த.தே.கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவும் அக முரண்பாடுகளும்
சதுர்வேதி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பொறுத்த வரையில் கடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது இம்முறை வேட்பாளர்களையும் வேட்பு மனுக்களையும் இறுதி செய்வது தொடர்பில் அது அதிக சவால்களை எதிர்நோக்கி வருவதாக அறிய முடிகின்றது. இதற்குக் பல்வேறு காரணங்களை முன்வைக்க முடியும். முதலாவது காரணம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளான தமிழரசுக் கட்சி ஈ.பி.ஆர்.எல்.எவ் ரெலோ மற்றும் புளொட் போன்றவை தமக்கு அதிக ஆசனப் பங்கீடுகளை கோரியிருந்தன. இதனால் ஆரம்பத்தில் அவர்களுக்கிடையில் ஓர் இழுபறி நிலை காணப்பட்டது. ஆயினும் கடந்த திங்கட்கிழமை வவுனியாவில் இடம்பெற்ற கூட்டத்தில் ஓர் சமூகமான முடிவு எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இரண்டாவது காரணம் 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இம்முறை அதிக எண்ணிக்கையானவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தனர். இது வேட்பாளர் தெரிவில் சில சிக்கல்களை உருவாக்கியிருந்தது. தமக்கு நெருக்கமானவர்களை தக்கவைத்துக்கொள்வதிலும் மற்றையவர்களை தட்டிக் கழிப்பதிலும் சில சிக்கல்களை இவ் அதிகரித்த விருப்பு நிலமை உருவாக்கியிருந்தது. மூன்றாவது காரணம் வேட்பாளர்களை தெரிவு செய்தல் தொடர்பில் கட்சிக்குள் காணப்படக் கூடிய அக முரண்பாடுகளான நேரடியான மற்றும் மறைமுகமான செல்வாக்கு செலுத்தல்கள் மற்றும் பிடிக்காதவர்களுக்கெதிரான கழுத்தறுப்பு நடவடிக்கைகள் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
இத்தகைய பிரதான காரணங்களால் வேட்பாளர் தொடர்பிலான உறுதிப்படுத்தப்பட்ட இறுதிப்பட்டியல் இக்கட்டுரை எழுதப்படும் வரை வெளியாகவில்லை. ஆயினும் அரசல்புரசலாக சில ஊகங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இவை வெறும் ஊகங்களே ஆயினும் அவற்றினை முழுமையாக ஒதுக்கி விட முடியாதுள்ளது.
இவ் ஊகப் பட்டியலின் அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் அப்பாத்துரை விநாயகமூர்த்தி தவிர ஏனைய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அது தவிர 2010 தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த சிலருக்கு மீண்டும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. அத்துடன் கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மனைவியும் பெண் வேட்பாளராக களமிறக்கப்பட உள்ளதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர்களுக்கான தெரிவினை உற்றுநோக்குகின்றபோது புரிவது என்னவெனில், கூட்டமைப்பினர் தமது வேட்பாளர்களை மிக நெருக்கமான வட்டத்துக்குள் இருந்தே தெரிவு செய்துள்ளார்கள். யாழ்ப்பாண சமூகத்தின் பன்முகத்தன்மையினைப் பிரதிபலிக்கக் கூடிய வகையிலோ அல்லது சமூகத்தில் மக்களோடு மக்களாக வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய சமூகத் தலைவர்களிடமிருந்தோ வேட்பாளர் தெரிவு இடம்பெற்றிருக்கவில்லை.
யாழ்ப்பாணத்தை மையப்படுத்திய தமிழ்த்தேசிய அரசியலானது யாழ்ப்பாணத்தினது மேட்டுக்குடியினராலும், கொழும்பில் உள்ள மேல்த்தட்டு நடுத்தர வர்க்கத்தினராலும் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றது என்ற குற்றச்சாட்டு பொதுவாக முன்வைக்கப்படுவதுண்டு. யாழ் மாவட்டத்துக்கான தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரின் வேட்பாளர் தெரிவின் மூலம் மீண்டும் ஒரு முறை அது நிரூபணப்படுத்தப்பட்டுள்ளது எனலாம்.
வடமாகாண சபைத் தேர்தலில் விக்னேஸ்வரனுக்கு அடுத்தபடியாக அதி கூடிய விருப்பு வாக்கினைப் பெற்ற அனந்தி சசிதரன் போரிலே பாதிக்கப்பட்ட மற்றும் காணாமல் போன ஆயிரக்கணக்கான உறவுகளின் குரலாக ஒலித்து வருபவர். தான் சார்ந்த சமூகம் தொடர்பில் அச் சமூகத்துக்குள் இருந்து ஒலிக்கின்ற ஓர் உணர்வு மிகு குரலாக அவர் எப்போதும் திகழ்ந்து வருகிறார். இவருக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்பாளராக போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அனந்திக்கான சந்தர்ப்பம் மறுக்கப்பட்டுள்ளது. கூட்டமைப்புக்குள் நிலவுகின்ற அகமுரண்பாடுகள் இதற்கு காரணமாக சொல்லப்படுகின்றது.ஆனால், சிங்கள தேசமோ தனது அகமுரண்பாடுகளை ஒதுக்கிவிட்டு மீண்டும் மகிந்தவை களமிறக்குவதினூடாக வரவிருக்கும் சர்வதேசத்தின் அழுத்தத்தை தணிப்பதற்கு முற்படுகையில் நாமோ போற்குற்றத்தின் மிக முக்கியமான சாட்சியாகவுள்ள அனந்தியை முன்னிலைப்படுத்தாது ஒதுக்குவதானது நாமே சிங்களத்தின் போர்க்குற்றத்தை மறைக்க முற்படுவதற்கு ஒப்பானதாக தென்படுகிறது. மறுபுறத்தில், அனந்தியை நிராகரித்த அதேநேரம் தமக்கு இசைவான கொழும்பின் மேற்தட்டு நடுத்தர வர்க்கத்தினைச் சேர்ந்த ஒரு பெண் வேட்பாளர் யாழ் மாவட்ட வேட்பாளராக கொண்டுவர முற்படுகின்ற தன்மையானது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகளுக்கும் அவர்களது செயற்பாடுகளுக்கும் இடையிலான முரண்பாடுகளை வெளிக்காட்டி நிற்கின்றது எனலாம்.
இதேபோல கடந்த தேர்தலில் போட்டியிட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் மீண்டும் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பத்தினை வழங்குவதைக் காட்டிலும் சமூகத்தின் மத்தியில் மக்களோடு மக்களாக வாழ்கின்ற புதிய மக்கள் தலைவர்களை இனங்கண்டு போட்டியாளர்களாக தெரிவு செய்வது பொருத்தமானதாக அமையும். ஆனால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமை அதனைச் செய்யத் தவறிவிட்டது என்ற கூறலாம்.
தேசியப் பட்டியல் உறுப்பினர்களுக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்வது தொடர்பிலும் கடந்த முறையினைப் போல இம் முறையும் கொழும்பைச் சேர்ந்த மேல்த்தட்டு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஒருவரைக் கொண்டு வருவதற்கான தகிடதித் தாளங்கள் அரங்கேறிவருவதாக அறியமுடிகின்றது. யாழ் சமூகத்துடன் இணைந்து மக்களோடு மக்களாக வாழ்ந்து வருகின்ற வரலாற்றுத்துறைப் பேராசிரியர் சிற்றம்பலம் இதற்கான விருப்பத்தினைத் தெரிவித்த போதும் கட்சியின் உயர் பீடத்தினர் எந்தப் பிடியும் கொடுக்காமல் பேசிவருவதாகத் தெரிகின்றது. யாழ்ப்பாணத்தில் கல்விச் சமூகத்தை பிரதிபலிக்கக் கூடிய இவரது வருகையும் பெரும்பாலும் தடுக்கப்படும் என்றே கருதப்படுகின்றது.




