களை ஏமாற்றிய நிலையே காணப்படுவதாகவும் தமது நிலைமைகள் தொடர்பில் யாரும் இதுவரை கவனம் செலுத்தவில்லையெனவும் இங்கு குற்றஞ்சாட்டப்பட்டது.
தம்மை தங்களது அரசியல் தேவைகளுக்காக மட்டுமே பயன்படுத்த பார்ப்பதாகவும் தங்களது தேவைகள் குறித்து யாரும் கவனம் செலுத்தவில்லையெனவும் இங்கு பட்டதாரிகளினால் கூறப்பட்டது.







