வடமாகாண சபையில் நடந்தது என்ன?
வடமாகாண சபையின் 46 ஆம் அமர்வில் விவசாய அமைச்சருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் சட்டத்திற்கும், நடைமுறைகளுக்கும் மாறான அமைச்சர் மீது சேறுபூசும் செயற்பாடாகுமென முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறிய கருத்தினால் ஆளுங்கட்சியினரிடையில் கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
மகிந்த ராஜபக்ஷ முயற்சி செய்து தோல்வியடைந்த மாகாண சபை ஆளுங்கட்சியை சிதைக்கும் முயற்சி இப்போது வெற்றியடைந்திருக்கின்றதா? ஆளுங்கட்சியின் பிளவு வேதனையளிக்கின்றது. ஒற்றுமையாக இருங்கள். சீதை குளித்தால் என்ன, இராமன் பார்த்தால் என்ன, கம்பன் எழுதினால் என்ன என அவைத்தலைவர் கூறியதையடுத்து நிறைவுக்கு வந்துள்ளது.
வடமாகாண சபையின் 46 ஆம் அமர்வு நேற்று இடம்பெற்றது. அமர்வின் தொடக்கத்திலேயே முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சபையில் கருத்து தெரிவிக்க விரும்புவதாக அவை தலைவருக்கு அறிவித்து பேசினார். இதன்போது 45 ஆம் அமர்வில் விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் மீது 11 குற்றச்சாட்டுக்களை சுமத்தியமை சட்டத்திற்கு மாறானது என்பதுடன் நடைமுறைகளுக்கு முரணானவை என தமக்கு 8 உறுப்பினர்கள் கையொப்பமிட்டு கடிதம் எழுதியுள்ளதாகக் கூறினார். அன்றைய தினம் விவசாய அமைச்சருக்கு எதிரான பிரேரணை அவையின் ஒழுங்கு பத்திரத்தில் குறிப்பிடப்படாமல் சபைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டமை, பிரேரணை என குறிப்பிடாமல் சிறப்புரிமை, பொது முக்கியத்துவம்வாய்ந்த என்றவாறான விதப்புரைகளுடன் எடுத்துக் கொள்ளப்பட்டு இறுதி நேரத்தில் பிரேரணையாக நிறைவேற்றப்பட்டமை, மேலும் பொதுமுக்கியத்துவம்வாய்ந்த பிரச்சினை, சிறப்புரிமை பிரச்சினை என்ற பெயரில் குறித்த விடயம் மாகாண சபை உறுப்பினர் ஜீ.ரி.லிங்கநாதனால் எடுத்துக் கொள்ளப்பட்டபோதும் அந்த விட யத்தில் அவ்வாறான விடயங்கள் எவையும் இல்லாமை,

உறுப்பினர்களுக்கும், சம்பந்தப்பட்ட அமைச்சருக்கும் முன்னதாகவே விடயம் அறிவிக்கப்பட்டிருக்காமை, மேற்படி விடயம் பேசப்படும்போது பேசுவதற்கு எழுந்த உறுப்பினர்களுக்கு அவகாசம் வழங்காமல் அவைத்தலைவர் பக்கச்சார்பாக நடந்து கொண்டமை போன்ற விடயங்களினால் இந்த பிரேரணையானது திட்டமிட்டு அமைச்சர் மீது சேறுபூசும் ஒரு செயற்பாடாகும் என முதலமைச்சர் சபையில் சுட்டிக்காட்டினார். இவ்வாறு சபையின் கௌரவத்தை பாதிக்கும் செயற்பாடுகள் எதிர்காலத்தில் இடம்பெறாது பாதுகாக்கவேண்டும் என தம்மை கேட்டுக் கொண்டதற்கிணங்க 45 ஆம் அமர்வில் இந்த விடயம் தொடர்பாக பேசப்பட்ட விடயங்கள் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படவேண்டும் எனவும் அமைச்சர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் வெறும் சாட்டுதல்களெனவும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியதுடன் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஜனநாயக முறைப்படியும் இயற்கை நீதியின் படியும் பதில் சொல்ல வழங்கப்படவேண்டிய சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. என வே இந்தப் பிரேரணை பிழையான முறையில் கொண்டுவரப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து சபையில் பேசிய மாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன், தனது மகன் யோஷித்தவை காப்பாற்ற மகிந்த மீண்டும் சட்டத்தரணியாக மாறியதைப்போன்று விவசாய அமைச்சரை பாதுகாக்க முதலமைச்சர் மீண்டும் சட்டத்தரணியானாரா? என கேள்வி எழுப்பினார். முதலமைச்சர் கடந்த அமர்வில் இடம்பெற்றதாக கூறும் விடயங்களுக்கும் அன்றைய தினம் நடைபெற்ற விடயங்களுக்கும் வேறுபாடுகள் காணப்படுகின்றன. எனவே இதில் கடந்த சபையில் இடம்பெற்ற விடயங்களை மீள நினைவுபடுத்தவேண்டும் எனக்கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து பேசிய மாகாண சபை உறுப்பினர் க.சர்வேஷ்வரன் ;
கடந்த அமர்வில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் முதலமைச்சர் பதிலளிக்கவேண்டும் என கேட்கப்பட்டிருக்கின்றது. இங்கே முதலமைச்சர் பதிலளித்திருக்கின்றார். இதில் யோஷித்த, மகிந்த என்ற கீழ்த் தரமான உவமானங்கள் தேவையற்றவை என சுட்டிக்காட்டியதுடன், அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது வேறு விடயம் ஆனால் அந்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்ட விதம் மிகப் பிழையான விடயம் என சுட்டிக்காட்டியதுடன் சயந் தன் பேசிய யோஷித, மகிந்த போன்ற கருத்துக்கள் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படவேண்டும் என க்கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து பேசிய மாகாண சபை உறுப்பினர் ஜீ.ரி.லிங்கநாதன்,
முதலமைச்சர் நான் பிரேரணை கொண்டுவந்த முறை பிழையானது என குறிப்பிட்டிருக்கின்றார். ஆனா ல் பிரேரணை கொண்டுவரப்படும்போது முதலமைச்சரும் சபையில் இருந்தார். இது என்னுடைய பிரச்சினை அல்ல. முதலமைச்சர் எங்களுடைய குற்றச்சாட்டுக்களை விசாரிக்க வேண்டும். அதில் என்மீது பிழைகள் இருந்தால் நான் பதவி விலகிக் கொள்கிறேன், அரசியலில் இருந்தும் விலகிக் கொள்கிறேன் என குறிப்பிட்டார்.
மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் பேசுகையில் ;
கடந்த அமர்வில் கொண்டுவரப்பட்ட பிரேரணை ஒழுங்கு பத்திரத்தில் குறிப்பிடப்படாமல் சபையில் எடுத்துக் கொள்ளப்பட்டதென்றால் இன்றைய தினம் முதலமைச்சர் இந்த விடயத்தை எவ்வாறு சபையில் எடுத்துக் கொண்டார். இரணைமடு நீர்ப் பிரச்சினை, சுன்னாகம் நீர்ப் பிரச்சினை, கார்த்திகைமாத மரநடுகை பிரச்சினை பொதுமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் இல்லையா? மேலும் அன்றைய தீர்மானம் சபையில் கோரம் உள்ளபோதே நிறைவேற்றப்பட்டது என்பதுடன் அந்தக் குற்றச்சாட்டுக்கள் தனிப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அல்ல. அதிகாரபூர்வமாக தகவல்கள் கிடைக்கப் பெற்றதன் பின்னர் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களாகும். இதனை நாங்கள் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு முன்னிலையில் வைத்திருந்தால் அதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். ஆனால் முதலமைச்சரை நம்பி முன்வைத்தோம். அதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினார்.
மாகாண சபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை பேசுகையில் ;
கடந்த அமர்வில் நான் 3 தடவைகளுக்கு மேல் பேசுவதற்கு எழுந்தேன். ஆனால் அவைத் தலைவர் என்னை கண்டுகொள்ளவில்லை. மேலும் எதிர்க்கட்சி தலைவர் சகல அமைச்சர்களிடமும் எவ்வாறு பண்பாடாகவும், அமைதியாகவும் கேள்விகளை கேட்கிறார். அதை விடுத்து இலங்கையில் எந்தவொரு மாகாண சபையிலும் இப்படி ஆளுங்கட்சிக்குள் ஒருவருக்கு எதிராக ஒருவர் பிரேரணை நிறைவேற்றிய சம்பவம் இடம்பெற்றிருக்காது. பல தடவைகள் பேச எழுந்தபோது என்னை அவைத் தலைவர் கண்டுகொள்ளவேயில்லை. இந்த நிலையில் ஒரு சில உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் கண்ணை காட்டிக் கொண்டிருந்ததையும் அன்றைய தினம் நான் பார்த்தேன். அவை தலைவர் ஒவ்வொரு உறுப்பினர்களுடைய பெயர்களையும் குறிப்பிட்டு எழுந்திருக்க சொல்லி பேச விடுகின்றார். எனவே அவைத் தலைவருடன் முதலில் பேசிவிட்டு வந்தால் எல்லாம் சரியாகும் போல் இருக்கின்றது. அன்றைய தினம் எதிர்க்கட்சி உறுப்பினர் தவராசா கூறிய கருத்துக்கள் உண்மையில் அருமையான கருத்துக்கள் என குறிப்பிட்டார்.
மாகாண சபை உறுப்பினர் ஜீ.ரி.லிங்கநாதன் மீண்டும் பேசுகையில் ;
இந்த விடயம் தொடர்பாக முதலமைச்சர் ஒரு மாதகாலத்திற்குள் விசாரித்து முடிவினை அறிவிக்கவே ண்டும். இல்லையென்றால் இந்த முறைப்பாட்டை நாம்
இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைப்போம் என குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய பிரதி அவைத்தலைவர் ம.அன்டனி ஜெயநாதன்,
மக்கள் கேட்கிறார்கள். என்னையா நடக்குது உங்கே என. ஆளுங்கட்சிக்குள் ஒருவரை ஒருவர் வெட்டி யாடவேண்டும் என்ற பாங்கை பார்க்க முடிகின்றது. இந்த விடயங்கள் தொடர்பாக நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கும் அங்கத்துவ கட்சிகளின் தலைமைக்கும் கடிதங்களை அனுப்பிவைத்திருக்கின்றேன் என சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து மீண்டும் பேசிய முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ;
என்னுடைய கருத்துக்கள் 8 உறுப்பினர்கள் தொடர்பானது. முக்கியமான விடயம் என பேச்சை தொடங்கி கடைசி நேரத்தில் நடைமுறை பிறழ்வாக சில சம்பவங்கள் இடம்பெற்றமையினால் அவைக்குறிப்பிலிருந்து அவற்றை நீக்குமாறு கேட்டிருந்தேன். மேலும் 45 ஆம் அமர்வில் இந்த விடயம் இடம்பெற்றதன் மறுநாள் நான் முழங்காவில் பகுதியில் பேசிய விடயமானது,
இங்கு நடைபெற்ற சம்பவத்தின் எதிரொலியாகும். எந்த காரணத்தையும் சுட்டாமல் வெறுமனே சேறுபூசும் வகையில் செயற்பட்டமையின் எதிரொலியாகும். மேலும் கடந்த அமர்வில் பேசப்பட்ட அல்லது மு ன்வைக்கப்பட்ட தகவல்கள் அடிப்படையில் நான் அமைச்சர் ஐங்கரநேசனிடம் இருந்து தகவல்களைப் பெற்றிருக்கின்றேன். இதேவேளை தங்களிடம் தகவல்கள் இருக்கின்றன என கூறும் உறுப்பினர்கள் அவற்றை என்னிடம் வழங்கினால் அது தொடர்பாக நான் விசாரிப்பேன் என்றார்.
தொடர்ந்து பேசிய விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ;
உண்மை நிரூபிக்கப்படுவதற்கு முன்னர் பொய் பாரிய பாதிப்புக்களை உண்டாக்கிவிடு. 4 கோடி அல்ல 400 ரூபா ஊழல் இடம்பெற்றிருந்தாலும் அதனை நிரூபிக்கட்டும். அரசியல் ரீதியாக சேறுபூசம் நடவடிக்கைகள் வேண்டாம். மேலும் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அல்ல எந்த விசாரணைக்குழுவின் விசாரணைகளையும் எதிர்கொள்வதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். நாம் 4 கோடிக்கல்ல எத்தனை கோடிக்கும் சோரம்போகப்போவதில்லை என்றார்.
இவ்வாறு ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கிடையில் நேற்றைய அமர்விலும் ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கருத்துக்களால் மோதிக் கொண்டனர். இந்த மோதல் சுமார் 2 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற நிலையில், இறுதியாக அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கருத்து தெரிவிக்கையில் ;
நாம் நேற்று அமெரிக்க துணை தூதுவரை சந்தித்தபோது கூட்டமைப்பிற்குள் குழப்பம் நிலவுகின்றதா? என கேள்வி எழுப்பினார். அதற்கு நான் பதிலளிக்கும்போது அவ்வாறான நிலை இல்லை என்றேன். உறுப்பினர் ஜீ.ரி.லிங்கநாதன் தனது பிரதேசம் சார்ந்த சில பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயத்தை பேசவுள்ளதாக தெரிவித்ததையடுத்தே நான் பேச இடமளித்தேன்.
அதற்குப் பின்னர் நீங்களே விவாதித்தீர்கள். இந்த நிலையில் எல்லா குற்றச்சாட்டுக்களையும் என்மீது சுமத்துவது அபத்தமானது. நான் என்னுடைய மனைவியின் சுகயீனம் காரணமாக 9 ஆம் திகதி வரையில் வேறு விடயங்கள் எதிலும் கவனம் செலுத்தவில்லை. இந்த நிலையில் என்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் அபத்தமானவை. மனம் நொந்த நிலையில் குறிப்பிடுகின்றேன் என்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் பிழையானவை. மேலும் அந்த இடத்தில் அமைச்சர் என்ற சொல்லை நீக்குமாறு நான் கேட்டேன். அதற்கு மேல் முதலமைச்சருக்கு எழுதிய இந்த பிரேரணை தொடர்பான கடிதத்தில் அமைச்சர் மீது குற்றம் என நான் குறிப்பிடவில்லை. மாறாக அமைச்சரின் செயற்பாடு என்றும், அதனை விசாரிக்கவேண்டும் எனக்கேட்காமல் கோரிக்கை என்றும் குறிப்பிட்டேன்.
இந்நிலையில் மகிந்த ராஜபக்ஷ மாகாண சபை ஆளுங்கட்சியை பிளவுபடுத்த முயன்று தோற்றுப்போன விடயம் இன்றைக்கு நடக்கின்றதா? என எண்ணத்தோன்றுகின்றது. வேதனையளிக்கின்றது. எதிர்காலத்தில் இவ்வாறு இருக்க முடியாது. இந்தப் பிரச்சினை இன்றோடு முடிக்கப்படுகின்றது. இது குறித்து இனிமேல் சபையில் பேசுவதற்கு அனுமதிக்க முடியாது. முதலமைச்சர் விசாரித்தால் விசாரிக்கட்டும், விசாரிக்காவிட்டால் இருக்கட்டும். நான் என்ன சொல்கிறேன் என முதலமைச்சருக்கு தெரியும் என கூறினார்.
இதனையடுத்து ஆளுங்கட்சிக்குள் சுமார் 2 மணிநேரம் நீடித்த வாய்த்தர்க்கம் முடிவுக்கு வந்து வழக்கமான சபை ஒழுங்குகளுக்குள் சபை சென்றது.




