சிவில் பாதுகாப்பு படைவீரர்கள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட தடை
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைச் சேர்ந்த எவரும் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட முடியாது என சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்திரரத்ன பல்லேகம தெரிவித்தார்.
சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் நிரந்தர அரசாங்க உத்தியோகத்தர்களாக உள்வாங்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்கள் நேரடியாக அரசியல் பிரசாரங்களிலோ அல்லது தேர்தல் நடவடிக்கைகளிலோ ஈடுபட முடியாது.
வேட்பாளர்கள் சார்பாக பிரசாரங்களுக்குச் சென்றார்கள் அல்லது போஸ்ட்டர் ஒட்டச் சென்றார்கள் என முறைப்பாடுகள் கிடைத்தால் தேர்தல் சட்டத்துக்கு அமைய அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தினகரனுக்குத் தெரிவித்தார். கடந்த காலங்களில் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு அரசியல் தேவைகள் மற்றும் தேர்தல் பிரசாரப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
எனினும், இந்த நிலைமையை முற்றாக மாற்றியிருப்பதுடன், பாதுகாப்புப் படைகள் மற்றும் சிவில் பாதுகாப்பு படையைச் சேர்ந்தவர்களுக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்திருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் கூறியிருந்தார்.
இதற்கமைய எதிர்வரும் பொதுத் தேர்தல் பிரசாரங்களில் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைச் சேர்ந்தவர்கள் எவரும் பங்குகொள்ள முடியாது என சந்திரரத்ன பல்லேகம குறிப்பிட்டார்.
தேர்தலில் வாக்களிக்கும் உரிமை சகலருக்கும் இருக்கின்றது. எனினும், அரசாங்க ஊழியர்கள் என்ற ரீதியில் தேர்தல் பிரசாரங்களிலோ அல்லது வேட்பாளர்களுக்கு சார்பாகவோ சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தைச் சேர்ந்த எவரும் ஈடுபட அனுமதி இல்லை என்றும் அவர் கூறினார்.




