செய்திகள்

காமெடி படம் இயக்குவது சீரியஸான வேலை!- இயக்குநர் எழில் பேட்டி

‘‘இந்தக் காலகட்டத்துல படங்கள் பண்றதே பெரிய சவால். தியேட்டர்ல பாட்டு வந்தா, ஒரு கூட்டம் தபதபனு வெளியே ஓடுது. டயலாக்  வந்தா, ஆடியன்ஸே திருப்பி பன்ச் அடிச்சு காலி பண்றாங்க. முன்னாடி எல்லாம் ஒரு ரசிகனா இருந்து படங்கள் பண்ணினேன். எனக்கு  என்னவெல்லாம் பிடிக்குமோ, அதையே ஆடியன்ஸும் ரசிச்சாங்க.
இப்போ எங்களுக்கு ஒண்ணு பிடிக்குது. ஆனா, ஆடியன்ஸுக்கு வேற  ஒண்ணு பிடிக்குது. எங்களுக்குப் பிடிச்சதை சொன்னா ஆடியன்ஸ் தியேட்டருக்கே வர மாட்டேன்றாங்க!’’ – மனசில் இருந்து பேசுகிறார்  இயக்குநர் எழில். ‘வெள்ளக்கார துரை’க்கு அடுத்து அவர் இயக்கும் படம் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’.


‘‘டைட்டிலே ஒரு தினுசா இருக்கே?’’

‘‘நன்றி. அதுதான் வேணும். ‘மனம்கொத்திப் பறவை’, ‘தேசிங்குராஜா’, ‘வெள்ளக்கார துரை’னு இதுக்கு முன்னாடி நான் பண்ணின  படங்களோட டைட்டிலைப் போலவே ஒரு வித்தியாசமான டைட்டில் வேணும்னு எல்லாரும் விரும்பினாங்க. அப்படி அமைஞ்சதுதான்  ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’. விஷ்ணு விஷால் ஹீரோ. நிக்கி கல்ரானி ஹீரோயின். சூரி, ரோபோ சங்கர், ரவிமரியா,  சுவாமிநாதன், மொட்டை ராஜேந்திரன்னு பெரிய கேங் இருக்கு.

என்னோட டயலாக் ரைட்டர் ஜோதி சொன்ன கதை இது. இதுக்கு முன்னாடி நான் இயக்கின படங்கள்ல, நூல் பிடிச்ச மாதிரி இருக்கும்  கதை. ஆனா, இந்தப் படத்துல கதை 3 ட்ராக்கா அமைஞ்சிருக்கு. எனக்கே புதுசா தெரிஞ்ச சப்ஜெக்ட். இதுல மினிஸ்டரோட   பொண்டாட்டிக்கு ஜாக்கெட் தைச்சுக் குடுத்தே எம்.எல்.ஏ. ஆகிடுவார் ரோபோ சங்கர். அதனால அவர் பேரே  ‘ஜாக்கெட் ஜானகிராமன்’.  இந்தப் படத்துக்கு அப்புறம் சூரியோட பேரே ‘புஷ்பா’னு மாறிடும். அப்படி ஒரு கேரக்டர். பொதுவா என் படங்கள்ல சூரி காமெடி  பின்னியெடுக்கும். இதில் இன்னும் சூப்பரா ரீச் ஆவார் பாருங்க!’’

‘‘ஹீரோ விஷ்ணு விஷால்தான் தயாரிப்பாளருமா?’’

‘‘ஆமாம். முதல்ல வேற ஒரு தயாரிப்பாளர் ஃபிக்ஸ் ஆகியிருந்தார். ஹீரோவா மட்டும் கதையைக் கேட்ட விஷ்ணு, ‘சூப்பரான சப்ஜெக்ட்.  ஆனா இந்த புரொடியூசரைப் பார்த்தா, படத்தை ஆரம்பிச்சிட்டு பாதியிலயே விட்டுட்டுப் போறவர் மாதிரி தோணுது. எதுக்கும் கொஞ்சம்  கவனமா இருங்க’ன்னார். எனக்கு அதிர்ச்சியாகிடுச்சு. அப்புறம் பார்த்தா, விஷ்ணு சொன்ன மாதிரியேதான் நடந்துச்சு. ‘நல்ல கதையா இருக்கு.  நானே தயாரிக்கறேன்’னு அவரே முன்வந்தார். ‘ஒரு ஹீரோவே தயாரிப்பாளரா மாறினா, ஷூட்டிங்ல என்னென்ன பிரச்னைகள் வருமோ’னு  ஆரம்பத்துல பயந்தேன். ஆனா, ரொம்பவே எளிமையான மனிதரா இருக்கார் விஷ்ணு விஷால். அவர் இந்தப் படத்தை தயாரிச்சதும்,  படத்துக்கு எதிர்பார்ப்பு வந்து ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோவே படத்தை வாங்கிட்டாங்க. சந்தோஷமா இருக்கு!’’

‘‘நிக்கி கல்ரானி?’’

‘‘ரொம்ப அறிவாளிப் பொண்ணு. ஏழெட்டு மொழிகள் சரளமா பேசுறாங்க. மேக்கப் போட்டுட்டு ஸ்பாட்டுக்கு வந்துட்டா செட்லதான்  இருப்பாங்க. படத்துல நிக்கி, போலீஸ் வேலைக்கு ட்ரை பண்றாங்க. ஸோ, ஒரு சீன்ல அவங்க ஓடுகளைக் கையாலே உடைக்கணும்.  அதுக்கு டம்மி ஓடுகள் ரெடி பண்ணிட்டோம். ஆனா, அது டம்மினு தெரியாம ஃபுல் ஃபோர்ஸா உடைக்க… நிக்கி கையில அடிபட்டிடுச்சு.  அந்தளவு சின்சியர்!’’

‘‘வழக்கமா உங்க படங்களுக்கு இமான்தானே இசை..?’’

‘‘ஆமாம். ஆனா, இந்தப் படத்துக்கு ‘எங்கேயும் எப்போதும்’ சத்யா. இமானை விட்டு வெளியே வர்றோமேனு கொஞ்சம் பயமும் வந்துச்சு.  படத்தோட வெற்றிக்கு பாடல்களும் ஒரு காரணம்னு நம்புற ஆளு நான். ஆனா, என்னோட பயத்தை சத்யா போக்கியிருக்கார். பாடல்கள்  ரொம்ப நல்லா வந்திருக்கு. ‘ரேணிகுண்டா’ படத்தோட ஒளிப்பதிவாளர் சக்தியை இந்தப் படத்துக்கு ஃபிக்ஸ் பண்ணும்போது, ‘நாப்பது  நாளுக்குள்ள படத்தை முடிச்சிடணும் சக்தி’னு கேட்டுக்கிட்டேன். படம் இவ்ளோ சீக்கிரம் ரெடியாக அவரும் ஒரு காரணம். ஸ்கிரிப்ட்  வொர்க்குகளை அரவிந்த், ஜோதி, செல்லானு 3 பேர் கவனிச்சிருக்காங்க!’’

‘‘தொடர்ந்து காமெடியை கையில எடுக்குறீங்களே?’’

‘‘காமெடி படம் பண்ற மாதிரி சீரியஸான வேலை வேற எதுவும் கிடையாது சார்.

ஸ்கிரிப்ட் ரைட்டர்ஸ் கூட உக்கார்ந்து டயலாக்ஸ்  யோசிக்கும்போது, மெனக்கெட வேண்டியிருக்கும்.

சொன்ன ஜோக்குக்கு மக்கள் சிரிக்கலைன்னா டென்ஷனா இருக்கும். ‘எழில் படம்னா  குடும்பத்தோட பார்க்கலாம்’னு ஒரு பேரை சம்பாதிச்சு வச்சிருக்கேன்.

காமெடிங்கற பேர்ல அதை நான் விட்டுக்கொடுக்க முடியாது. ஒரு  ஜோக்கை ரெண்டாவது தடவை சொன்னா கூட ‘மொக்கை போடாதே’னு சொல்லிடுற காலம் இது.

ஆனா, ஒரு காமெடி சீனை நூறு தடவை  ரிப்பீட் பண்ணினாலும், முதல் தடவை சிரிச்ச மாதிரியே அந்த ஸ்மைல் இயல்பா வரணும்.

அப்போதான் நல்ல காமெடி. ஒரு  ஜட்ஜ்மென்ட்லதான் காமெடியை கையில எடுத்துப் பண்ண முடியும். ‘துள்ளாத மனமும் துள்ளும்’ மாதிரியான படங்கள்னா, அதோட வெற்றி  என் கையிலதான் இருக்குனு என்னால தைரியமா சொல்ல முடியும்.

ஆனா, காமெடியில திரைக்கதை பலமா இருந்தா மட்டுமே சக்சஸ்  சாத்தியம்!’’

‘‘உங்க ஹீரோக்கள் விஜய், அஜித் கூட டச்ல இருக்கீங்களா?’’

‘‘விஜய்யை விழாக்கள்ல பார்ப்பேன்.

அஜித்தைப் பார்த்து அஞ்சு வருஷம் ஆச்சு. பெரிய ஹீரோக்களுக்கும் கதை பண்ணி வச்சிருக்கேன்.

காமெடி படங்கள்ல இப்ப எனக்கு நல்ல பேர் கிடைச்சிருக்கு. பெரிய ஹீரோக்களுக்கான காமெடி படம்னு ஒண்ணு யோசிச்சா அதில் நான்  இருப்பேன்னு நினைக்கிறேன்!’’

 

N5