செய்திகள்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் தெரிவித்த கருத்து தொடர்பில் தெளிவுபடுத்தவேண்டும்

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் தெரிவித்த கருத்து தொடர்பில் அவர் நாடுசென்றபின் தெளிவுபடுத்தவேண்டும் என தமிழரசுக்கட்சியின் செயலாளரும் கிழக்கு மாகாணவிவசாய அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.

 மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட கல்லடி,உப்போடை விவேகானந்தா மகளிர் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெற்றது.

 இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

 புதிய அரசிலமைப்பினை உருவாக்குவதற்கான அத்திபாரம் இடப்பட்டுள்ளது.இன்னும் அந்த பிரேரனை முழுமையாக பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவில்லை.ஆனால் முன்மொழியப்பட்டுள்ளது.எங்களது தலைவிதி எழுதப்படப்போகின்ற விடயம் மாணவர்களுக்கு தெரிந்திருக்கவேண்டும்.

 ஐ.நா.மனித ஆணைக்குழுவின் ஆணையாளர் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்தபோது அவரை சந்தித்து இலங்கை அரசாங்கமும் இணைந்து ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை முழுமையாக அமுல்படுத்தவேண்டிய அவசியத்தினை வலியுறுத்தினோம்.

 இராணுவத்தினை சுருக்கவேண்டும்,காணாமல்போனவர்கள் தொடர்பில் அரசு நடவடிக்கையெடுக்கவேண்டும்,சிறைக்கைதிகள் தொடர்பில் மும்முரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் எனவும் ஆணையாளர் கூறியுள்ளார்.

 எனினும் வடமாகாண முதலமைச்சரை ஐ.நா.மனித ஆணைக்குழுவின் ஆணையாளர் சந்தித்தபோது வெளியிட்ட கருத்து வேதனையளிப்பதாகவுள்ளது.சிறைக்கைதிகள் விசாரணையின் பின்தான் விடுதலைசெய்யப்படவேண்டும் என்பதே சர்வதேசத்தின் கருத்து என ஆணையாளர் கூறியுள்ளார்.சாதாரண சட்டத்தின் கீழ் அரசியல் கைதிகள் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்தால் அவரது கூற்றினை ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளமுடியும்.

 ஆனால் எங்களது அரசியல் கைதிகள் காட்டுமிராண்டித்தனமான சட்டம் என்று சொல்லப்படுகின்ற பயங்கரவாத தடைச்சட்டத்தின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டவர்கள்.அந்த பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் என ஐ.நா.வில் முன்மொழியப்பட்டுள்ளது.

எந்த சட்டம் நீக்கப்படவேண்டும் என ஐ.நா.மனித உரிமைகள் ஆணையம் தீர்மானம் எடுத்திருக்கின்றதோ அந்த சட்டத்தினால் கைதுசெய்யப்பட்டவர்களை சட்டத்தின் பிரகாரம் விசாரணைசெய்தே விடுவிக்கவேண்டும் என ஆணையாளர் கூறியிருந்தால் அவரின் கருத்து மயக்க நிலையில் உள்ளது.அதனை அவர் நாடு திரும்பிய பின்னாவது தெளிவுபடுத்தவேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாகும்.

 தற்போது இந்நாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் விடயங்கள் ஏறச்சொன்னால் எருதுக்கு கோபம்,இறங்கச்சொன்னால் முடவனுக்கு கோபம் என்னும் பழமொழி நிலையில் உள்ளது.

 ஒற்றையாட்சி என்றால் தமிழர்களுக்கு கோபம் வருகின்றது.சமஸ்டியென்றால் சிங்களவர்களுக்கு கோபம் வருகின்றது.

இந்த இரண்டு நிலைகளுக்கு மத்தியில் மிகவும் பக்குவமாகவும் நிதானமாகவும் விடயங்களை கையாண்டு வரையப்படும் அரசியல்சாசனத்தில் எங்களது உரிமைகளை மிக உறுதியாக எழுதிக்கொள்ளவேண்டும்.அதற்காக எல்லோரும் செயற்படவேண்டும்.

n10