ஆலயங்களில் மிருக பலியிடுதலுக்கு நல்லை ஆதீன முதல்வர் கடும் கண்டனம்
உயிர்களைப் பாதுகாப்பதே எங்களுடைய சிந்தனைகளாக இருக்க வேண்டுமே தவிர உயிரை வதைப்பதோ,துன்பப்படுத்துவதோ மனித தர்மத்தில் இல்லாதவொன்று.
இவ்வாறு யாழ்.குடாநாட்டில் கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலயம் உட்பட ஆலயங்களில் இடம்பெற்று வரும் மிருகபலியிடல் சம்பவங்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள்.இது தொடர்பில் கருத்துக் கேட்ட போது அவர் எமது செய்திச் சேவைக்கு மேலும் தெரிவித்ததாவது,
இந்து ஆலயங்களில் நடைபெறுகின்ற மன வேதனைக்குரிய செய்திகளாக பலியிடுதல் என்கின்ற பேரிலே சில வேண்டத்தகாத விடயங்கள் இடம்பெறுவது அனைவரது மனத்தையும் வேதனைக்கு ஆட்படுத்தியிருக்கின்றன.எங்களுடைய வேதங்கள்,ஆகமங்கள்,புராணங்கள்,இதிகாசங்கள்,வரலாறுகளில் பலியிடுதல் தொடர்பான செய்திகள் ஓரளவுக்குத் தான் கூறப்பட்டிருக்கின்றதே தவிர முக்கியத்துவப்படுத்திச் சொல்லப்படவில்லை. அதனுடைய காரண,காரியங்களைப் புராணங்கள் தொடக்கம் அனைத்து விடயங்களும் தெளிவாகச் சொல்லியிருக்கின்றன.
குறிப்பாக யாழ்.குடாநாட்டில் பல ஆலயங்களில் பலியிடல் இடம்பெறுவது இந்து சமய மக்கள் மத்தியில் மன வேதனையைத் தோற்றுவித்துள்ளன.முன்னர் ஓரிரு பலிகள் மாத்திரம் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் தொகையான பலியிடல் இடம்பெறுவது மிகுந்த மனவருத்தத்தைத் தருகின்றது.
உயிரை வதைப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ இறைவனால் எங்களுக்கு எந்தவித அதிகாரங்களும் தரப்படவில்லை.உயிர்களைப் பாதுகாப்பதே எங்களுடைய சிந்தனைகளாக இருக்க வேண்டுமே தவிர உயிரை வதைப்பதோ,துன்பப்படுத்துவதோ மனித தர்மத்தில் இல்லாதவொன்று.ஆகவே ஆலயங்கள் என்ற பேரிலே இவ்வாறான செயல்களைச் செய்வது இந்து சமயத்தை,இந்துசமய மக்களின் மனத்தையும் புண்படுத்துவதாய் அமைந்துள்ளன.எனவே,பலியிடலை மேற்கொள்ளும் மக்கள் சிந்தித்து மிருகங்களைப் பாதுகாக்க முன்வர வேண்டும்.ஏனெனில் மிருகங்கள் தான் எம்மைப் பாதுகாப்பவை.
அண்மையிலே நேபாள நாட்டிலே இயற்கைப் பேரழிவு இடம்பெற்ற போது அங்கே அதிகளவு உயிர்ப்பலி நடந்தமையால் தான் பெரும் பாதிப்பு ஏற்பட்டதாக அங்குள்ள மக்கள் மத்தியில் ஓர் உணர்வு நிலை காணப்படுகிறது.உயிரை வதைப்பது எந்த வகையிலும் ஏற்க முடியாத ஒன்று.தன்னுயிர் போல மன்னுயிரையும் நேசிக்க வேண்டும் என்கிற வகையிலே ஏனைய உயிர்களையும் நேசித்து வாழ்வதற்கு வழி செய்வது தான் எமது சமயம் வலியுறுத்தும் விடயம்.எனவே அனைவரும் மகிழ்ச்சியுடன் காணப்பட வேண்டும் என்கிற அன்பின் அடையாளமாகக் காணப்படும் எமது சமயத்தில் இனியும் இவ்வாறான உயிர்க்கொலைகள் இடம்பெறக் கூடாது.இதனை உயிர்க் கொலைகள் செய்பவர்கள் தமது சிந்தனைக்குக் கொள்ள வேண்டுமெனவும் இச்சந்தர்ப்பத்தில் வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றார்.
யாழ்.நகர் நிருபர்-
—




