இருப்பை நிலைநாட்ட போராட வேண்டிய இனமாக உள்ளோம்: சுமந்திரன்
வாழ்வதற்குப் போராடிக் கொண்டிருக்கின்ற ஒரு இனமாக,எங்களுடை இருப்பை நிலைநிறுத்தப் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய இனமாக நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் எனத் தெரிவித்தார் முன்னாள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.
வலி.தெற்குப் பிரதேச செயலகமும் கலாசாரப் பேரவையும் இணைந்து நடாத்திய ‘கலைநிலம்’ மலர் வெளியீடும் கலைஞர் கௌரவிப்பு விழாவும் இணுவில் சிவகாமி அம்மன் திருமண மண்டபத்தில் பிரதேச செயலர் மு.நந்தகோபாலன் தலைமையில் இடம்பெற்ற போது பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆராய்ச்சியாளர்கள் நூற்றாண்டுகளுக்கு முன்னரே எந்தப் பகுதிகளில் யார் வாழ்ந்தார்கள்.அவர்கள் எவ்வாறான கலாசாரங்களைப் பின்பற்றினார்கள்.எவ்வாறான வாழ்க்கை முறைகள் காணப்பட்டன என்றெல்லாம் அகழ்வாராய்ச்சி செய்து பல உண்மைகள் வெளிக்கொணரப்பட்டுள்ளன. ஆனால்,அச்சியந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுப் புத்தகங்கள் வெளிவந்ததன் பின்னர் புத்தகசாலைகள்,நூதனசாலைகள் அமைக்கப்பட்டதன் பின்னர் அகழ்வாராய்ச்சிகள் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது.அந்தப் பதிவுகள்,சரித்திரங்கள் புத்தகங்களிலே வடிக்கப்பட்டு என்றும் நிலைத்திருக்கக் கூடிய வகையில் செய்யப்பட்டுள்ளது.புதிய தலைமுறையைச் சேர்ந்த எழுத்தாளர்கள் எமது வரலாற்றை,மொழியின் பெருமையை உணர்ந்து அதனை அடுத்த சந்ததிக்கும் எடுத்துச் செல்ல வேண்டிய பாரிய பொறுப்புள்ளது.
நாங்கள் எமது பிரதேசத்தின் கலாசாரம்,உன்னத நிலையை அடைந்த வாழ்க்கை முறை என்பன பற்றியெல்லாம் பேசுகிறோம்.எங்களுடைய மண்ணின் வரலாற்றுப் பெருமை என்ன?அது எவ்வாறு அபகரிக்கப்படுகிறது?அவ்வாறு அபகரிக்கப்படும் போது அதற்கு மாற்றீடாக அல்லது எதிராக நாம் முக்கியமாகச் செய்ய வேண்டிய கடமை என்னவெனில் அதனைப் பதிவு செய்வது ஆகும்.
எங்களுடைய நிலங்களிலிருந்து மக்கள் இடம்பெயர்ந்து செல்ல வேண்டிய கட்டாய தேவை ஏற்பட்ட போது நீதிமன்றங்களில் வழக்குகளைப் பதிவு செய்வதன் மூலம் காணிக்கான உரிமையை உறுதிப்படுத்த வேண்டுமென எனக்கு வழிகாட்டிய சிரேஷ்ட சட்டத்தரணிகள் பலர் என்னிடம் அடிக்கடி கூறுவார்கள்.சில தருணங்களில் நீதிமன்றத்திற்குச் சென்று என்ன பயன்?நீதிமன்றங்கள் மூலம் தமக்கு நீதி கிடைக்கமாட்டாது என உறுதியாகத் தெரிந்திருந்த வேளையிலும் கூட நாம் வழக்குகளைத் தொடுத்தோம்.
வலிகாமத்தைப் பொறுத்த வரையில் 2013 ஆம் ஆண்டு மற்றும் அதற்குப் பின்னரான காலப் பகுதியில் நீதிமன்றங்களால் பயனில்லை என்று தெரிந்திருந்தும் நாம் பதிவு செய்வது முக்கியமானது என்பதை உணர்ந்து செயலாற்றினோம்.அதுமட்டுமல்லாமல் இந்த விடயத்தைக் குறித்த காலப் பகுதியில் ஒருவரும் வெளிப்படுத்தாமலிருந்து விட்டார்கள் என அடுத்து வரும் தலைமுறை எம் மீது குறை சொல்லக் கூடாது என்பதற்காக நாம் பதிவுகளை மேற்கொண்டோம்.
ஆகவே,எங்களுடைய அடிப்படைக் குணாதிசயங்களை,வாழ்க்கை முறைகளை,எங்களோடு பின்னிப் பிணைந்த மொழியை,கலாசாரத்தை நாங்கள் பதிவு செய்வது அவசியமானது மட்டுமல்ல இன்றைய காலத்தின் தேவையும் கூட.அந்த வகையில் வலி.தெற்குப் பிரதேச செயலகம் கலாசாரப் பேரவையுடன் இணைந்து பிரதேசத்தின் சிறப்புக்களையும்,வரலாறுகளையும்,கலைஞர்களின் விபரங்களையும் நூலாக வெளியிட எடுத்த முயற்சி மிகவும் வாழ்த்தவும்,வரவேற்கவும் வேண்டிய விடயம் என்றும் கூறினார்.




