செய்திகள்
சரத் பொன்சேகாவை நாடாளுமன்ற உறுப்பினராக அமர்த்தியிருப்பது போரில் பாதிக்கப்பட்டவர்களை அவமதிக்கும் செயல்
சிறிலங்கா அரசாங்கம் தனது நாடாளுமன்றத்துக்கு ஃபீல்டு மார்சல் சரத் பொன்சேகாவை தேசியப் பட்டியல் உறுப்பினராக அமர்த்தியிருப்பது பெரிதும் கவலை தருகின்ற விடயம் என The Sri Lanka Monitoring and Accountability Panel (“MAP”) எனப்படும் இலங்கைக்கான அவதானிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் குழு தெரிவித்துள்ளது.
இது விவகாரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2009ம் ஆண்டு இலங்கைத்தீவின் இறுதி யுத்த வேளையில் இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா, போர்க் குற்றங்கள் மற்றும் மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் புரிந்த சிறிலங்கா இராணுவத்தினரது செயலுக்கு பொறுப்பாளியாகவும் கருதப்படுகின்றார்.
சிறிலங்காவில் அடுத்தடுத்து வந்துள்ள ஆட்சியாளர்கள் இந்தக் குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யத் தவறி விட்டனர். இப்போதைய ஆட்சியாளர்கள் இவ்வாறு புலனாய்வு செய்ய உறுதி கொண்டிருப்பதாகக் காட்டிக் கொண்ட போதிலும், பொன்சேகாவை நாடாளுமன்ற உறுப்பினாராக அமர்த்தியிருப்பது அது முன்னெடுக்கும் எந்த ஒரு செயல்வழியின் நடுநிலைத தன்மை மீதும் சந்தேகக் கருநிழல் படரச் செய்கிறது.
2009 மே சம்பவங்கள் குறித்து முறையாகவும் நடுநிலை தவறாமலும் ஓர் புலனாய்வு செய்யப்படுமானால், சரத் பொன்சேகா அவர்கள் செய்தவற்றையும், செய்யாது விட்டவற்றையும் ஆராயாமலிருக்க வாய்ப்பில்லை.
அவர் நாடாளுமன்ற உறுப்பினராக நியமனம் பெற்றிருப்பது, அவரின் கீழ் இயங்கிய படையினர் புரிந்ததாகச் சொல்லப்படும் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களை அச்சத்தில் உறைய வைக்கும்படியிலான , குறிப்புணர்த்தும் செய்தியாக உள்ளது.
ஐநா மனித உரிமை உயர் ஆணையர் சிறிலங்காவுக்கு பயணம் செய்திருந்த வேளை, இவ்வாறு சரத் பொன்சேகா பதவியமர்த்தம் செய்யப்பட்டுள்ளமை, போரினால் பாதிப்புற்றவர்களை மட்டுமல்லாமல், ஐக்கிய நாடுகளையும் அனைத்துலக சமூகத்தினையும் அவமதிக்கும் செயலாக அமைகின்றது என இலங்கைக்கான அவதானிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் குழு தெரிவித்துள்ளது.
n10




