தேசியக் கட்சிகள் மூலமாகவே மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு: அங்கஜன்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வேண்டுகோளுக்கமைய எதிர்வரும் பொதுத் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரும் வடமாகாண சபை உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.
தேசியக் கட்சிகளூடாகவே மக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்பதை இலக்காகக்கொண்டே சுதந்திரக் கட்சியில் இணைந்து பணியாற்றி வருவதாக தெரிவித்தவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளைக் குழப்புவது எனது நோக்கமல்ல எனவும் குறிப்பிட்டார். யாழ்.ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,
கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பாக வடமாகாணத்தில் வேட்பாளர்கள் களமிறங்கி இருக்காத நிலையொன்று இருந்தது. இது எமது கட்சி விட்ட பெருந்தவறாகவே உள்ளது.
மாறாக எமது கட்சி தலைமையிலான கூட்டமைப்பில் முகவர் அரசியல் கட்சிகளே வடமாகாணத்தில் போட்டியிட்டிருந்தன. இதனால் எமது கட்சிக்கான பிரதிநிதித்துவங்கள் பெறமுடியாததொரு நிலை இருந்தது. முன்னதாக 2010ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டிருந்தபோதும் என்னால் வெற்றிபெற முடியாது போயிருந்தது. இருப்பினும் மக்கள் சேவைகளைத் தொடர்ச்சியாக அமைப்பாளர் என்ற அடிப்படையில் மேற்கொண்டு வந்தேன். இதன் பலனாக கடந்த வடமாகாண சபைத் தேர்தலில் நான் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தேன்.
இவ்வாறான நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் பொதுத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் களமிறங்குமாறு என்னிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதனை ஏற்றுக் கொண்டு நான் பொதுத் தேர்தலில் களமிறங்கவுள்ளேன்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது இலக்குகளை மையமாக வைத்து செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.அவர்களுக்கு எதிரான நிலைப்பாடு என்னிடமில்லை. அவர்களின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு என்றும் தயாராகவுள்ளேன். அவர்களின் செயற்பாடுகளை குழப்புவது எனது நோக்கமல்ல. ஆனால் எமது மக்களுக்கு காணப்படும் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தேசிய கட்சிகளின் ஊடாகவே முடியும். இதுவரை காலமும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பிரதிநிதி ஒருவர் இல்லாத நிலையே காணப்படுகின்றது. ஆகையால் எமது பிரதிநிதித்துவம் அக்கட்சியில் உறுதிப்படுத்தப்படவேண்டியுள்ளது.
இதன்மூலம் எமது அன்றாட பிரச்சினைகள் உட்பட இனப் பிரச்சினைக்கும் உரிய தீர்வினை எட்டுவதற்கு இலகுவான செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என்றார்.




