யாழ்.குப்பிளானில் பட்டப்பகலில் கொள்ளையர் குழு வீடு புகுந்து அட்டகாசம்:கோமா நிலையில் இளம் குடும்பப் பெண்மணி
யாழ்.குப்பிளான் வடக்குக் கேணியடிப் பகுதியில் நேற்று 30 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பட்டப்பகலில் வீட்டில் இளம் குடும்பப் பெண்மணி மாத்திரம் தனித்திருந்த வேளையில் கொள்ளையர்கள் அவரைத் தாக்கிவிட்டுக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,குறித்த பெண்ணின் கணவர் தனது வீட்டிலிருந்து சுமார் 200 மீற்றர் தூரத்தில் வர்த்தக நிலையமொன்று நடாத்தி வருபவர்.கணவர் வர்த்தக நிலையத்திற்கும் அவரது பிள்ளைகள் பாடசாலைக்கும் சென்ற பின்னர் பெண்மணி மாத்திரம் தனியாக வீட்டில் இருந்துள்ளார்.
குப்பிளானிலுள்ள முன்பள்ளியில் கல்வி கற்கும் தனது மகளை நாள்தோறும் அவர் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு போவதும் பின்னர் மீண்டும் பாடசாலையிலிருந்து ஏற்றி வருவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார்.முற்பகல் 11.30 மணிக்கு முன்பள்ளி முடிவடைந்த நிலையில் பல நிமிடங்களாகியும் குறித்த பெண்மணி தன் மகளை முன்பள்ளிக்கு அழைக்கச் செல்லவில்லை.இது குறித்து முன்பள்ளி ஆசிரியர் மூலம் கணவருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் கணவர் தனது மனைவியின் கையடக்கத் தொலைபேசிக்குப் பல தடவைகள் அழைப்பை ஏற்படுத்திய போதும் மனைவி அதற்குப் பதிலளிக்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்த கணவர் வீடு சென்று பார்த்த போது அவரது மனைவி வீட்டினுள்ளே படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் மயக்க நிலையில் கிடந்துள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த கணவர் அயலவர்களில் உதவியுடன் மனைவியை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
குறித்த பெண்மணி அணிந்திருந்த தாலி,ஒரு சோடி காப்பு உள்ளிட்ட நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் பெண்மணியின் தலை மற்றும் நாடியில் பெருங்காயங்களும் காணப்படுகிறது.இதேயிடத்தைச் சேர்ந்த 29 வயதான திருமதி. துளசி செந்தில்குமார் என்ற மூன்று பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு படுகாயமடைந்தவராவார்.
பெண்மணி வீட்டின் பின்புறத்தில் மரக்கறி வெட்டிய பின்னர் அதனை வீட்டினுள் எடுத்துச் சென்ற போதே மறைந்திருந்த கொள்ளையர்கள் இவரைத் தாக்கியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.வீட்டின் பின்பக்க வாசல்,கதவு மற்றும் வீட்டினுள் எனப் பல்வேறு இடங்களிலும் இரத்தக்கறைகள் காணப்படுகின்றது.வீட்டின் பின்புறமாகப் பற்றைகள் நிறைந்த ஒரு பகுதியும் காணப்படும் நிலையில் கொள்ளையர்கள் அந்தப் பகுதியால் வீட்டு வளவினுள் உட் பிரவேசித்திருக்கலாமென நம்பப்படுகிறது. பெண்மணிக்குத் தலையில் அறுவைச்சிகிச்சை மேற்கொண்ட போதும் தொடர்ந்தும் மயக்கம் தெளியாத நிலையில் கோமா நிலையில் காணப்படுவதாக வைத்தியசாலைத்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு அயலவர்களால் உடனடியாகத் தகவல் தெரிவிக்கப்பட்ட போதும் இரவு 7 மணியளவிலேயே பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.பொலிஸாரின் இவ்வாறான பொறுப்பற்ற தன்மை தொடர்பில் பிரதேச மக்கள் கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.குடிமனைகள் அதிகமுள்ள பகுதியில் பட்டப்பகலில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்.நகர் நிருபர்




