உ ரிய தீர்வு தரும் வரைபோராட்டம் தொடரும்: ஆறுமுகன் தொண்டமான்
முதலாளிமார் சம்மேளனம் உரிய தீர்வு தரும் வரை தோட்ட தொழிலாளர்கள் தொடர்ந்து மெதுவான பணி செய்யும் போராட்டத்தில் ஈடுப்படுவதாகவும் நியாயமான சம்பளம் கிடைக்கும் வரை தொழிலாளர்களின் போராட்டம் தொடரும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.
08.07.2015 அன்று அட்டனில் உள்ள இ.தொ.கா கட்சி காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவர் மேலும் தெரிவிக்கையில்…..
தோட்ட தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம் நிறைவு பெற்று 1000 ரூபா நியாயமான சம்பள உயர்வு வேண்டும் என முதலாளிமார் சம்மேளனத்திதுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம். இதன்போது முதலாளிமார் சம்மேளனம் சில குறிப்புகளை கூறினார்கள். அதற்கு எங்களால் ஒத்துபோக முடியாததன் காரணத்தினால் நாங்கள் தோட்ட தொழிலாளர்களை தொடர்ச்சியாக மெதுவான பணிகளில் ஈடுப்படுமாறு அறிவித்திருந்தோம். கடந்த இரண்டு நாட்களாக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வந்த போதிலும் தோட்ட கம்பனிகள் தொழிலாளர்களின் பிள்ளைகளை சிறுவர் நிலையத்தில் ஏற்றுக்கொள்ள மறுத்ததோடு சிறுவர் நிலைய உத்தியோகஸ்தர்களையும் வேலை செய்வதை நிறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து நாங்கள் அட்டன் மல்லியப்பு சந்தியில் 07.07.2015 அன்று நற்றிரவு 12.30 மணியளவில் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுப்பட்டோம்.
நாங்கள் இவ்வாறு சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுப்படுத்ததையடுத்து 08.07.2015 அன்று காலை எங்களுக்கும் கம்பனிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப் பேச்சுவார்த்தையில் கம்பனியாளர்கள் உடனடியாக சிறுவர் நிலையத்தை திறப்பதற்கு சம்மந்தம் தெரவித்ததையடுத்து நாங்கள் சத்தியாகிரக போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளோம்.
அத்தோடு நான் ஆயிரம் ரூபா சம்பளம் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் யாருக்கும் பதிலளிக்க தேவையில்லை. எங்களது தோட்ட தொழிலாளர்களுக்கு மாத்திரமே பதிலளிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.




