செய்திகள்

நெற்செய்கையில் கைகொடுத்த இயற்கை: காலை வாரிய அரசு!

-கே.வாசு-

விவசாயிகள் வாழ்வோடு அவ்வப்போது விளையாடிய காலநிலை இந்த முறை கால போக நெற் செய்கைக்கு கொஞ்சம் விடிவைக் கொடுத்தது. மீள்குடியேறிய மக்களின் மனதில் ஒரு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. ஆனாலும் தற்போது அவ்வப் போது மழை பெய்வதால் அறுவடை செய்யும் நிலையில் உள்ள நெல் வயல்கள் பாதிப்படைந்து வருகின்றன. இயற்கையோடு போராடி நெல் அறுவடையை மேற்கொள்கிறார்கள் விவசாயிகள். தமது வாழ்க்கைப் போராட்டத்தில் வெட்டிய நெல்லை விற்றாவது சாதித்து விட வேண்டும் என்ற பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் விவசாயிகளின் வாழ்க்கை போகிறது.

இந்த நிலை வடக்கின் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு என பரவலாக எல்லா இடங்களிலும் காணப்படுகின்றது. அறுவடை இயந்திரத்தின் மூலம் அறுவடை செய்யும் விவசாயிகள் ஏக்கர் ஒன்றுக்கு 6,500 ரூபாய் முதல் 7,500 ரூபாய் வரை பணத்தை கூலியாக செலுத்துகின்றனர். மீள்குடியேறிய பல குடும்பங்களுக்கு வீட்டுத் திட்டம் வழங்கப்படாமையால் வெட்டிய நெல்லை காய வைத்து மூடையாக கட்டுவதற்கும் அவர்கள் படும்பாடு பெரும் போராட்டம் தான்.

20150831_102953மீள்குடியேறி தற்போது வசித்து வரும் தற்காலிக கொட்டகைகளில் நெல்லை காய வைக்க முடியாமையால் பலர் இன்று பிரதான காபெற் வீதிகளில் நெல்லினை பரவி காயவைத்து விட்டு கட்டுகின்றார்கள். இவ்வாறு பல போராட்டங்களுக்கு மத்தியில் பெற்ற விறைச்சலைக் கூட உரிய விலைக்கு விற்க முடியாது விவசாயிகள் படும்பாடு ஏராளமானது.

இந்த நிலையிலும், வெட்டிய நெல்லை நியாயமான விலைக்கு விற்பனை செய்ய முடியவில்லை என்கிறார்கள் விவசாயிகள். அரசாங்கம் நெல்லுக்கு நியாயமான விலையை அறிவித்துள்ளது. ஆனால் தனியார் துறையினர் மக்களிடம் குறைந்த விலையில் நெல்லை கொள்வனவு செய்து வருகின்றனர்.

அரசாங்கம் சொன்ன விலைப்படி ஒரு மூடை நெல்லை 2,300 – 3,000 ரூபாய்க்கு மேல் விற்க முடியும். ஆனால் அந்த விலைக்கு நெல்லை கொள்வனவு செய்வதற்குரிய வேலையை அரசாங்கம் சீராக செய்யவில்லை. இதனால் தனியாரிடமே மக்கள் விற்கவேண்டியுள்ளது.

20150831_102730அவர்களும் 1700 – 2300 ரூபாய் என்ற பெறுமதியிலேயே நெல்லைக் கட்டுகிறார்கள். அதுவும் பச்சை நெல் எனக் கூறி நிறையில் பல வெட்டுக் கொத்துக்கள் நடைபெறுகிறது.

நெல்லுக்கான உத்தரவாத விலையை புதிய அரசு அறிவித்த போதும் அந்த விலைக்கு கொள்வனவு செய்யக் கூடிய வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் கூட மக்களிடம் இருந்து நெல்லை கொள்வனவு செய்யவில்லை. அதனால் மக்கள் தமது அறுவடைப் பணம், தமது வாழ்க்கைச் செலவு என்பவற்றுக்காகவும் வெட்டிய நெல்லை வீட்டில் வைக்க இடம் இல்லாமையாலும் தனியார் துறைக்கே கொடுத்து வருகின்றனர். அவர்களும் ஒரு மூடை என கூடுதலான நிறையில் நெல்லைப் பெறுவதுடன் குறைந்த பெறுமதியையே கொடுக்கின்றனர். இதனால் பாதிக்கப்படுவது விவசாயிகளே.

images (29)வவுனியாவைப் பொறுத்தவரை நெல் களஞ்சியசாலை, நெல் காயவைக்கும் தளம் என்பன அடங்கிய பூங்கா வீதியில் அமைந்துள்ள பிரதான கட்டிடத் தொகுதி விசேட அதிரடிப் படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனை விடுவிக்குமாறு கடந்த வருட முற்பகுதியில் இருந்து மாவட்ட அரச அதிபரால் இராணுவத்திற்கு கோரிக்கை விடப்பட்ட போதும் இன்று வரை விடுவிக்கப்படவில்லை. அதனால் நெல்லை களஞ்சியப்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது. இதன்காரணமாக நெல்லினை கொள்வனவு செய்வதில் இடர்பாடுகள் எதிர்நோக்கப்படுகிறது.

விலையை யார் வேண்டுமானலும் அறிவிக்கலாம். ஆனால் அதனை நடைமுறைப்படுத்துவதே பொறுப்பு வாய்ந்த அரசின் கடமை. இயற்கையோடு போராடி அறுவடை செய்த நெல்லை நியாயமான விலையில் விற்பனை செய்து, விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்ற இந்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த விவசாயிகளின் எதிர்பார்ப்பு.

N5