செய்திகள்

இறுதி யுத்தத்தில் காணாமல்போன 600 பேர் இரகசிய முகாமில்: ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சி

இறுதி யுத்தத்தின் போது புதுமாத்தளன் இராணுவ கட்டுப்பாட்டிற்குள் வைத்து காணாமல்போன எனது மகன் 3 வருடங்களின் பின்னர் தன்னை சிறையில் இருந்து விடுவிக்குமாறு கூறி கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.

தன்னை சுமார் 600 பேருடன் இரகசியமாக தடுத்து வைத்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ள அக் கடிதத்தினை பொலனறுவை என்னும் இடத்திலிருந்து தபாலிட்டுள்ள அதிர்ச்சிகரமான தகவல்களுடன் தந்தை ஒருவர் ஆணைக்குழு முன்பாக சாட்சியமளித்துள்ளார்.

மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் 2  ஆம் பகுதி விசாரணை நேற்று சனிக்கிழமை கோப்பாய் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இவ்விசாரணைக்காக அழைக்கப்பட்ட தந்தை ஒருவராலேயே இந்த அதிர்ச்சிகரமான தகவல்கள் அடங்கிய சாட்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் தனது சாட்சியத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது ;

யுத்தத்தின் இறுதி நாட்களில் சரமாரியாக ஷெல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.  இத் தாக்குதல்களுக்குள் தப்பித்து நானும் எனது குடும்பமும் புதுமாத்தளன் பகுதியிலிருந்த இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியினை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தோம்.

இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்தபோதும் அங்கு நிலவிய பதற்றமான சூழ்நிலையில் எனது குடும்பம்  3 பிரிவாக பிரிந்து செல்ல வேண்டிய நிலையேற்பட்டது.  இதனால் அங்கு 3 பிரிவாக பிரிந்த எனது குடும்பம் ஒன்று சேர முடியாது  போனது. இதன் பின்னர் வவுனியாவில் உள்ள முகாமிற்கு நாங்கள் அழைத்துவரப்பட்ட பின்னர் அங்குள்ளவர்களின் உதவியுடன் முன்னர் பிரிந்து சென்ற இரு பகுதியினர் ஒன்று சேர்ந்தோம். இவ்வாறு ஒன்று சேர்ந்த எங்களுக்கு எந்தவிதமான  பாதிப்பும் ஏற்படவில்லை.

ஆனால், எனது மகனைப் பற்றி எல்லா முகாங்களுக்கும் தகவல்கள் அனுப்பியும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் தொடர்பான எந்தத் தகவல்களும்  எங்களிடம் இல்லை.  இந்நிலையில் 2012 ஆம் ஆண்டு எனது மகனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. வெலிக்கந்தை, பொலநறுவை என்னும் இடத்தில் இருந்து அவருடைய  கடிதம் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக கடிதத்தின் உறையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அக் கடிதத்தில் தான் நலமாக இருப்பதாகவும் தன்னை சுமார் 600 பேருடன் சேர்த்து தடுத்து வைத்துள்ளதாகவும் எப்படியாவது தன்னை சிறையிலிருந்து விடுவித்து அழைத்துச் செல்லுமாறும் எனது மகன் கடிதத்தில் கேட்டிருந்தார். அதன்பின்னர் மகனிடமிருந்து ஒரு தகவலும் வரவில்லை. விசாரணைகள் என்று அங்கும் இங்கும் அலைந்து திரிந்து சலித்துப் போய்விட்டோம்.  நாங்கள் வறுமைப்பட்ட குடும்பம் தான். ஆனாலும் எனக்கு நஷ்டஈடோ வேறு உதவிகளோ வேண்டாம். எனது மகனை கண்டுபிடித்துத் தந்தால் போதும் என்று அந்த தந்தை தனது சாட்சியத்தை பதிவு செய்திருந்தார்.