செய்திகள்

23 ஆம் திகதி வரை அரசுக்கு அரசியல் கைதிகள் கால அவகாசம்: அதன் பின் உண்ணாவிரதம்

மகஸின் சிறையிலுள்ள வழக்கு தொடரப்படாதுள்ள அரசியல் கைதிகள் தமக்கு நீதியான பதிலொன்றை அளிக்குமாறு கோரி எதிர்வரும்  23 ஆம் திகதி வரை அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கியுள்ளனர்.

தமக்கு நீதியான பதில் கிடைக்காது விடின் எதிர்வரும்  23 ஆம் திகதி நள்ளிரவு முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக எச்சரித்துள்ளனர். அரசியல் கைதிகளின் நிலைமை குறித்து கண்டறியும் முகமாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பினர் நேற்று சனிக்கிழமை முற்பகல்  11 மணிக்கு மகஸின் சிறைக்கு சென்றிருந்தனர்.

இதன்போதே அரசியல் கைதிகள் இவ்வாறு தெரிவித்ததாக அந்த அமைப்பின் அழைப்பாளர் வண.மா. சக்திவேல் தெரிவித்தார். தங்கள் மீது வழக்குத் தொடரப்படாது கிட்டத்தட்ட 5 வருட காலமாக நீதவான் நீதிமன்றத்துக்கு அலைந்து வருகின்றோம். எதிர்வரும்  23 ஆம் திகதி பாராளுமன்றம் கூடுகின்ற நிலையில் அரசியல் கைதிகள் குறித்து விவாதித்து எமக்கு நல்லதொரு பதில்  தரவேண்டுமென அரசியல் கைதிகள் எம்மிடம் கூறினர்.

எம்மீது வழக்கு தொடரப்படாது தடுத்து வைத்திருப்பது  சட்டத்துக்கு புறம்பானது, அநீதியானது, உரிமை மீறும் செயல். சட்டமா அதிபர் திணைக்களமே எந்த வழக்கையும் தாக்கல் செய்யாது இழுத்தடித்து வருகின்றது. இதனை இனவாத செயலாக பார்க்கின்றோம்.

எனவே, எதிர்வரும்  23 ஆம் திகதி எமது விடுதலை தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதித்து முடிவொன்றை அரசாங்கம் எடுக்க வேண்டும். இல்லையேல் எதிர்வரும்  23 ஆம் திகதி நள்ளிரவு முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை நாம் முன்னெடுக்கவுள்ளோம்.

முதல் கட்டமாக மகஸினிலுள்ள வழக்கு தொடரப்படாதுள்ள  15 பேர் போராட்டத்தினை மேற்கொள்ளவுள்ளனர். பதில் ஏதும் இல்லையெனில் இரண்டாம் கட்டமாக ஏனைய அரசியல் கைதிகள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அரசியல் கைதிகள் குறிப்பிட்டதாக வண. மா. சக்திவேல் தெரிவித்தார்.
R-06