மனித உரிமை மீறல் விசாரணையை மட்டும் நடத்தும்படி ஐ.நா, ஸ்ரீலங்காவிற்கு ஆலோசனை….!
ஸ்ரீலங்காவில் இடம்பெற்றவை எனக் கூறப்படுகின்ற போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை செய்யாமல், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மட்டும் விசாரணை செய்யும்படி ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அல் ஹுசைன் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஸ்ரீலங்காவிற்கு அண்மையில் விஜயம் செய்த அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருடன் நடத்திய சந்திப்புகளின்போதே இந்த ஆலோசனையை வழங்கியிருப்பதாக சிங்களப் பத்திரிகை ஒன்று இன்று சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
அத்துடன் தமிழ் மக்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகள், அரசியல்தீர்வு விடயம் குறித்தும் ஜனாதிபதி, பிரதமர் இருவருடன் நடத்திய கல்நதுரையாடலில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கவனம் செலுத்தியதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை போர்க் குற்றம் தொடர்பான நீதிமன்றப் பொறிமுறையோ அல்லது கலப்புநீதிமன்றமோ உள்ளக விசாரணையில் இடம்பெறாது என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்கு நாட்டில் தற்போது காணப்படுகின்ற சட்டதிட்டங்களே போதுமானவை என்றும் அவர் கூறியுள்ளார்..
N5




