செய்திகள்

இன்றுவரை தமிழ் மக்களின் நம்பிக்கையை எந்தவொரு சிங்களத் தலைவரும் பெறவில்லை

இன்றுவரை தமிழ் மக்களின் நம்பிக்கையை எந்தவொரு சிங்களத் தலைவரும் பெறவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்  சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

முழு பாராளுமன்றத்தையும் அரசியல் நிர்ணய சபையாக மாற்றும் தீர்மானத்தின்மீதான விவாதம் தற்பொழுது இலங்கை பாராளுமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.இந்நிலையில் நேற்று  நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:
தமிழ் மக்கள் இப்போது தம்மை அரசியல் அனாதைகளாகவே உணர்கிறார்கள். அவர்கள் சிங்களத் தலைவர்களால் ஏமாற்றப்பட்ட வரலாற்றில் இருந்து விடுபடக்கூடியதற்கான ஏதுநிலை எதுவும் இல்லை.
அவர்கள் உள்நாட்டு ரீதியாகவும், வெளிநாட்டு ரீதியாகவும் கைவிடப்பட்ட ஓர் அரசியல் நிர்க்கதியிலேயே உள்ளனர். அவர்கள் யாரையும் நம்பும் நிலையில் இல்லை. எந்தொரு சிங்களத் தலைவரையும் நம்ப தமிழ் மக்கள் ஒருபோதும் தயாராக இல்லை. ஏனெனில் சிங்களத் தலைவர்களில் பல்லினங்களையும் அரவணைத்து வழிநடத்தும் அரசசிற்பிகள் என்று எந்தவொரு சிங்களத் தலைவரும் இருந்தது கிடையாது.
சிங்களத் தலைவர்களின் சந்தர்ப்பவாத அரவணைப்பு எல்லாம் உண்மையில் அணைத்துக் கெடுக்கும் கொள்கையை அடிப்படையாகக் கொண்டவை. தமிழ் மக்கள் முன் இன ஐக்கியத்திற்காக இலட்சியவான்காளாக தோன்றிய இடதுசாரித் தலைவர்கள்கூட 1966ஆம் ஆணடு மே தின ஊர்வலத்தின் போது ‘தோசே மசாலாவடே அப்பிட்ட எப்பா’ என்று தமிழனத்தை இழிவு படுத்தும் வகையிலான கோஷங்களை எழுப்பியதன் மூலம் அவர்கள் தங்களைத் தாங்களே அம்பலப்படுத்தினர்.
‘மொழி ஒன்று எனில் நாடு இரண்டு, மொழிகள் இரண்டு எனில் நாடு ஒன்று’ என்ற சூத்திரத்தைக் கூறிய காலநிதி கொல்வின் ஆர்.டி. சில்வா தமிழினத்திற்கு எதிரான அரசியல் யாப்பை 1972ஆம் ஆண்டு வடிவமைத்தார். யாரைத்தான் தமிழ் மக்கள் நம்ப முடியும்? தமிழ் மக்கள் நம்பக்கூடிய தலைவர் என்று சிங்கள மக்கள் மத்தியில் இதுவரை ஒருவர்கூட கிடையாது.
ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தில் மூத்த அமைச்சாரக இருந்த காமினி திசநாயக்க யாழ் பொது நூலகத்தை எரித்து சாம்பலாக்கிய வரலாற்றை பார்க்கும் எந்தொரு தமிழ் மகனும் எந்தவொரு சிங்களத் தலைவரையும் நம்பமாட்டான்.
இப்போது புதிய அரசியல் யாப்புப் பற்றி பேசப்படும் எந்தவொரு சிங்களத் தலைவரின் உத்தரவாதத்தையும் நம்பும் நிலையில் தமிழ் மக்கள் இல்லை. தம்மை நிருபிப்பதற்கு சிங்களத் தலைவர்கள் வெகுதூரம் பயணிக்க வேண்டும்.
குறிப்பாக நல்லாட்சி அரசாங்கம் கொடுத்த எந்தவொரு உத்தரவாதத்தையும் கடந்த ஓராண்டில் இந்த அரசாங்கம் நிறைவேற்றாத நிலையில் வேதனையும், வெறுப்பும், சிங்களத் தலைவர்கள் மீதான அவநம்பிக்கையும் தமிழ் மக்கள் நெஞ்சங்களில் மலையென எழுந்துள்ளது.
1971ஆம் ஆண்டு கிளர்ச்சியில் ஈடுபட்ட சிங்கள இளைஞர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கியது போல தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு
காணாமல் போனோர் அடையாளம் கண்டு விடுதலை செய்யப்படுவர்.

சர்வதேச போர்க்குற்ற விசாரணை – அரசியல் தீர்வு
போன்ற விடயங்கள் தமிழ் மக்களுக்கு நேரடியாவோ அல்லது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வாயிலாகவோ தேர்தல் கால உத்தரவாதங்களாக தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டிருந்தன. மேற்கூறப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளுக்கு நேர் எதிர்மாறாக நடந்துள்ள இன்றைய நிலையில் புதிய அரசியல் யாப்பு பற்றிய விடயத்தில் நம்பிக்கை கொள்ள இடமில்லை.
1972ஆம் ஆண்டு முதலாவது குடியரசு அரசியல் யாப்பை பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் தந்தை செல்வா யாழ் நகரில் நாவலர் மண்டபத்தில் அதே 1972ஆம் ஆண்டு தீயிட்டுக் கொளுத்தினார்.
அதன் பின்னான 1978ஆம் ஆண்டு இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பையும் தமிழர் விடுதலைக் கூட்டணி நிராகரித்திருந்தது. அந்த இரண்டு யாப்புக்களையும் உருவாக்கியவர்கள் இப்போது ஒன்றுசேர்ந்து மூன்றாவது குடியரசு அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்கப் போவதாக கூறுகிறார்கள். அந்த இரண்டு யாப்புக்களை உருவாக்கிய தலைவர்களின் தொடர்ச்சியும், அதன் வழிவந்தவர்களும்தான் இப்போது மூன்றாவது குடியரசு அரசியல் யாப்பை உருவாக்கப் போகிறார்கள்.
இதில் தர்க்கபூர்வமாகவும், அனுபவ ரீதியாகவும் நம்பிக்கைக் கொள்ள எமக்கு இடம் எதுவும் இல்லை.
இன்று மூன்றாம் குடியரசு அரசியல் யாப்பின் மூலம் இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணப் போவதாக தெளிவற்ற வார்த்தைகளால் பலவாறாக பதவியில் இருக்கும் சிங்களத் தலைவர்கள் பேசுகின்றீர்கள். ஆனால் தீர்வு பற்றி எந்தவிதமாக தி;ட்டவட்டமான அறிவித்தல்களையும் நீங்கள் முன்வைக்கவில்லை.
1995ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் தேதி வெளியான சன்டே லீடர் பத்திரிகைக்கு முன்னாள் ஜனாதிபதியாக இருந்த ஜே.ஆர். ஜெயவர்த்தனா அளித்த நேர்காணலின் போது கேட்கப்பட்ட கேள்வியையும் பதிலையும் இங்கு நோக்குவோம்.
வினா: இன்றைய நிலையில் வடக்கு-கிழக்கு பிரச்சனைக்கான சிறந்த தீர்வு எது என நீங்கள் கருதுகிறீர்கள்?
பதில்: சமஷ்டி முறைமை.
இதே போல 1926ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் எஸ்.டபுள்யூ. பண்டாரநாயக்க உரையாற்றுகையில் ‘ஏதோ ஒருவகையிலான சமஷ்டிமுறைதான் ஓரே தீர்வாக அமையும்’ என்று குறிப்பிட்டார். அவர் மேலும் பேசுகையில் ஆயிரத்துதொரு எதிர்ப்புக்கள் இத்தகைய சமஷ்டித் தீர்வுக்கு எதிராக கிளம்பினாலும் இறுதியில் அவை படிப்படியாக மறைந்து ஒரு சமஷ்டித் தீர்வுக்கு வரவேண்டியது தவிர்க்க முடியாது என்று குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறு மேற்படி இருபெரும் சிங்களக் கட்சிகளினதும் தலைவர்களாக இருந்து நாட்டில் பிரதமராகவும், ஜனாதிபதியாகவும் பதவிவகித்த மேற்படி இரு தலைவர்களினதும் கூற்று இப்படி இருந்த போதிலும் நடைமுறையில் அவர்கள் இதற்கு எதிராகவே செயற்பட்டனர்.
ஒரு கட்சியை இன்னொரு கட்சி காரணம் காட்டி தமிழ் மக்களுக்கான தீர்வை மறுப்பது ஒரு வழக்கமாகவும், தந்திரமாகவும் இருப்பதையே இலங்கையின் நடைமுறை அரசியல் வரலாறு எமக்கு காட்டுகிறது.
1970ஆம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் திருமதி. ஸ்ரீமாவோ பண்டார நாயக்க ஆட்சி அமைத்திருந்த போது எதிர்கட்சியில் தங்கியிருக்காத அறுதிப் பெரும்பான்மை பலம் இருந்த போதிலும் அவர் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு அரசியல் யாப்பில் தீர்வை உருவாக்காமல் மேலும் பிரச்சனைகளையே உருவாக்கினார். அத்துடன் சோல்பரி யாப்பில் காணப்பட்ட சிறுபான்மை இனங்களுக்கான பாதுகாப்பு என்று கூறப்பட்ட 29ஆவது சரத்தையும் புதிய யாப்பில் சேர்க்காது நீக்கிக் கொண்டார்.
அத்துடன் அரசியல் யாப்பில் மறுக்கப்படாதிருந்த ஒன்றுகூடும் உரிமையை நடைமுறையில் மீறி தமிழ் மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடிக் கொண்டிருந்த நான்காவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை கொலைக்களமாக மாற்றினார். இது தமிழ் மக்களை ஒடுக்க வேண்டும் என்ற சிங்களத் தலைவர்களின் இயல்பான மன ஆசையின் வெளிப்பாடே தவிர இதில் எதிர்க்கட்சியைக் காரணம் கூற இடம் இருந்திருக்கவில்லை.
அதேவேளை 1977ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையில் நான்கில் மூன்று பங்கு பெரும்பான்மை பலத்துடன் பதவிக்கு வந்திருந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்திற்கு பலமான எத்pர்க்கட்சி; இல்லாத நிலையிலும் தமிழ் மக்களின் பிரச்சனையை அவர்கள் தீர்க்க விரும்பவில்லை. மாறாக அன்று உருவாக்கப்பட்ட இரண்டாவது குடியரசு அரசியல் யாப்பின் கீழ் தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டதால் தமிழர் விடுதலைக் கூட்டணி அந்த யாப்பை நிராகரித்திருந்தது.
நான்கில் மூன்று பங்கு பெரும்பான்மை பலத்துடன் ஐதேக பதவியில் இருந்த அந்தக் காலத்தில்தான் 1983ஆம் ஆண்டு கறுப்பு யூலை இனப்படுகொலை அரங்கேற்றப்பட்டது. இலங்கையின் நீதித்துறை ஒருபோதும் பதில் சொல்லமுடியாது மிக வெட்கக் கேடான வெலிக்கடை சிறை படுகொலை அமைந்தது. அதற்காக சிறையில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பாதுகாப்பு இல்லாது போனது மட்டுமல்ல அந்த சி;றையில் படுகொலை செய்யப்பட்ட 53 தமிழ்க் கைதிகளுக்காகவும் இதுவரை விசாரணை நடத்த இலங்கையின் அரசோ, நீதித்துறையோ முற்பட்டது கிடையாது.
இந்நிலையில் எந்தவொரு சிங்களத் தலைவர் மீதோ, சிங்கள அரசின் மீதோ, சிங்கள நீதித்துறையின் மீதோ தமிழ் மக்கள் நம்பிக்கை கொள்ள இடமில்லை.
இப்போது முள்ளிவாய்க்காலில் சுமாராக ஒன்றரை இலட்சம் தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட பின்னணியில் இலங்கை அரசுக்கு சர்வதேச அரங்கில் எழுந்துள்ள அவமானத்தையும், நெருக்கடியையும் தாண்டும் வகையில் தமிழ்த் தலைவர்களுடன் கைகோர்ப்பது போல் பாசாங்கு செய்வது ஒருபுறமும், அரசியல் தீர்வு காணப்போவதாக கூறுவது இன்னொரு புறமுமாக உள்ளது. இதனை தந்திரம் என்று கூறமுடியுமே தவிர உண்மை என்று நம்ப எத்தகைய முன்னுதாரணங்களும் எம்முன் இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தால் கூட செய்து காட்டப்படவில்லை.
சிங்கள கட்சிகளுக்கும், இலங்கை அரசுக்கும் கறைபடிந்த ஏமாற்றும் வராற்றுப் பட்டியல் நீண்டு இருக்கிறதே தவிர நல்லுதாரணத்திற்கு பாத்திரமாக எந்தொரு சிங்களத் தலைவரும் இன்றைய நாளான 24-2-2016 வரை நடந்து கொண்டது இல்லை.
இந்நிலையில் புதிய அரசியல் யாப்பில் தமிழ் மக்களுக்கான தீர்வு பற்றி நம்புவதற்கு தமிழ் மக்கள் தயாராக இல்லை.
ஆனால் இச்சபையில் உள்ள கௌரவ உறுப்பினர்கள் அனைவருக்கும் சிங்களத் தலைவரான காலம் சென்ற கலாநிதி எம்.என்.பேரேரா 1955ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ஆம் தேதி நாடாளுமன்றத்தில் கூறிய ஒரு கூற்றை நினைவு படுத்துவது நல்லது.
‘ஜனநாயகம் என்பதன் பொருள் பல்வேறு வகைப்பட்ட கருத்துக்களையும் கேட்டு அனுசரித்து நடப்பது என்பதாகும். ஜனநாயகம் என்பதன் அர்த்தம் சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளை முற்றிலும் ஏற்றுச் செயற்படுவதாகும். ஜனநாயகம் என்பது தலைகளை எண்ணும் ஒரு கணக்கல்ல.’ {அரசாங்கப் பதிவேடு அக்டோபர் 19, 1955.}
தமிழ் மக்களின் உரிமைகளை அங்கீகரிப்பதில் இருந்துதான் இலங்கையில் ஜனநாயகம் உதயமாக முடியும். பெரும்பான்மையின மேலாதிக்கத்தை இன்னொரு இனத்தின் மீது திணித்து அந்த இனத்தை அடக்கி ஒடுக்கி படுகொலை செய்வது ஜனநாயகம் அல்ல. குறைந்தபட்ட ஜனநாயக உணர்வு இல்லாமல் இனப்பிரச்சனையை தீர்க்க முடியாது. அதற்கான முதிர்ச்சியையும், நாகரீக வளர்ச்சியையும் சிங்களத் தலைவர்கள் இனிமேலாவது காட்டுவார்களா என்பதில் இருந்துதான் ஐக்கியப்பட்ட இலங்கைக்கான எதிர்ப்பார்ப்பு அடங்கியிருக்க முடியும். இவ்வாறு அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
n10