எனது தீர்வுப் பொதியை ஏற்காததையிட்டு பிரபாகரன் வருந்தினார்: இந்திய ஊடகத்துக்கு சந்திரிகா பேட்டி
சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் என்பதிலும் பார்க்க அதிகளவினராக விளங்குகின்றார். பலம் வாய்ந்தவரான மகிந்த ராஜபக்ஷவின் வெளியேற்றத்துக்கான அரசியல் ஏற்பாட்டினை வடிவமைத்தவராக அவர் காணப்படுகிறார். அவர் அமைச்சராகவோ அல்லது கட்சியில் பதவியிலோ இல்லை. ஆனால் சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐ.தே.க. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தேசிய ஒருமைப்பாட்டு அரசாங்கத்தை ஏற்படுத்தியதில் முக்கியமானவராக விளங்குகிறார்.
ரெய்சினா கலந்துரையாடல்கள் நிகழ்வில் பங்கேற்பதற்காக திருமதி குமாரதுங்க புதுடில்லிக்கு வருகை தந்திருந்தார். தனது கனதியான நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் பெஸ்ட் போஸ்ட்டுடன் கதைப்பதற்கு சில நிமிடங்களை அவர் செலவிட்டிருந்தார். தமிழர்களுக்கு தான் வழங்கியிருந்த அரசியல் பொதியை ஏற்றுக்கொள்ளாமல் விட்டதற்காக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வருத்தப்பட்டிருப்பார் என முதற்தடவையாக திருமதி குமாரதுங்க கூறியுள்ளார். அவர் ஜனாதிபதியாக இருந்த போது அத்தீர்வுப் பொதியை முன்வைத்திருந்தார். புலம்பெயர்ந்த தமிழ், தொழில்சார் நிபுணர்கள் லண்டனிலிருந்து அடிக்கடி யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொள்பவர்கள். அவர்களால் இந்த விடயம் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்குக் கூறப்பட்டுள்ளது.
“இதனை நான் ஏற்றுக் கொள்ளாததையிட்டு நான் கவலைப்படுகிறேன்’ தமிழர்களுக்கு எந்தவொரு சிங்களத் தலைவர்களும் வழங்காத விடயமாக குமாரதுங்க வழங்க முன்வந்திருந்த பொதி காணப்பட்டது. அந்தத் தருணத்தில் தான் செய்திருந்ததை இப்போது அரசாங்கம் வழங்கும் நிலைப்பாட்டில் இல்லை என்பதை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார். அத்துடன் ராஜபக்ஷ ஆட்சியின் போது சிங்கள மேலாதிக்க வாதம் அதிகரித்திருந்த நிலையில், அதிகளவுக்கு வழங்குவதற்கு ஒருபோதும் இடமளியாது என்பதைத் தமிழர்கள் அறிந்திருப்பதால் தமிழர்கள் அதனை கேட்க மாட்டார்கள் என்பதையும் அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசக் கட்சியுடன் கரம் கோர்த்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை 2015 ஜனாதிபதித் தேர்தலில் வெளியேற்றுவதற்கு சந்திரிகா பிரதான வகிபாகத்தை வழங்கியிருந்தார். அவரின் ஆதரவு இல்லாமல் ராஜபக்ஷவின் அமைச்சரவையில் உறுப்பினராகவிருந்த சிறிசேன சுதந்திரக் கட்சியின் பெரும்பான்மையினரால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்க மாட்டார். முன்னாள் ஜனாதிபதியாக மட்டுமன்றி இரு முன்னாள் பிரதமர்களின் புதல்வியான அவரின் குரலானது ராஜபக்ஷவின் தோல்விக்கு வழிசமைப்பதற்கான கனதியைக் கொடுத்திருந்தது.
“நான் அவரைப் போன்று திருடியோ அல்லது கொலைகாரியோஅல்ல’ என்று முன்னாள் ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். அரசியலமைப்பு ரீதியான பதவியை சந்திரிகா பெற்றுக்கொள்ள விரும்பியிருந்தால் அரசியலமைப்பை மாற்றுவதற்கு ஜனாதிபதி சிறிசேன முன்வந்திருந்தார். ஆனால் சந்திரிகா அதனை மறுத்துவிட்டார். தனது மன்றத்தின் பணிகளில் ஈடுபடுவதிலும் தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்கத்திற்கான அமைப்பின் தலைவியாக பணியாற்றுவதிலும் அவர் மகிழ்ச்சியாக உள்ளார். அந்த அமைப்பு ஜனாதிபதியின் கீழ் செயற்படுகிறது.
பெஸ்ட் போஸ்ட்டுக்கு திருமதி குமாரதுங்க அளித்த பேட்டி வருமாறு
கேள்வி : இலங்கையில் புதிய அரசியலமைப்பு தொடர்பாக பேச்சுகள் இடம்பெறுகின்றன. இது தொடர்பாக தங்களின் கருத்து என்ன? புதிய அரசியலமைப்பை அல்லது தற்போதுள்ள அரசியலமைப்பை திருத்தி தமிழர்கள் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு அவர்களின் உரிமைகளை வழங்குவதா நாட்டுக்குத் தேவைப்படுகிறது. புதிய அரசியலமைப்பானது பல வருடங்கள் எடுத்துக் கொள்ளுமே? நேபாளத்தில் என்ன நடந்தது என்பதை ஞாபகத்தில் கொள்ளுங்கள்
பதில் : நாங்கள் புதிய அரசியலமைப்பைக் கொண்டிருப்போம். ஆனால் ஆரம்பத்திலிருந்து சுரண்டிக் கொண்டிருக்க மாட்டோம். ஏற்கனவே அங்கிருக்கும் பல விடயங்களை நாங்கள் ஒருங்கிணைப்போம். நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. அதற்கு பாராளுமன்றம் அங்கீகாரம் வழங்க வேண்டியுள்ளது. அங்கு இது தொடர்பான விரிவான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கின்றன.
கேள்வி : பொலிஸ் மற்றும் காணி விவகாரம் மாகாண சபைக் கட்டுப்பாட்டில் இருப்பது இப்போதும் தடையான விவகாரமாக உள்ளதா? முன்னரே இந்த இரு விவகாரங்களும் 13 ஆவது திருத்தத்தை முன்னெடுப்பதற்கு தடையாக அமைந்திருந்தன. இந்தக் கட்டங்களைத் தாண்டி இலங்கை முன்னகர்ந்துள்ளதா? இந்தியாவிலுள்ள நாங்கள் 13 ஆவது திருத்தத்திற்கு அதிகளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றோம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
பதில் : இதில் இந்தியா செய்வதற்கான எதுவும் இல்லை. நாங்கள் இதனைச் செய்ய விரும்புகிறோம். எமது மக்கள் விரும்புகிறார்கள். தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இது தேவைப்படுகிறது. சர்வதேச சமூகத்திலுள்ள இந்தியா மற்றும் மேற்குலகம் போன்ற எமது நண்பர்கள் நாட்டில் நீடித்த சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான பிரதான வழிமுறையாக இது இருக்கின்றது என்று நிச்சயமாக நம்புகின்றனர். 13 ஆவது திருத்தத்தின் பல்வேறு விடயங்கள் ஏற்கனவே அங்குள்ளன. ஆனால் அதிகளவு தேவைப்படுகிறது. காணி மற்றும் பொலிஸ் கட்டுப்பாடு தொடர்ந்தும் பிரதான விவகாரங்களாக இருந்து வருகின்றன.
கேள்வி : காணி மற்றும் பொலிஸ் தொடர்பான கடுமையான விடயத்தை இறுதியில் இலங்கை எவ்வாறு தீர்த்து வைக்கும்?
பதில் : இப்போது அது தொடர்பாக என்னால் நிச்சயமாகக் கதைக்க முடியாது. முன்னேற்றம் அடைந்து கொண்டிருப்பதற்கான பணியாக அது இப்போது இருந்து வருகிறது.
கேள்வி : புதிய அரசியலமைப்பு புலிகளுக்கு நீங்கள் வழங்க முன்வந்த அரசியல் பொதியிலும் பார்க்க அதிகமானதாக இருக்குமா? ஜனாதிபதியாக நீங்கள் இருந்த போது தமிழர்களுக்கு சிறப்பானதொன்றை வழங்கியிருந்தீர்கள். ஆனால் பிரபாகரன் நிராகரித்திருந்தார். பதிலாக திருகோணமலை துறைமுகத்தின் மீது தாக்குதல் இடம்பெற்றது. அதன் பின்னர் முழு அளவிலான யுத்தம் இடம்பெற்றதே?
பதில் : ஆம். 2006 இல் திருகோணமலை தாக்குதல் இடம்பெற்றது. நாங்கள் வழங்க முன்வந்த அரசியல் பொதி பற்றி நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். அது தொடர்பாக இதனை நான் அவசியம் கூற வேண்டும். நான் அதிகாரத்தில் இருந்து வெளியேறியிருந்தேன். மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகியிருந்தார். தேர்தலில் அவருக்கு ஆதரவு வழங்குவதற்காக பிரபாகரனை முட்டாள் ஆக்கியிருந்தார். அதன் பின்னர் விடுதலைப் புலிகளுக்கு எதிராக செயற்பட்டு அவரை (பிரபாகரனை) இல்லாமல் செய்திருந்தார். புலிகளுடன் தொடர்பை வைத்திருந்த புலம்பெயர்ந்த சமூகத்தின் சில உறுப்பினர்கள், பொதுமக்கள், தொழில்சார் நிபுணர்களில் சிலர் எனக்கும் தெரிந்தவர்கள். அவர்கள் என்னிடம் ஒரு தடவை இது தொடர்பாகக் கூறியிருந்தனர். பிரபாகரனைச் சந்தித்த பின்னர் அவர்கள் என்னிடம் இந்த விடயத்தை கூறியிருந்தனர். எனது தீர்வுப் பொதி பற்றி அவர்கள் பிரபாகரனிடம் கேட்டிருந்தனர். ஏற்றுக் கொள்ளாததையிட்டு தான் கவலைப்பட்டதாக அவர் கூறியிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
கேள்வி : போர்க்குற்றங்களுக்கு பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கான முன்னகர்வில் வட மாகாணத்தைச் சேர்ந்த சாதாரண தமிழ் மக்கள் சம்பந்தப்பட்டுள்ளார்களா? அல்லது இந்த விடயம் புலம்பெயர்ந்த தமிழர்களினால் பிரதானமாக முன்னெடுக்கப்படுகின்றதா? மாகாணத்திலுள்ள சாதாரண மக்களின் மனநிலை என்ன?
பதில் : வட மாகாணத்திலுள்ள சராசரி தமிழர்கள் தமது அன்புக்குரியவர்களைத் தேடிக் கொண்டிருப்பதில் கவனத்தைச் செலுத்துகின்றனர். அவர்களின் அன்புக்குரியவர்கள் காணாமல் போயுள்ளனர். இழப்பீட்டைப் பெற்றுக் கொள்வதற்கும் வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதற்கும் படைகளினால் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் காணிகளை திரும்பப் பெற்றுக் கொள்வதற்கும் சாதாரண தமிழ் மக்கள் தமது கவனத்தை கொண்டிருக்கின்றனர். கோதாபய ராஜபக்ஷவின் கீழான இராணுவம் காணிகளை எடுத்துக் கொள்ளவும் வர்த்தகத்தை மேற்கொள்ளவும் இடமளிக்கப்பட்டிருந்தது. இராணுவம் ஹோட்டல்களை நடத்துகிறது. பாரியளவு பண்ணைகளையும் வர்த்தக நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கிறது.
மக்கள் தமது காணிகளுக்கு திரும்பி செல்வதற்கு அரசாங்கம் உதவியளித்து வருகின்றது. வறிய மக்கள் வாழ்வாதாரம் போன்ற விவகாரங்களைப் பெற்றுக் கொள்ள விரும்புகின்றனர். அபிவிருத்தியை விரும்புகின்றனர். இந்த வருடம் வடக்கு, கிழக்கில் மீள்கட்டுமானப் பணி ஆரம்பிக்கப்படுகிறது. நீர்ப்பாசனம், வீதிகள், மருத்துவமனைகள், பாடசாலைகள் யுத்தத்தால் அழிக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் என்பனவற்றை மீள நிர்மாணிப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்படுகின்றன. கல்வி கற்ற தமிழர்கள் போர்க்குற்றங்களுக்கு பொறுப்பானவர்கள் நீதியின் முன்னால் நிறுத்தப்பட வேண்டுமென விரும்புகின்றனர். அந்த முன்னகர்வை புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புக்கள் தூண்டி வருகின்றன. அவை தமது இருப்புக்காக இதனை விரும்புகின்றன. முன்னர் இது யுத்தமாகவும் நியாயமற்றதாகவும் இருந்தது. இப்போது அவர்களுக்கு நிதி தேவைப்படுகிறது.
கேள்வி : ஹேக்கிலுள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னால் ராஜபக்ஷவை விசாரணை செய்வது பற்றி இலங்கையில் எதிரொலிப்பு எவ்வாறு இருக்கின்றது. மக்கள் இதனை விரும்புகின்றார்களா?
பதில் : ராஜபக்ஷவும் அவருடன் இணைந்தோரும் ஊழல் மற்றும் தெற்கில் இடம்பெற்ற கொலைகளுக்காக விசாரணை செய்யப்பட வேண்டுமென சிங்கள மக்கள் விரும்புகின்றார்கள். ஊடகவியலாளர்களையும் அரசியல் வாதிகள் சிலரையும் படுகொலை செய்ததற்கு அந்த ஆட்சி பொறுப்பாக இருந்தது. வடக்கிலுள்ள கல்வி கற்றவர்கள் இதனை விரும்புகிறார்கள் என நான் ஏற்கனவே கூறியுள்ளேன்.
கேள்வி : பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் என்ற பெயரில் அரசாங்கங்கள் இந்த மாதிரியான அட்டூழியங்களை இழைப்பதாகக் கருதப்படுகிறது. இலங்கை என்று வரும் போது அதிகளவிலாக இந்த விடயத்தை உலகம் கொண்டிருக்கின்றதென சில சமயம் நீங்கள் நினைக்கிறீர்களா?
பதில் : ஈராக்கிலும் ஏனைய இடங்களிலும் அமெரிக்கா என்ன செய்தது என்பதை நாங்கள் நினைக்கும் போது ஒப்பீட்டளவில் இலங்கை இல்லாமல் போய்விடுகிறது. ஆனால் நாங்கள் சிறிய நாட்டினராக இருக்கின்றோம். அபிவிருத்திக்காக உலகில் நாங்கள் தங்கியிருக்கின்றோம். ஆனால் தனிப்பட்ட ரீதியில் எனது வாழ்வில் மனித உரிமை செயற்பாட்டாளராக இருக்கின்ற ஒருவர் என்ற ரீதியில் அமெரிக்கர்கள் இதனைச் செய்தார்கள் என்பதால் இது நேர்மையானது என அர்த்தப்படுத்த முடியாது. நாங்களும் அதனையே செய்கிறோம் என அர்த்தப்படக்கூடாது. அது சாட்டாக இருக்க முடியாது. என்னால் அதனை எற்றுக் கொள்ள முடியாது. பொறுப்பானவர்கள் நீதியின் முன்னால் நிறுத்தப்பட வேண்டும். நாங்கள் உள்ளக விசாரணையை கொண்டிருக்கின்றோம். சர்வதேச விசாரணையை அல்ல. ஆனால் நீதித்துறையில் உள்ளவர்கள் பற்றி பரிசீலிக்கும் போது சகலரும் இல்லாவிடினும் பலர் ஊழல் புரிபவர்களாக உள்ளனர். மேற்பார்வை செய்வதற்கு நாங்கள் சரியான ஆட்களைத் தெரிவு செய்ய வேண்டியுள்ளது. இது இடம்பெற்று வருகிறது. அதற்கு நான் ஆதரவளிக்கிறேன்.
கேள்வி : நீங்கள் யாழ்ப்பாணத்தில் இருந்துள்ளீர்களா? எந்தவொரு சிங்கள அரசியல் வாதியும் செல்லாதிருந்த போது உங்கள் கணவர் யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். தமிழ் மக்கள் அவர் மீது அதிகளவுக்கு நன்மதிப்பைக் கொண்டுள்ளனர். உங்களுக்கு அவர்களின் பதில் எவ்வாறு அமைந்திருந்தது.
பதில் : ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் யுத்தத்தின் பின்னர் நான் பல தடவைகள் யாழ்ப்பாணத்திற்குச் சென்றுள்ளேன். நான் இரகசியமான முறையில் சென்றிருந்தேன். அவருக்கு இது தெரிந்திருந்தால் நான் கொல்லப்பட்டிருக்கக்கூடும். யாவற்றுக்கும் மேலாக அவரைப் போன்று நான் திருடியோ அல்லது கொலைகாரியோ அல்ல. தமது வீடுகளுக்கு திரும்பிச் சென்ற மக்களுக்கு சூரிய சக்தி மின்சாரத்தை வழங்குவதற்காக நான் சென்றிருந்தேன். பகல் நேரத்தில் நான் சென்றிருந்த போது ஆண்களும் பெண்களும் தமது வயல்களை விட்டு வெளியேறியிருந்தார்கள். தங்களுக்கு அறிவித்தல் கொடுத்திருக்கவில்லையென மக்கள் ஏமாற்றமடைந்திருந்தனர். எனக்கு வரவேற்புக்கு ஏற்பாடு செய்து உணவை வழங்கியிருக்க முடியுமென அவர்கள் கவலை தெரிவித்திருந்தனர். என்னைப் பார்ப்பதில் அவர்கள் மிக மகிழ்ச்சியடைந்திருந்தனர். எமது வேட்பாளரின் தேர்தல் பிரசாரத்திற்காகவும் நான் அங்கு சென்றிருந்தேன். எனக்கு அதிகளவு வரவேற்பு கிடைத்தது. அதிகளவு மக்கள் திரண்டிருந்தனர்.
கேள்வி : மக்கள் கசப்புணர்வுடன் இருந்தார்களா?
பதில் : நான் வெறுப்புணர்வு கொண்டவள் அல்ல. ஆனால் பயந்திருந்தேன். எனனைப் பற்றி நிச்சயமாக பயப்படவோ அல்லது வெறுப்புணர்வோ கொண்டிருக்கவில்லை.
கேள்வி : ஐ.தே.க. மற்றும் சு.க. வின் எதிர்காலத்தை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்? ராஜபக்ஷவின் ஆட்சியிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கு இரு எதிரெதிர்க் கட்சிகளும் ஒன்று சேர்ந்துள்ளன. ஆனால் பின்னர் என்ன நடக்கிறது?
பதில் : நாங்கள் ஐந்து வருட ஆட்சிக் காலத்தை பூர்த்தி செய்வோம். அடுத்த தேர்தலை சந்திப்போம். இரு கட்சிகளும் ஒன்றாக போட்டியிட்டு மீண்டும் ஒன்றாக அரசாங்கத்தை அமைப்போம்.
கேள்வி : தங்களின் அரசியல் எதிர்காலம்?
பதில் : நான் அதிகார ஆசை கொண்டிருக்கவில்லை. எனது நாட்டிற்கு என்னால் முடிந்தளவு செய்திருக்கிறேன். நானோ எனது குடும்பமோ ஒருபோதுமே அதிகாரத்திற்காக அரசியலில் இருந்திருக்கவில்லை. நாங்கள் கொடுத்திருக்கிறோம். ஆனால் எடுத்திருக்கவில்லை. எனது மன்றங்கள் எனது மன விருப்பத்துக்குரியவையாகும். அத்துடன் தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்கத்துக்கு தலைமை தாங்குவதில் நான் ஈடுபட்டிருக்கிறேன்.
(நன்றி: தினக்குரல்)




