செய்திகள்

தங்க நகை கொள்ளையில் ஈடுபட்ட கணவன் மனைவி கைது

வவுனியாவில் இடம்பெற்ற கல்யாண நிகழ்வுகள், கோவில் திருவிழாக்கள் மற்றும் சன நெரிசல் மிக்க இடங்களில் நகை திருட்டில் ஈடுபட்ட பெண் ஒருவரும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட அப் பெண்ணின் கணவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் குறித்து பொலிசார் மேலும் தெரிவித்ததாவது,
கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த குடும்பம் ஒன்று வவுனியா சுகாதார பணிமனைக்கு சிகிச்சைக்காக கடந்த ஜனவரி மாதம் 2 ஆம் திகதி வருகைதந்த போது பெண் குழந்தை ஒன்றின் கழுத்திலிருந்த தங்கசங்கிலி திருடப்பட்டது.
அதேபோன்று, கடந்த 5 ஆம் திகதி வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் 270,000 ரூபா பெறுமதியான தங்கநகைகள் திருடப்பட்டிருந்தன.
மேற்படி திருட்டு சம்பவங்கள் குறித்து முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சண் அபயரட்ண அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய உப பொலிஸ் பரிசோதகர் நிலாந்த தலமையில் பொலிஸ் கான்ஸ்டபிள்களான ஜெயபிரகாஸ்(36508), திசநாயக்க(37348) மற்றும் புத்திக்க (64662) உள்ளிட்ட குழுவினர் புலன்விசாரணைகளை மேற்கொண்டதுடன் திருட்டில் ஈடுபட்ட தம்பதியினரை கிளிநொச்சியில் வைத்து கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து தங்க நகைகள், பணம் என்பனவும் மீட்கப்பட்டுள்ளது.
திருட்டில் ஈடபட்டதாக சந்தேகிக்கப்படும் கணவன், மனைவி ஆகிய இருவரையும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் வவுனியா பொலிசார் தெரிவித்தனர்.