முன்னாள் போராளிகளுக்கான உதவித் தொகையை அதிகரிக்க வேண்டும்: பிரதமருடனான சந்திப்பில் விக்னேஸ்வரன் கோரிக்கை
வடபகுதியில் போரால் பாதிக்கப்பட்டு அங்கவீனமடைந்துள்ள முன்னாள் போராளிகளுக்காக அரசாங்கம் வழங்கும் உதவித் தொகை இரு மடங்காக அதிகரிக்கப்பட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரில் கோரிக்கை விடுத்துள்ளார்.
வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு இன்று திங்கட்கிழமை மாலை அலரி மாளிகையில் இடம்பெற்ற போதே இது தொடர்பில் பிரதமரின் கவனத்துக்கு முதலமைச்சர் கொண்டுவந்தார். இன்று மாலை 5.30 முதலமைச்சர் 7.00 மணிவரையில் நடைபெற்றது.
முதலமைச்சருடன் வடமாகாண அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன், குருகுலராஜா ஆகியோரும், வடமாகாண பிரதம செயலாளர் பத்திநாதன் மற்றும் வடமாகாணத்தின் ஐந்து மாவட்ட அரசாங்க அதிபர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டார்கள். பிரதமருடன் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், முன்னாள் திறைசேரியின் செயலாளர் எஸ்.பாஸ்கரலிங்கம், வடமாகாண புதிய ஆளுநர் ரெஜினோல்ட் குரே, முன்னாள் ஆளுநர் பாளிகார ஆகியோரும் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.
வடமாகாண அபிவிருத்தி தொடர்பில் ஆராய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்தச் சந்திப்பில், வடமாகாண அபிவிருத்திக்கு உதவுவதற்கும், வடமாகாணத்தில் முதலீடு செய்வதற்கும் ஜப்பான் உட்பட வெளிநாடுகள் பல முன்வந்திருப்பதாக பிரதமர் தெரியப்படுத்தினார். அதேவேளையில் வடமாகாண அபிவிருத்தி மற்றும், மீள்கட்டுமாணப் பணிகளுக்குத் தேவையான திட்டங்கள் குறித்த அறிக்கை ஒன்றையும் பிரதமரிடம் வடமாகாண முதலமைச்சர் கையளித்தார்.
முன்னாள் போராளிகள், குறிப்பாக அங்கவீனமடைந்துள்ள முன்னாள் போராளிகள் எதிர்கொண்டுள்ள பொருளாதாரப் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமருக்கு விளக்கிக்கூறிய முதலமைச்சர், அவர்களுக்கு அரசாங்கத்தினால் தற்போது மாதாந்தம் வழங்கப்படும் மூவாயிரம் ரூபா உதவித் தொகை போதுமானதல்ல அந்த உதவித் தொகை இரு மடங்காக அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
R-06




