செய்திகள்

நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயப் படுகொலையின் 20 ஆவது நினைவு தினம் நாளை அனுஸ்டிப்பு

யாழ்.நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயப் படுகொலையின் 20 ஆவது ஆண்டு நினைவு தினம் நாளை 9 ஆம் திகதி வியாழக்கிழமை தேவாலயத்தில் மாலை 4 மணி முதல் ஆலய பங்குத் தந்தை செபஸ்தியன் றோய் பேடினன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

கடந்த 1995 ஆம் ஆண்டு ஜீலை மாதம் 9 ஆம் திகதி இராணுவ முன்னேறிப்பாய்தல் நடவடிக்கையின் போது இடம்பெயர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் குறித்த தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்தனர்.இதன் போது விமானப் படையின் புக்காரா விமானம் தேவாலயம் மீது மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் 147 பேர் உடல்சிதறிப் பலியாகினர்.

பாதுகாப்புக் கருதித் தங்கியிருந்த பொதுமக்களுக்கு உதவி வழங்கிக் கொண்டிருந்த மனித நேயப் பணியாளர்களும் இத்தாக்குதலில் கொல்லப்பட்டனர்.இந்தக் கோரச் சம்பவம் வருடாவருடம் நினைவு கூரப்பட்டு வருகிறது.இதன் படி நாளை நடைபெறவுள்ள நினைவு கூரல் நிகழ்வில் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் திருவுருவப்படங்கள் தேவாலயத்தின் திறந்த வெளியில் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்படவுள்ளன.அத்துடன் நினைவுரைகளும் இடம்பெறவுள்ளன. யாழ்.நகர் நிருபர்-