சுதந்திரக் கட்சியுடன் இணக்கத்தை ஏற்படுத்த முயற்சி: அரசியலமைப்பு பேரவை மீது இன்று முழுநாள் விவாதம்
புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்காக பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றுவது தொடர்பான விவாதம் நேற்று ஆரம்பமானபோதும், சுதந்திரக் கட்சியுடன் இணக்கப்பாடு ஏற்படுத்துவதற்காக இப்பிரேரணை மீதான வாக்கெடுப்பு பின்போடப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணை சுதந்திரக் கட்சியின் திருத்தங்களை உள்ளடக்கியதாக பாராளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட போதும், வாக்கெடுப்பு இன்று நடத்தப்படாது என அரசாங்கம் பாராளுமன்றத்தில் அறிவித்தது.
சுதந்திரக் கட்சியின் திருத்தங்கள் குறித்து அடுத்தவாரம் நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் இணக்கப்பாடு எட்டிய பின்னர் இது தொடர்பான வாக்கெடுப்பை நடத்தவிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க சபையில் கூறினார். லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவின் அனுமதியைப் பெறுவதற்காகவே இந்த வாக்கெடுப்பு பிற்போடப்பட்டிருப்பதாக சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
அதேநேரம், சபை முதல்வர் அமைச்சர் கிரியல்லவினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட திருத்தங்களில் தேசிய பிரச்சினைக்கு அரசியலமைப்பு ரீதியான தீர்வொன்றை வழங்கக் கூடிய தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்தி சட்டவிதியை மதிக்கும் அரசியல் கலாசாரமொன்றை தாபிக்கக் கூடிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவது அடங்கலான முகவுரையில் உள்ள மூன்று பந்திகள் அகற்றப்பட்டுள்ளன.
பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றுவது தொடர்பான பிரேரணை நாளை விவாதத்துக்கு எடுக்கவே முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று முற்பகல் சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அமைய, நேற்றும், இன்றும் இது தொடர்பான விவாதத்தை நடத்த முடிவெடுக்கப்பட்டது. வாக்கெடுப்பு நடத்தாமல் விவாதத்தை மாத்திரம் நடத்துவது குறித்து ஜே.வி.பி கேள்வியெழுப்பியது.ஐ.தே.கவுக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையில் உடன்பாடு இல்லாத நிலையிலேயே இதனை அவசரமாக விவாதத்துக்கு எடுப்பதாகவும் ஜே.வி.பி குற்றஞ்சாட்டியது.
இவ்விவாதத்தின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சகல தரப்பினரதும் கருத்துக்களை முன்வைக்க சந்தர்ப்பம் வழங்கப்படும். சுதந்திரக் கட்சி தமது தரப்பு யோசனைகளை முன்வைத்திருந்தது. சபாநாயகருக்கும் சில யோசனைகள் கிடைத்திருந்தன. இறுதி பிரேரணை தொடர்பில் அமைச்சரவையிலேயே முடிவு செய்யப்படும். இரு நாள் விவாதம் நடத்தப்படுகின்றபோதும் இப்பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்படாது. சுதந்திரக் கட்சியின் யோசனைகள் கிடைத்த பின்னர் அடுத் அமைச்சரவையில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.
திருத்தங்களை முன்வைத்து உரையாற்றிய சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியல்ல, ஏற்கனவே சமர்ப்பித்திருந்த பிரேரணையில் உள்ள இலங்கைக்கு புதிய அரசியலமைப்பு ஒன்றை வகுத்தல் என்ற வசனத்தில் உள்ள புதிய என்ற பதத்தை அகற்றவும், முகவுரையில் உள்ள முதல்மூன்று பந்திகளை நீக்கவும் பிரேரிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படாவிட்டால் குறித்த அரசியலமைப்பு சபையும் அதனை முன்வைக்கும் பாராளுமன்ற குழுவும் கலைந்ததாகக் கருதப்படும்.
பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணை அரசியலமைப்பு சபையில் சாதாரண பெரும்பான்மையுடன் மாத்திரம் நிறைவேற்றப்பட்டால் ஒரு மாத காலத்தினுள் இப்பிரேரணை மீண்டும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற புதிய பிரிவொன்றும் திருத்தப் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரேரணை அரசியலமைப்பு சபையில் மூன்றில் இரண்டும் பெரும்பான்மையுடன் ஆரம்பத்திலேயே நிறைவேற்றப்படுமாயின் அதனை நேரடியாக அமைச்சரவையின் அனுமதிக்கு சமர்ப்பிக்கவும் புதிய திருத்தத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையின் அனுமதி கிடைத்த பின்னர் உத்தேச அரசியலமைப்பு திருத்த நகல் சட்டமூலம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனும், சர்வஜன வாக்கெடுப்புடனும் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த விவாதம் இன்று காலை 9.30 முதல் மாலை 6.30 மணிவரை நடத்தப்படவிருப்பதுடன் இறுதி வாக்கெடுப்பு அடுத்த பாராளுமன்ற அமர்வில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
R-06




