சுயாதீன குழுவாக அங்கீகரிக்குமாறு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் கோரிக்கை
சுயாதீன குழுவாக தம்மை அங்கீகரிக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இன்று பாராளுமன்றத்தில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதனால் பாராளுமன்றத்தில் குழப்பநிலை ஏற்பட்டது.
சபை அமர்வுகள் ஆரம்பமானது முதல் தம்மை சுயாதீன உறுப்பினர்களாக அங்கீகரிக்குமாறு ஒன்றிணைந்த எதிர்கட்சியின் உறுப்பினர்கள் சபாநாயகரிடம் தொடர்ந்தும் கோரிக்கைகளை விடுத்தனர்.
சுயாதீன உறுப்பினர்களாக அங்கீகரிப்பதுடன், தமக்கான சிறப்புரிமைகளை உரியவாறு பெற்றுக்கொடுக்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்தார்.
இதன்போது, குறுக்கிட்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க, அனைவரும் ஒரே எதிர்க்கட்சியாக செயற்படுவதே உசிதமானது என்றும், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியாக ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சுட்டிக்காட்டினார்.
ஆயினும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எதிர்க்கட்சித் தலைமைப் பொறுப்பை தாங்கள் கோரப்போவதில்லை எனவும், ஒன்றிணைந்த எதிர்கட்சியை சுயாதீன குழுவாக அங்கீகரிக்குமாறே தாங்கள் கோரிக்கை முன்வைப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இதனையடுத்து, சபையில் கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணாயக்கார, நடைமுறையிலுள்ள சம்பிரதாயங்களை மாற்றி அல்லது புதிய சம்பிரதாயங்களைக் கட்டியெழுப்பி செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் என பிரதமர் ஏற்கனவே கூறியிருப்பதாக மேற்கோள்காட்டினார்.
இதன் பிரகாரம், ஒன்றிணைந்த எதிர்க்கட்சி சுயாதீனமாக செயற்பட முடியும் என்பதே தமது நிலைப்பாடாகும் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணாயக்கார குறிப்பிட்டார்.
இந்த வாதப்பிரதிவாதங்களை செவிமடுத்த சபாநாயகர் கரு ஜயசூரிய, குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விவாதங்களின்போது உரையாற்ற நேரத்தை ஒதுக்குவது குறித்தும், கோப் உள்ளிட்ட பாராளுமன்ற தெரிவுக் குழுக்களில் அங்கத்துவத்தை வழங்குவதற்கும் நீதியான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான சாத்தியங்கள் உள்ளதாக சுட்டிக்காட்டினார்.
n10




