செய்திகள்

ஐ.நா. மனித உரிமை ஆணையக அலுவலகம் இலங்கையில் தேவை : சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்து

ஐ.நா. மனித உரிமை ஆணையக அலுவலகமொன்று இலங்கையில் அமைக்கப்படவேண்டுமென வலியுறுத்தியுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை, இலங்கையின் பாதுகாப்புத் துறையில் சீர்திருத்தங்கள் செய்யப்படுவதுடன், பாதுகாப்புத் துறை மற்றும் சட்ட அமுலாக்க அதிகாரிகளின் பின்னணிகள் ஆராயப்பட்டு மோசமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளவர்கள் எனக் கண்டறியப்படுவோர் உடனடியாக அகற்றப்படவேண்டுமெனவும் தெரிவித்துள்ளது.

அத்துடன், நீதி, உண்மை மற்றும் நிவாரணப் பொறிமுறைகளில் பங்கேற்றமைக்காக ஆபத்தை எதிர்கொள்ளும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பான வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்கான ஒப்பந்தங்களை ஐ.நா.வும் அதன் உறுப்பு நாடுகளும் இலங்கையுடன் மேற்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா. மனித உரிமை பேரவையின் 31 ஆவது கூட்டத்தொடர் நாளை திங்கட்கிழமை முதல் மார்ச் 24 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள நிலையில், இலங்கை தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபை சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் இலங்கை தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு;

சட்டத்திற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் வராது என்ற தைரியத்தோடு இலங்கையில் பல தசாப்தங்களாக இடம்பெற்று வந்த மனித உரிமை மீறல்கள், துஷ்பிரயோகங்கள் இதுவரை ஒழுங்காக விசாரிக்கப்படவில்லை. பொலிஸ் தடுப்புக்காவலில் சித்திரவதைகள் நடப்பதென்பது  நீடித்துவருகிறது.

தனது கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கும் பாதிக்கப்பட்டோருக்கு உரிமைகள் உள்ளன என்பதை உறுதிசெய்வதற்குமான முக்கிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு இலங்கை முன்வந்திருந்தது. எனினும், தனது கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் மந்தமாக இருப்பதையும் இவ்வுரிமைகள் சம்பந்தமான அரசியல் சாசன மாற்றங்கள் பற்றிய வாதப்பிரதிவாதங்களால் இவ்விவகாரம் இருட்டடிப்பு செய்யப்பட்டுவருவதையும் அவதானிக்க முடிகிறது.

தேசிய மட்டத்திலான பொறிமுறைகளை வடிவமைப்பதற்காகவும் நடைமுறைப்படுத்துவதற்காகவும் மக்களை கலந்தாலோசிப்பது என்பது மந்தகதியிலேயே நடந்துவருகின்றது. தமது கருத்துக்களை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாத நிலையிலேயே பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர்.

கலவையான நீதிமன்றம் என்ற ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் பரிந்துரையை நாங்கள் ஆதரிக்கின்றோம். கூடவே ஒரு சில குறிப்பிட்ட வழக்குகளை மட்டுமன்றி, கூடுதலானவற்றை இந்த நீதிமன்றம் விசாரிக்க வேண்டும். சர்வதேச நீதிபதிகள், சட்ட நடவடிக்கை அதிகாரிகள், குற்றஞ்சாட்டப்பட்டோர், வழக்குரைஞர்கள், தடயவியல் நிபுணர்கள், பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சிகள், பராமரிப்பு சேவை நிபுணர்கள் ஆகியோர் இப்பொறிமுறையில் உள்ளடக்கப்படுவது நம்பகத்தன்மைக்கும் சுயாதீனத்துக்கும் வழிவகுக்கும். மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் பாதுகாப்பு மற்றும் சட்ட அமுலாக்கல் பிரிவினரின் பிடியில் அல்லாமல் சுயாதீனமாக செயற்பட வழியேற்படுத்தப்பட வேண்டும்.

சர்வதேச சட்டங்களின் கீழ் குற்றமாக அமையும் விடயங்கள்மீது பலனளிக்கும் விதத்தில் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கையில் தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லை. எனவே, சட்டச் சீர்திருத்தங்கள் தேவை.

இனப்படுகொலை,  மனித குலத்துக்கு எதிரான குற்றச்செயல்கள், போர்க்குற்றங்கள், சித்திரவதை, பலவந்தமாகக் கொண்டுசெல்லப்பட்டு காணாமல்போதல், சட்டத்திற்கு அப்பாற்பட்ட மரணதண்டனையாக கொல்லப்படுதல் போன்றவை இலங்கை சட்டங்களின் கீழ் குற்றங்களாக அறிவிக்கப்பட வேண்டும்.

குற்றச்செயலுக்கு வழிவகுத்த நடவடிக்கைக்கு உத்தரவிட்டவரும் அக்குற்றத்திற்குப் பொறுப்பேற்பது, உயர்மட்ட அதிகாரிகளும் உத்தரவுக்கு பொறுப்பேற்பது, அதியுயர் பதவிகளை வகிப்பவர்களுக்கு குற்ற நடவடிக்கையிலிருந்து விலக்களிக்கும் சட்டங்கள், பொதுமன்னிப்பு வழங்குதல் போன்றவற்றை நீக்குவது உள்ளிட்ட பொறுப்பேற்பு விதிகள் கடைப்பிடிக்கப்படல் வேண்டும்.

காணாமல்போனோர் பற்றிய ஆணையகத்தைத் தாண்டி யுத்தத்தின்போதும் அதன் பின்னரும் பல்வேறு தரப்பினரும் செய்த மனித உரிமை மீறல்கள் பற்றிய விபரங்களைக் கூடியவரையில் தெளிவுபடுத்தவும் ஆவணப்படுத்தவும் உண்மை கண்டறியும் சுயாதீன ஆணையம் நிறுவப்பட வேண்டும். சர்வதேச சட்டங்களின் கீழான குற்றங்களைச் செய்தவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கும் அதிகாரம் இந்த ஆணையகத்துக்கு இருக்கக் கூடாது.  சாட்சிகளையும் பாதிக்கப்பட்டோரையும் இந்த ஆணையம் பாதுகாக்க வேண்டும்.

கடந்த காலங்களில் நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களில் நீதி, உண்மை மற்றும் நிவாரணம் கிடைப்பது எதிர்காலத்தில் அவை நடக்கவிடாமல் தடுப்பதற்கு மிகவும் முக்கியம். இவற்றுக்கு மேலாக இலங்கை பாதுகாப்புத் துறையில் சீர்திருத்தங்களை செய்ய வேண்டும்.

பாதுகாப்புத் துறை மற்றும் சட்ட அமுலாக்க அதிகாரிகளின் பின்னணியை ஆராயும் முறை ஏற்படுத்தப்பட்டு மோசமான மனித உரிமை மீறல்களில் அவர்கள் ஈடுபட்டுள்ளார்கள் என்று தெரியவரும்போது அவர்கள் அகற்றப்படவேண்டும்.

பயங்கரவாதத் தடைச் சட்டம், பொதுப்பாதுகாப்பு அவசரச் சட்டம் உள்ளிட்ட மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுத்த சட்டங்கள் மீளாய்வு செய்யப்படவும் சீர்திருத்தம் செய்யப்படவும் வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு பலனுள்ள நிவாரணம் பெறுவதற்கான உரிமைகள் அரசியல் சாசனத்தில் சேர்க்கப்பட வேண்டும்.

ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர், மதச் சிறுபான்மையினர், சிவில் சமூகத்தினர்மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும். மனித உரிமை பாதுகாப்பை வலுப்படுத்தும் முக்கிய சர்வதேச ஒப்பந்தங்களில் இலங்கை சேரவும் நடைமுறைப்படுத்தவும் வேண்டும்.

சட்ட நடவடிக்கை வராது என்ற தைரியத்தில் மனித உரிமை மீறல் நடக்கும் அவலம் முடிவுக்கு வரவேண்டும். சம்பந்தப்பட்ட ஐ.நா. வின் விசேட நடைமுறைகள் அனைத்துடனும் இலங்கை முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்.  இதேவேளை ஐ.நா.வும் அதன் உறுப்பு நாடுகளும் இலங்கை இந்த விடயங்களை நடைமுறைக்குக் கொண்டுவர பின்வரும் இடங்களில் உதவ வேண்டும்.

சர்வதேச மனித உரிமைக் கடப்பாடுகளை இலங்கை உறுதிசெய்ய ஊக்கப்படுத்த வேண்டும்.  நீதி, உண்மை மற்றும் நிவாரணம் வழங்குவதற்கான பொறிமுறைகள் சர்வதேச தரத்தில் அமைய உதவ வேண்டும். வழங்கப்படும் உதவிகள் அனைத்திலும் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகள் வலியுறுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். இலங்கையில் சாட்சி பராமரிப்பு சர்வதேச தரத்தில் அமைவதற்கும் சுயாதீனமாக செயற்படுவதற்கு உதவியும் ஊக்கமும் வழங்க வேண்டும்.

நீதி, உண்மை மற்றும் நிவாரணப் பொறிமுறைகளில் பங்கேற்றமைக்காக ஆபத்தை எதிர்கொள்ளும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பான வெளிநாடுகளுக்கு  அனுப்புவதற்கான ஒப்பந்தங்கள் இலங்கையுடன் ஏற்படுத்தப்படவேண்டும். இலங்கையில் சட்ட அமுலாக்கப் பிரிவுகள் மற்றும் உள்நாட்டுப் பணிகளுக்கான இராணுவத்திலும் உள்ளவர்களின் பின்னணியை பரிசோதிக்கும் வழிமுறைகளை இலங்கை உருவாக்க உதவ வேண்டும். ஐ.நா. அமைதி காப்புப் பணி, பயிற்சி மற்றும் பரிமாற்றத் திட்டங்களில் பங்கேற்கும் இலங்கை வீரர்களின் பின்னணி பரிசோதிக்கப்படுவது வலியுறுத்தப்பட வேண்டும்.

சர்வதேச சட்டங்களின் கீழான குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை செய்தவர்கள்மீது சட்ட நடவடிக்கை எடுக்க முனையும் இலங்கை நீதிமன்றங்கள், கலப்பு நீதிமன்றங்கள் ஆகியவற்றுக்கு ஒத்துழைப்பு, பரஸ்பர சட்ட உதவி போன்றவை வழங்கப்பட வேண்டும். ஆனால், மரண தண்டனை விதிக்கப்படாமல் இருப்பதை வலியுறுத்த வேண்டும். ஐ.நா.வின் மனித உரிமை ஆணையக அலுவலகம் ஒன்று இலங்கையில் அமைக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.