செய்திகள்

வட,கிழக்கில் 4 தமிழ்க் கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டி

பாராளுமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொதுச் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவிர்ந்த தமிழ்க் கட்சிகள் பரிசீலித்து வருகின்றன.

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரான நாட்களில் இருந்து டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, வீ.ஆனந்தசங்கரியின் தமிழர் விடுதலைக் கூட்டணி, பிரபா கணேசனின் ஜனநாயக மக்கள் காங்கிரஸ், உதயராசாவின் சிறிரெலோ ஆகியன இது தொடர்பாக பேச்சுகளை நடத்திவருகின்றன.

பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வருகின்ற சூழலில் கொழும்பில் நேற்றும் இவை சந்தித்துப் பேசின. பிராந்திய கூட்டு அமைத்துப் போட்டியிடுவதாயின் எந்தப் பொதுச் சின்னத்தில் போட்டியிடுவது? இக்கூட்டணியின் பொதுச் செயலாளர் யார்? என்ற இரு முக்கிய விடயங்கள் தொடர்பாகவே இணக்கத்துக்கு வர வேண்டியுள்ளது என்று உதயரசா தெரிவித்தார்.

ஆயினும் எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு முன்னர் உறுதியான முடிவுக்கு வர முடியும் எனவும் கூறினார்.