செய்திகள்

வெல்லாம்பிட்டி முக்கொலை: விசாரணைகளை முன்னெடுக்க மூன்று பொலிஸ் குழுக்கள்

கொழும்பின் புறநகர்ப்பகுதியான, வெல்லம்பிட்டி 20 வீட்டுத்திட்டப் பகுதியில் மூவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்கு மூன்று பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர். T56 ரக துப்பாக்கியுடன் நேற்று நள்ளிரவு முச்சக்கர வண்டியில் வந்த சிலர் வெல்லம்பிட்டி – கித்தம்பகுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நுழைந்துள்ளனர்.

இதன்போது, அவர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் சாலித நிபுண என்ற 24 வயதான இளைஞர் உயிரிழந்துள்ளார். குறித்த வீட்டில் இருந்து சிறியளவிலான கஞ்சா மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சாலிய நிபுணைவைக் கொலை செய்த பின்னர் ஆயுமதமேந்திய குழுவினர் அங்கிருந்து 200 மீற்றர் தொலைவில் உள்ள 20 வீட்டுத் திட்டப்பகுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு 19 வயதான தரிந்து தில்ஷான் சேனாரத்ன என்ற இளைஞரின் வீட்டிற்கு அவர்கள் சென்றுள்ளனர்.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், தரிந்து தில்ஷான் உயிரிழந்துள்ளதுடன், அவர் திருமண பந்தத்தில் இணைந்து இரண்டு மாதங்களே கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தரிந்துவின் வீட்டில் ஏற்பட்ட குழப்ப நிலைமையை அடுத்து, அயல் வீட்டில் இருந்த அவரது மனைவியின் தந்தையான 49 வயதான மொஹமட் ரிஸ்வி மீதும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதுடன் அவரும் அவ்விடத்தில் உயிரிழந்துள்ளார்.

000கொலையாளிகளை அடையாளம் காட்டுவார் என்ற அச்சத்தில் மொஹமட் ரிஸ்வி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். பாதாள உலக நடவடிக்கைகள் அல்லது போதைப்பொருள் கடத்தல் இந்தக் கொலைகளுக்குக் காரணமாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர்.

உறவினர்களிடம் பெற்றுக்கொண்டுள்ள வாக்குமூலங்களின் படி ”சுட்டு” என்றவர் இவர்களைக் கொலை செய்வதற்கு வந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

சிறிது காலத்திற்கு முன்னர் இவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலொன்று காரணமாக குறித்த இளைஞர்களுக்கு பழிவாங்குவதாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்ததாக உறவினர்கள் பொலிஸாரிடம் கூறியுள்ளனர்.
R-06