செய்திகள்
புலம்பெயர்ந்து வாழும் மக்கள் தாயகத்தையும் தாயக உறவுகளையும் நினைத்துக்கொண்டே வாழ்கின்றனர்
புலம்பெயர்ந்து அந்நிய தேசத்தில் வாழ்கின்றவர்களின் உடல் மட்டும்தான் அங்குள்ளது. அவர்களது உள்ளம் இலங்கையில் தான் உள்ளது. இந்த வலி புலம்பெயர்ந்துவாழும் தமிழர்களிடம் தொடர்ச்சியாகவுள்ளதாக சுவிஸில் வாழும் புலம்பெயர் எழுத்தாளர் கல்லாறு சதீஸ் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் எழுத்தாளர்களுடனான இலக்கியச் சந்திப்பு நிகழ்வு செங்கதிர் இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
தொல்லியல் ஆய்வாளர் செல்வி க.தங்கேஸ்வரி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள், கலைஞர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
கவிஞர் வைரமுத்துவின் நெருங்கிய நண்பரான கல்லாறு சதீஸ் மேலும் தெரிவிக்கையில்;
புலம்பெயர்ந்துவாழும் தமிழ் மக்கள் தாயகத்தையும் தாயக உறவுகளையும் நினைத்தவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தாயக மக்களின் வாழ்வு மேம்பட வேண்டும் என்பதற்காக தமது உழைப்பை இத்தேசத்திற்கு வழங்குவதற்கு தயாராகவே இருக்கின்றனர்.
கடந்த காலங்கள் கசப்பானவைகளாக இருந்தாலும் எதிர்காலம் சிறப்பாக அமையவேண்டும். தாயகத்தில் மக்கள் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காக புலம்பெயர் உறவுகள் அங்கு தியாகங்களைச் செய்து கொண்டிருக்கின்றனர்.
கலை, இலக்கியத் துறைகளில் நாட்டம் கொண்டவன் என்ற வகையில் இங்கு வாழும் கலைஞர்களின் படைப்புகளை வெளிக்கொணர்வதற்கு தயாராக இருக்கின்றேன். இங்குள்ள கலைஞர்களின் நூல்களை வெளியிடுவதில் நான் மகிழ்வடைகின்றேன். எதிர்காலத்தில் இதைச் செய்யவுள்ளேன்.
எதிர்வரும் ஜூலை மாதம் 13 ஆம் திகதி கவிஞர்கள் திருவிழாவொன்று இந்தியாவில் நடைபெறவுள்ளது. கவிஞர் வைரமுத்து தலைமையில் நடைபெறவுள்ள கவிஞர்கள் திருவிழாவில் இலங்கையிலுள்ள சிறந்த கவிஞர்கள் இருவர்கௌரவ விருதும் பரிசும் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.
இங்குள்ள சிறந்த கவிஞர்கள் தங்களது படைப்புகளையும் அவ்விருதிற்கு சமர்ப்பிக்க முடியும். கவிதைகள் மிகத் தகுதியானதாக இருக்க வேண்டும்.வடக்கிற்கு விஜயம் செய்த கவிப்பேரரசு இச்செய்தியினை தெரிவித்துவிட்டுச் சென்றுள்ளார். இதில் எனது பங்களிப்பும் நிச்சயம் இருக்கும். கவிஞர் வைரமுத்துவே தகுதியான கலைஞர்களை தேர்ந்தெடுத்து இருவருக்கு ஒரு இலட்சம் ரூபா வீதம் பரிசும் வழங்கவுள்ளார். இதற்கான முழு ஏற்பாடுகளையும் அவரே மேற்கொள்ளவுள்ளார். வடக்கு, கிழக்கிலுள்ள கவிஞர்கள் தங்கள் கவிதைகளை இதற்கு அனுப்ப முடியும்.
ஒருவார விடுமுறையிலே எனது தாய், தந்தையருடன் பொழுதினைக் கழிக்க வந்திருந்த என்னை இங்குள்ளவர்கள் அன்புத் தொல்லை கொடுத்து பல விழாக்களுக்கு அழைக்கின்றனர். அவர்களின் அன்புக்கும் வரவேற்பிற்கும் நன்றியினை தெரிவிக்கின்றேன். தாயக உறவுகளுக்கும்,கலைஞர்களுக்குமான எனது சேவையை வழங்க எப்போதும் தயாராகவுள்ளேன் என்றார்.
n10




