செய்திகள்

7 பேர் விடுதலையை மத்திய அரசு எதிர்த்தது ஏன்? கருணாநிதி வெளியிடும் தகவல்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க தமிழகச் சட்டப்பேரவையில்  2014-ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றிய பின்னர், மத்திய அரசுக்குக் கட்டளையிடும் விதத்தில், குறிப்பிட்ட நாட்களுக்குள் அதற்கு ஒப்புதல் தரவேண்டும் என்று, ஜெயலலிதா அரசு  இறுமாப்போடு  கருத்து தெரிவித்த காரணத்தால்தான், தமிழக அரசின் விடுதலை நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல் முறையீடு செய்திட நேரிட்டதென்று சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள் என கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ் ஆகிய 7 பேருக்கு விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. பின்னர் நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோரின் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இந்த 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மரண தண்டனை பெற்ற முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தண்டனையையும் ஆயுள் தண்டனையாகக் குறைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.சதாசிவம் கூறும்போது, ”எங்களது தீர்ப்பில், 3 குற்றவாளிகளின் மரணதண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளோம். அவர்களை விடுதலை செய்வது தொடர்பாக நாங்கள் எதுவும் கூறவில்லை. சம்பந்தப்பட்ட மாநில அரசு வழக்கமான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றலாம் என்று தீர்ப்பில் தெளிவுபடுத்தி உள்ளோம். அந்த நடைமுறைகளின்படி குற்றவாளிகள் முறைப்படி கோரிக்கை மனு அளிக்கவேண்டும். அதன் பின் மாநில அரசு சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்திடம் அறிக்கை கோர வேண்டும். அதன் பின்னரே உரிய முடிவெடுக்க வேண்டும். குற்றவாளிகள் விடுதலை செய்யப்படக் கூடாது என்பது எங்கள் நோக்கம் அல்ல. எல்லாவற்றுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன. அவற்றைத்தான் பின்பற்ற வேண்டும். குற்றவாளிகளை விடுதலை செய்வது தொடர்பான சட்ட நடைமுறைகளை அனைத்து மாநில அரசுகளும் அறிந்து வைத்திருக்க வேண்டும்” என்று விரிவாக நீதிபதி சதாசிவம் கூறியிருக்கிறார். இதை வைத்துப் பார்க்கும்போது, நம்முடைய மாநில அரசு தான் இந்தப் பிரச்னையை சட்டப்படி முறையாக அணுகவில்லை என்று தெரிகிறது.

2-12-2015 அன்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பில், மத்தியப் புலனாய்வுத் துறை தொடுத்த வழக்கில், ஆயுள் சிறை தண்டனை அனுபவித்து வரும் ராஜீவ்காந்தி கொலைக் கைதிகள் 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பாக முடிவெடுப்பதற்கான முதன்மையும், அதிகாரமும் மத்திய அரசுக்கே உண்டு என்று தெரிவித்திருக்கிறது. இந்தத் தீர்ப்புக்குப் பிறகு, அதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க. அரசு உடனடியாக அவர்களை விடுதலை செய்வது சம்மந்தமாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு அரசியல் ஆதாயத்திற்காக இந்தப் பிரச்னையைக் கையிலெடுத்ததைப் போலவே, தற்போதும் தேர்தல் வருகிறது என்றதும், இதன் காரணமாக வாக்குகளைக் கவரலாம் என்ற எண்ணத்தோடு அ.தி.மு.க. அரசு மத்திய அரசுக்கு தலைமைச் செயலாளரைக் கொண்டு கடிதம் எழுதியிருக்கிறது. அந்தக் கடிதத்தைக்கூட அன்றாடம் ஏதாவது ஒரு பிரச்னைக்காக பிரதமருக்கு கடிதம் எழுதுகின்ற முதலமைச்சர் ஜெயலலிதா தன் பெயரிலே எழுதாமல், தலைமைச் செயலாளரைக் கொண்டு அந்தக் கடிதத்தை எழுத வைத்துள்ளார் என்பதில் இருந்தே முக்கியமான இந்தப் பிரச்னைக்கு முதலமைச்சர் ஜெயலலிதா எந்த அளவுக்கு முக்கியத்துவம் தந்திருக்கிறார் என்பதை  புரிந்துகொள்ள முடிகிறதல்லவா?.

தமிழக அரசு எதைச் செய்தாலும் அதை எதிர்க்க வேண்டும் என்று நினைக்காமல், தமிழகத் தலைமைச் செயலாளர் இந்த 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார் என்ற செய்தி கேள்விப்பட்டதும் அன்று இரவே அதனை வரவேற்று, மத்திய அரசுக்கு அந்தக் கடிதத்தின்படி அவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று நான் கேட்டுக்கொண்டேன். உச்ச நீதிமன்றம் இறுதியாக அளித்துள்ள தீர்ப்பு, தமிழ்நாளேடு ஒன்றின் தலையங்கத்தில் குறிப்பிட்டிருப்பதைப்போல, சட்டச் சிக்கல் மீதான விளக்கம் தானே தவிர, பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்டோரின் விடுதலையை முற்றிலுமாகத் தடுக்கக் கூடிய அம்சம் எதுவும், அந்தத் தீர்ப்பில் இல்லை என்று தான் வழக்கறிஞர்கள் கூறுகிறார்கள். சி.பி.ஐ. போன்ற மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகளால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தண்டனை பெற்ற கைதிகளை விடுதலை செய்யும் அதிகாரம், சி.பி.ஐ. அமைப்பைத் தன்னுடைய அதிகாரத்தின் கீழே வைத்திருக்கின்ற மத்திய அரசுக்குத்தான் உள்ளது என்றும், அதன்படி தொடர்புடைய அரசு முடிவு செய்ய வேண்டும் என்கிறபோது, குறிப்பிட்ட இந்த வழக்கில் மத்திய அரசுக்குத்தான் அதிகாரம் உள்ளது என்பதும் தான் தற்போதைய உச்சநீதிமன்றத் தீர்ப்பின் பொருளாகும். அதாவது மத்திய அரசின் அனுமதியுடன் விடுவிக்கப்பட வேண்டும் என்பது தான் இதன் மையநோக்கம்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்கள் மீது ஜனாதிபதி மிகவும் தாமதமாக முடிவெடுத்ததாகக் கூறி, அவர்களின் தண்டனையை ஆயுள் சிறையாக உச்ச நீதிமன்றம் தான் குறைத்தது. மேலும் இந்த வழக்கில் இந்த மூவருடன் சேர்த்து ஆயுள்தண்டனை அனுபவித்து வந்த நளினி (முருகனின் மனைவி), ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் ஏற்கனவே சுமார் 20 ஆண்டுகளை சிறையில் கழித்துள்ளதால், அவர்களை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்றும் உச்ச நீதிமன்றம் தான் கூறியது. உச்ச நீதிமன்றமே கூறிய காரணத்தால், 7 பேரையும் விடுதலை செய்ய தமிழகச் சட்டப்பேரவையில் மாநில அரசு 2014-ம் ஆண்டு பிப்ரவரியில் தீர்மானம் நிறைவேற்றியது.

தீர்மானம் நிறைவேற்றியதும், குற்றஞ்சாட்டப்பட்டவர்களை தமிழக அரசு விடுதலை செய்ய முடிவெடுத்ததும் தவறு அல்ல. அப்படிச்செய்த போது மத்திய அரசுக்குக் கட்டளையிடும் விதத்தில், குறிப்பிட்ட நாட்களுக்குள் அதற்கு ஒப்புதல் தரவேண்டும் என்று, அப்போது நிபந்தனை விதிப்பதைப் போல ஜெயலலிதா அரசு நடந்து கொண்டிருக்கத் தேவையில்லை. அப்படி இறுமாப்போடு தமிழக அரசு இறுக்கமாகக் கருத்து தெரிவித்த காரணத்தால்தான், தமிழக அரசின் விடுதலை நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல் முறையீடு செய்திட நேரிட்டதென்று சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

இப்போதுகூட நளினி செய்தியாளர்களிடம் கூறும்போது, முதலமைச்சர் ஜெயலலிதா விரைவிலேயே அவர்களை எல்லாம் விடுதலை செய்வார் என்ற நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார். அதில் இருந்தே அவர்களின் விடுதலை தாமதமாவதற்குக் காரணம் தமிழக அரசுதான் என்பது தெளிவாகிறது. 2015 டிசம்பரில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி தொடுத்திருக்கும் வழக்கில் இதுவரை பதில் மனு தாக்கல் செய்யாமல் தாமதித்து வரும் தமிழக அரசு,  நளினியின் அந்தப் பேட்டிக்குப் பிறகு தான் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளது.

நளினியின் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், தமிழக அரசு மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருப்பது பாசாங்கு காட்டுவதாகும். மாநில அரசு இந்திய அரசியல் சட்டத்தின் 161-வது பிரிவின்படி ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிக்க அதிகாரம் படைத்ததாகும். உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இந்த அதிகாரம் நீதிமன்றத்தால் கேள்வி கேட்கப்படக் கூடியதல்ல என்றே அழுத்தந்திருத்தமாகக் கூறியிருக்கிறது. எனவே, இந்த ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிக்க மத்திய அரசின் அனுமதியோ, கருத்துரையோ தேவையில்லை. தமிழக அரசு ஆயுள் தண்டனைக் கைதிகள் 7 பேரின் உயிர்களோடு விளையாடிக் கொண்டிருக்கிறது. இது பெரிதும் வருந்தத்தக்கதாகும் என்று ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

23-10-2008 அன்று தி.மு.க. ஆட்சியிலே இருந்தபோது, முதலமைச்சர் ஜெயலலிதா ”விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு, நளினி உள்ளிட்ட ராஜீவ் கொலைக் குற்றவாளிகளை முதலமைச்சர் கருணாநிதி மரண தண்டனையில் இருந்து தப்புவிக்க முயற்சி செய்கிறார். கருணாநிதி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பேச்சுகள் தமிழகத்தில் பகிரங்கமாக நடைபெறுகின்றன. அவர் இதையெல்லாம் தடுத்து நடவடிக்கை எடுப்பதில்லை. என் ஆட்சியாக இருந்தால் நான் கடுமையாக நடவடிக்கை எடுத்திருப்பேன்” என்று ஜெயலலிதா சொன்னதையும், 19-2-2014 அன்று அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றபோது, ”பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் உத்தரவு மகிழ்ச்சி அளிக்கிறது. 7 பேரையும் விடுதலை செய்ய மத்திய அரசு விரைவில் ஒப்புதல் வழங்கவேண்டும்“ என்று நான் கூறியதையும் நடுநிலையாளர்கள் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

தமிழக அரசு சார்பில் இந்தப் பிரச்னை குறித்து மத்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தின் உள்நோக்கம் எதுவாக இருந்த போதிலும், மிகவும் தாமதமாகிவிட்ட இந்த கட்டத்திலாவது இவர்களை விடுதலை செய்வது குறித்து, மத்திய அரசு மனிதாபிமானத்துடன் அணுகிட வேண்டும். மத்திய அரசின் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று மக்களவையில் கூறும்போது, தமிழக அரசின் முடிவை மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். 24 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்து வாடிக்கொண்டிருப்பவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் யாருக்கு உள்ளது, மத்திய அரசுக்கு உள்ளதா, மாநில அரசுக்கு உள்ளதா, நீதிமன்றத்திற்கு உள்ளதா என்றெல்லாம் இன்னமும் வாதிட்டுப் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிராமல், அவர்கள் 7 பேரையும் உடனடியாக விடுவிக்க மத்திய அரசு அல்லது 161-வது பிரிவின்படி தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தி.மு.க.வின் சார்பில் மீண்டும் ஒரு முறை கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

n10