சிறந்த ஜனநாயகத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு ரவி கருணாநாயக்க விடுக்கும் வேண்டுகோள்………..
சிறந்த ஜனநாயகம் இலங்கையினுள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் அனைவரிடமும் தான் வேண்டுகோள் விடுப்பது இலங்கைக்கு வந்து முதலீடுகளை மேற்கொள்ளுமாறு என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியுள்ளார்.
ஐரோப்பாவிற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட இலங்கைப் பிரதிநிதிகள் குழுவினர் நேற்று ஆஸ்த்திரிய நாட்டு வர்த்தக சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முதலீட்டு மாநாட்டில் கலந்து கொண்டிருந்தனர்.
இலங்கை ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில் பெரும்பாலான வர்த்தக பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது அங்கு உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வருமாறு திறந்த அழைப்பு விடுத்தார்.
ஜனாதிபதியின் உரையைத் தொடர்ந்து தனது உரையை ஆரம்பித்த நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இலங்கையில் புதிய அத்தியாயம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், எவ்வித தயக்கமும் இன்றி இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள முன் வருமாறு கூறினார்.
கடந்த தேர்தலின் பின்னர் இலங்கையில் சுத்தமான பொருளாதாரத்துடனான மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளதாகவும், உலக நாடுகளில் குறைந்த வரி விகிதமுடைய நாடாக இலங்கை காணப்படுவதாகவும் ரவி கருணாநாயக்க கூறினார்.
இலங்கை தற்சமயம் இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் கூறினார்.
இலங்கைக்கு தேவை கடனற்ற கொடுக்கல் வாங்கல் முறையே என்று அவர் கூறியிருந்தார்.
நேற்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பிறந்த தினம் என்பதுடன், தனது பிறந்த நாளுக்கு வழங்கும் மிகப் பெரிய பரிசு இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதே என்றும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இதன்போது குறிப்பிட்டிருந்தார்.
இலங்கை அரச தலைவர் ஒருவர் 60 ஆண்டுகளின் பின்னர் ஆஸ்த்திரியாவிற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருப்பதுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட இலங்கைப் பிரதிநிதிகள் குழுவினருக்கு அங்கு பெரும் வரவேற்பு வழங்கப்பட்டிருந்தது.
N5




