மக்கள் வாக்குகளால் மட்டுமே தேர்தல் வெற்றியை தீர்மானிக்க முடியும் : சுமந்திரன்
எந்தவொரு சர்வதேச நாட்டினாலும் இலங்கையின் தேர்தல் வெற்றியை தீர்மானிக்க முடியாது எனவும் மக்கள் வாக்குகளால் மாத்திரமே வெற்றியை தீர்மானிக்க முடியுமெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள்பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இதன்படி கடந்த ஜனாதிபதி தேர்தலில் இந்தியாவின் தலையீட்டினால்தான் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றதாக தெரிவிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் மக்கள் வாக்குகள் இல்லாவிட்டால் மைத்திரியால் மஹிந்தவை தோற்கடிக்க முடியாது போயிருக்குமெனவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு உரையற்றுகையில் தெரிவித்துள்ளதாவது,
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடித்து மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற மக்களின் வாக்குகளே காரணமாகும். இதனை தவிர வேறு காரணங்கள் எதுவும் கிடையாது. இந்நிலையில் இந்தியா உள்ளிட்ட வேறு நாடுகளின் தலையீட்டால்தான் மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றுள்ளார் என கூறுவதை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி ஜனாதிபதி தேர்தலில் இந்தியாவின் தலையீடு காணப்பட்டிருக்குமாயின் பொதுத் தேர்தலிலும் அந்த தலைலயீடு காணப்படுமா என கேட்கின்றேன். உண்மையில் அப்படி வெளிநாட்டு தலையீடுகாளால் தேர்தல் வெற்றியை தீர்மானிக்க முடியாது.
இதேவேளை எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் யார் வெற்றிப்பெற வேண்டும் என்பதனை மக்கள் வாக்குகளே தீர்மானிக்கும். எமக்கு தேவையான பிரதிநிதிகளை நாமே தீர்மானிக்க வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார்.




