செய்திகள்

நல்லிணக்கம் என்ற போர்வையில் “சிறிலங்கன்” எனும் அடையாளத்தை நோக்கி

லோ. விஜயநாதன்

சிறிலங்கா தனது 68வது சுதந்திரதினத்தில் மிகத்திறமையாக நல்லிணக்கம் எனும் கானல் நீர் மூலம் சர்வதேசத்தை ஏமாற்றி திசை திருப்புவதற்கு முற்பட்டுள்ளது. இதன் ஒரு அங்கமாகவே பொதுபலசேனவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரது கைதும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் மகன் யோசித ராஜபக்ஸவின் கைதும் சுதந்திர தின நிகழ்வின் இறுதியில் தமிழில் தேசியகீதம் பாடப்பட்டமையும் அமைந்துள்ளன.

இவையாவும் சுதந்திரதினக் கொண்டாட்டத்தை அண்மித்தும், ஐ.நா.மனிதவுரிமை ஆணையாளர் சயித் அல் ஹுசைனின் சிறிலங்கா விஜயத்தை ஒட்டியும் இடம்பெற்றுள்ளன. சர்வதேசத்தின் பார்வை இலங்கைத் தீவை மையப்படுத்தியிருக்கும் இவ்வேளையில் தாம் உண்மையான நல்லிணக்தக்தை நோக்கி செயற்படுவது போன்ற தோற்றப்பாட்டை சிங்கள ஆட்சியாளர் ஏற்படுத்த விளைந்துள்ளனர்.

அதேநேரம் மறுமுனையில் யோசித ராஜபக்சவின் கைதின் மூலம் ராஜபச்சக்களையும் அவர்கள் சார்ந்த சிங்கள அடிப்படைவாசதிகளையும் உசுப்பேற்றிவிடுவதன் மூலம் ஆணையாளர் ஹுசைனின் சிறிலங்கா விஜயத்தையொட்டி ஏற்படவிருக்கும் அழுத்தங்களை மழுங்கடிக்கும் ஒரு உபாயத்தையும் கையாள்கின்றனர்.

ஆணையாளரின் விஜயத்தின் நோக்கங்களை இயன்றவரை சீர்குலைப்பதற்கும் யுத்த குற்ற விசாரணைகள், பொறுப்புக்கூறல்களில் செயற்றிறனற்று இருப்பதற்கு சிறிலங்காவின் இன ரீதியான கனதியான சூழல் இடம் தராமையே என்ற தோற்றப்பாட்டை காட்டுவதற்கும் சிங்கள ஆட்சியாளர்கள் மிகத்திறமையாக செயற்பட்டு வருகின்றனர்.

yosith and gnanasara

சிங்கள ஆட்சியாளர்கள் முற்று முழுதாக பொறுப்புக்கூறலை முடக்குவதற்கான உத்திகளையே கையாண்டு வருகின்றனர். அதனையே ஜனாதிபதி மைத்திரியின் அண்மைய உரைகள் கோடிட்டுக் காட்டுகின்றன. அதாவது, சர்வதேச நீதிபதிகள், வழக்கு தொடுநர்கள் யுத்தக்குற்ற விசாரணைப் பொறிமுறையில் உள்வாங்கப்பட மாட்டார்கள் என்றும் எந்தவொரு நிலையிலும் நாட்டையோ, படை வீரர்களையோ காட்டிக்கொடுக்கப்படமாட்டார்கள் மாட்டேன் என்றும் கூறிவருகின்றார். மறுமுனையில் பிரதமர் ரணிலோ சிறிலங்காவின் அரசியலமைப்புக்குட்பட்டே சகல பொறி முறைகளும் செயற்படுத்தப்படுமென்று கூறிவருகின்றார். இவ்வேளையில் சிறிலங்காவின் யுத்தக்குற்ற முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவை தேசிய பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக்கி அமைச்சுப்பதவி வழங்குவதன் மூலம் சிங்கள மக்களிடையே பாதுகாப்பு படை வீரர்கள் மீதான தமது விசுவாசத்தையும் அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்பதையும் வெளிப்படுத்த விளைந்துள்ளனர். அதேவேளை அவரின் அரசியல் பிரவேசம் மூலம் ராஜபக்ச விசுவாசமுடைய இராணுவத்தினரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியும் என்பதும் நல்லிணக்க மாயையை ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கு (காணிவிடுவிப்பு, சிறிய முகாம்கள் இடமாற்றம்) புலிமுத்திரை குத்தப்படாமல் தடுக்க முடியும் என்பதும் ரணிலின் எதிர்பார்ப்பு.

இவற்றை சரிவர விளங்கிக்கொள்ள முடியாத ராஜபக்ஸக்களோ அவர்கள் முன் வைக்கப்பட்டுள்ள பொறிக்குள் விழும்வகையில் புதிய கட்சியை தொடங்க முற்பட்டுள்ளனர். எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலானது தொகுதிவாரி முறையிலேயே நடைபெறவுள்ளதால் அந்தந்தத் தொகுதியில் பிரபலமானவர்களே தெரிவு செய்யப்படுவதற்கு கூடுதல் வாய்ப்புள்ளது. இந்த நிலையில் தேசியரீதியில் பிரபலமான சிலரை வைத்து அத்தேர்தலில் வெற்றியீட்ட முடியாது. இந்த நிலையில் புதிய கட்சி மூலம் போட்டியிட்டால் பீல்ட் மார்சல் சரத்பொன்சேகவுக்கு அரசியல் ரீதியில் நிகழ்ந்த முடிவே ராஜபக்சக்களுக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது.

இவை இப்படியிருக்கையில் தமிழர் தரப்போ தம்மைச் சுற்றி என்ன நடைபெறுகிறது என்று தெரியாமல் தனிநபர் ஆளுமைப் போட்டிக்குள் சிக்கிச் சுழழுகின்றது. இதன் வெளிப்பாடாக தமிழ் அமைப்புக்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் தம்மை அறியாமலேயே சிறிலங்காவின் நிகழ்ச்சி நிரலுக்கள் செயற்ப்பட்டு வருகிறார்கள்.

கடந்தவருடம் ஒக்டோபர் மாதம் ஐ.நா.மனிதவுரிமை சபையில் சிறிலங்கா பொறுப்புக் கூறலை ஏற்பதற்கு முன்னதாகவே (மகிந்த ராஜபக்ச காலத்திலிருந்து) சிறிலங்காவானது தென்னாபிரிக்காவின் பொறுப்புக்கூறலை ஒத்த (Truth and Reconciliation Commission) முறைமையொன்றை பரிசீலிக்க முனைந்து வந்தது. இதற்குக் காரணம் குற்றமிழைத்தவர்களுக்கு அப்பொறிமுறையூடாக பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமேயாகும். அதை செயற்படுத்துமுகமாகவே மனிதவுரிமை கூட்டத்தொடர் முடிந்தகையுடன் தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டம் தொடங்கப்படுவதற்கான பின்தள வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த விடயத்தை மிகப் பெரிய அரசியல் போராட்டமாக மாற்றி சாதாரண கைதிகளை போர் கைதிகள் போன்று உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் இவர்களுக்கும் இனப்படுகொலையில் ஈடுபட்ட சிங்கள இராணுவத்தினருக்கும் பொது மன்னிப்பை சமமாக வழங்க சிங்கள ஆட்சியாளர்கள் முனைந்துள்ளனர். எமது சாணக்கிய அரசியல் தலைவர்களும் சிங்களம் விரித்த வலையில் விழுந்து ஒரு மனிதாபிமான பிரச்சினையாக இப்பிரச்சினையை அணுகத் தவறியுள்ளனர்.

ranil jaffna

இதைப்போன்றே காணிவிடுவிப்பு என்பது ஏதோ வலிகாமத்தில் மட்டும்தான் செயற்படுத்தப்பட வேண்டியுள்ளது போன்றும், சிங்கள இராணுவ ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதற்காக பலாலியில் சர்வதேச விமானநிலையம் ஏற்படுத்தப்படும் என்பது போன்ற சிங்கள தலைவர்களின் கோஷங்களுக்கு எமது தலைவர்கள் தாளம் போடத் தொடங்கியுள்ளனர். இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து வலிகாமப் பகுதி விடுவிக்கப்பட்ட பின்னர் சர்வதேச விமா நிலையம் அமைக்க வேண்டும் என்று பதில் வாதத்தை இவர்கள் முன்வைக்க தவறிவிட்டனர். வன்னியில் எமது குடிசன பரம்பலை மாற்றியமைக்க முனையும் இராணுவ ஆக்கிரமிப்புக்கெதிராக மிகத் தீவிரமாக போராட வேண்டியவர்கள், இந்த ஆக்கிரமிப்பை துரிதப்படுத்த உதவப்போகும் உத்தேச தம்புள்ளை, கந்தளாய் , திருகோணமலையூடாக மணலாறு, கொக்கிளாய், முல்லைத்தீவு வரை அமைக்கப்படவிருக்கும் உத்தேச நெடுஞ்சாலையை அமைப்பதற்கு எமது சாணக்கியர்கள் எந்த கேள்வியும் இன்றி தலையாட்டியுள்ளனர்.

இதுபோலவே பொறுப்புக்கூறலின் ஒரு அங்கமான நிலைமாற்று நீதி முறைக்குரிய (Transitional Justice) பாதிக்கப்பட்ட சமூகத்திற்கான இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுத் திட்டத்தை தனியே முன்வைக்காமல் 1987ல் இனப்பிரச்சினைக்காக கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறைமையை முழுநாட்டிற்கும் செயற்படுத்தி வலிமையற்றதாக்கியது போல் இம்முறை அரசியலமைப்பு மறுசீரமைப்பினூடாக இனப்பிரச்சினை தீர்வு முக்கியத்துவத்தை வலுவற்றதாக்கி நேரடி வெளிநாட்டுத்தலையீடுகளை தவிர்ப்பது அரசாங்கத்தின் நோக்கம். இதன்மூலம், தமிழர்களுக்கான தீர்வை வழங்க முற்படுவது போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி ஏற்கனவே இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் மூலம் சிறிலங்காவின் அரசியலமைப்பிலுள்ள 13வது திருத்தச்சட்டத்தை தீர்வாக கொண்டு வருவதற்கு சிங்கள ஆளும் வர்க்கம் முனைந்துள்ளது.

இந்த நிலையில், தமிழ் மக்கள் பேரவை தனது அரசியல் தீர்வுத் திட்ட முன்மொழிவை சமர்ப்பித்துள்ளது. மிகவும் அவசரமான முறையில் தயாரிக்கப்பட்டு முன்மொழியப்பட்டுள்ள இந்த வரைபு பல விடயங்களை கவனத்தில் கொள்ள தவறியுள்ளது. வார்த்தையளவிலேயே சமஸ்டி, தேசியம் பற்றி இந்த வரைபில் கூறப்பட்டிருக்கிறது. ஆனால், செயற்பாட்டளவில் ஒற்றையாட்சி முறைகுள்ளான இந்திய மாநில அரைகுறை சுயாட்சி முறையில் இருந்து இது அதிகம் வேறுபடவில்லை.

வரலாற்று ரீதியான அடையாளம், சிந்தப்பட்ட குருதி , தமிழ் மக்கள் ஒரு இனப்படுகொலைக்கு உள்ளான சமூகம் என்பவையோ, இவை தொடர்பில் ஒரு பாதுகாப்பை எவ்வாறு அரசியலமைப்பு முறையின் மூலம் ஏற்படுத்தலாம் என்பதோ அதிகம் கவனத்தில் கொள்ளப்படவில்லை. அன்று முதல் இன்று வரையான ஜெனீவா தீர்மானம் வரை எவ்வாறு சர்வதேசத்துக்கு முன்பான வாக்குறுதிகளும் உடன்படிக்கைகளும் சிறிலங்கா அரசாங்கத்தினால் உதாசீனம் செய்யப்பட்டுள்ளன என்பவை பற்றியும் இங்கு சிந்திக்கப்பட்டிருப்பதாக தெரியவில்லை.

TPC

ஒன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அன்று எமக்கு ஆயுதபலம் இருந்தது, ஆனால் சர்வதேச பலம் இருக்கவில்லை. இன்றோ ஆயதபலமில்லை, ஆனால் சர்வதேச பலத்தை உருவாக்கும் சூழ்நிலை இருக்கிறது. இத்தகைய ஒரு நிலையில் எமது பாதுகாப்பையும் இருப்பையும் எமது தன்னாட்சி உரிமையையும் பாதுகாப்பதற்கு மிகச் சிறந்த இராஜதந்திரமே இன்று தேவையாகிறது. இதனை, முழுக்க முழுக்க புத்திஜீவிகள், துறைசார் நிபுணர்கள் கொண்ட ஒரு அமைப்பொன்றினாலேயே இதனை செயற்படுத்த முடியும். துரதிஸ்டவசமாக அப்படியான ஒரு அமைப்பு இன்றுவரை கட்டியழுப்பப்படவில்லை. தமிழ் மக்கள் பேரவை இந்த வகிபாகத்தை மேற்கொள்ள முடியுமா என்பதும் கேள்விக்குறியே.