வவுனியா மாணவி ஹரிஸ்ணவி கொலை: அயல்வீட்டவரான குடும்பஸ்த்தர் கைது
வவுனியா – உக்குளாங்குளம் பகுதியில் 13 வயது மாணவி கங்காதரன் ஹரிஸ்ணவி வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 10 ஆம் திகதி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மாணவி கங்காதரன் ஹரிஸ்ணவியின் சடலம் மீட்கப்பட்டிருந்தது. இவர் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டு, சடலம் தூக்கில் தொங்கவிடப்பட்டிருந்தமை பிரேதப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வவுனியா பொலிஸார் முன்னெடுத்து வந்த விசாரணையின் போது கிடைத்த தகவலுக்கு அமைய சிறுமியின் அயல் வீட்டில் வசித்துவந்த 35 வயதான ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
சந்தேகநபரை மரபணுப் பரிசோதனைக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விசாரணைகளை அடுத்து சந்தேகநபர் நாளை (26) வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
இதேவேளை, மாணவி ஹரிஷ்ணவியின் கொலையைக் கண்டித்தும் சந்தேகநபரைக் கைது செய்யுமாறும் வலியுறுத்தி இன்றும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட இந்த கவனயீர்ப்புப் போராட்டத்தில், மாதர் சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட சிலர் கலந்துகொண்டிருந்தனர்.
சிறுவர் துஷ்பிரயோகங்களைத் தடுக்குமாறு இந்தப் போராட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டதுடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தினி ஸ்ரீஸ்கந்தராஜாவும் இதில் பங்கேற்றிருந்தார். கவனயீர்ப்புப் போராட்டத்தின் நிறைவில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரனிடம் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டது.
R-06




