செய்திகள்

9 வருடங்களில் 1,800 மில்லியன் ரூபாவை பெற்ற தொண்டமான் மன்றம் செய்தது என்ன?

தொண்டமான் மன்றத்திற்கு கடந்த 9 வருடங்களில் 1,800 மில்லியன் ரூபா நிதி அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதன் செயற்பாடுகள் தொடர்பில் பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்ற குழுவில் ஆராயப்பட வேண்டுமென்று எதிர்க்கட்சி பிரதம கொறடாவும் ஜே.வி.பி.யின் கொழும்பு மாவட்ட எம்.பி.யுமான அநுரகுமார திசாநாயக்க  தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று  நடைபெற்ற, தோட்டப்பகுதி மக்களின் வாழ்க்கை நிலைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர்  இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
“தொண்டமான் மன்றத்துக்கு அரசாங்கத்தினால் வருடமொன்றுக்கு 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 9 வருடங்களில் அந்த மன்றத்திற்கு அரசினால் 1,800 மில்லியன் ரூபா  வழங்கப்பட்டுள்ளது. அது அரச அதிகாரசபையா என்று தெரியவில்லை. இதை கோப் குழுவிற்குக் கொண்டுவர வேண்டும்.
அது மட்டுமல்லாது, இந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்ட பெண் ஒருவருக்கு அங்கு மூன்றரை இலட்சம் ரூபா சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. அந்த மன்றத்தில் பணியாற்றிய 300 பேரும் கூட கட்சியின் பணியாளர்களாகவே இருந்தனர்’ என்றும் அநுரகுமார திசாநாயக்க இதன்போது தொரிவித்தார்.
அத்துடன், தோட்டப்பகுதி மக்களின் இன்றைய கஷ்ட நிலைக்கு கடந்த கால மலையக அரசியல் தலைமைகளைக் குற்றஞ்சாட்டிய ஜே.வி.பி. தலைவர், மக்கள் கஷ்டப்பட அரசியல் தலைமைகள் சுகபோகம் அனுபவித்திருந்ததாகவும் குறிப்பிட்டார்.
n10