தமிழ் மக்கள் பேரவையின் யோசனை எந்தளவுக்கு சாத்தியமானவை?
– கலாநிதி எஸ்.ஐ. கீதபொன்கலன் –
அரசியலமைப்புச் சீர்திருத்தங்களைச் செய்வதற்கு நடவடிக்கைகளில் இறங்கியிருக்கும் இலங்கை அரசாங்கம், பாராளுமன்றத்தை அரசியலமைப்புச் சபையாக மாற்றுவதற்கான பிரேரணையை முன்வைத்திருக்கிறது. அத்துடன் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டிருக்கும் மக்கள் பிரதிநிதித்துவக்குழு நாடுபூராகவும் சென்று அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பான மக்களின் யோசனைகளையும் கருத்துக்களையும் கேட்டறிந்து வருகின்றது.
அர்த்தபுஷ்டியான சீர்திருத்தங்களைச் கொண்டு வருவதற்கு பாராளுமன்றத்தில் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவைப் பெறுவதில் அரசாங்கம் எதிர்நோக்கக் கூடிய பிரச்சினைகளுக்கு மத்தியிலும் இதுவரையான நகர்வுகள், சீர்திருத்தங்கள் சாத்தியமானவை என்ற எண்ணத்தை வலுப்படுத்தியிருக்கின்றன. மேலும் சில தனிப்பட்டவர்களும் குழுக்களும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் தொடர்பான தங்களது யோசனைகளைச் சமர்ப்பித்திருக்கின்றார்கள்.
விக்கினேஸ்வரனின் யோசனைகள்
வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனைத் தலைவராகக் கொண்ட தமிழ் மக்கள் பேரவை அரசியலமைப்பு யோசனைகள் வரைவை தயாரிப்பதற்கு நிபுணர் குழுவொன்றை நியமித்திருந்தது. அக்குழு கடந்த மாதம் அதன் யோசனைகளை விக்கினேஸ்வரனிடம் கையளித்திருந்தது. அந்த வரைவு தமிழில் மொழி பெயர்க்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. விக்கினேஸ்வரன் அந்த யோசனைகளை ஏற்றுக்கொண்டு அரசாங்கத்துக்கு அதைச் சமர்ப்பிப்பாரா அல்லது தனது சொந்தத்தில் மாற்றங்களைச் செய்வாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், விக்கினேஸ்வரனிடமிருந்தும் அவரது நேச சக்திகளிடமிருந்தும் கருத்துக்களைப் பெறாமல் நிபுணர்குழு சுயாதீனமாக செயற்பட்டிருக்குமென்று கருதமுடியவில்லை.
அண்மைக்காலமாக முதலமைச்சரிடம் காணக்கூடியதாக இருக்கும் கோட்பாட்டுக் கூர்ப்பையும் அவரின் தற்போதைய கூட்டாளிகளையும் மனதிற்கொண்டு நோக்கும் போது அந்த யோசனைகள் வரைவின் உண்மையான சிற்பி விக்கினேஸ்வரனாக இருந்தால், எவரும் ஆச்சரியப்படுவதற்கில்லை. வரைவு பல்வேறு காரணங்களுக்காக பிரச்சினைக்குரியதாக இருக்கிறது. இந்தப் பிரச்சினைகளை ஆராயுமுன்னதாக, தமிழ் மக்கள் போரவையின் நிபுணர் குழுவினர் தங்களது தலைவருக்கு எத்தகைய யோசனைகளை கையளித்திருக்கின்றனர் என்பதை விளங்கிக் கொள்வது பயனுடையதாக இருக்கும்.
இலங்கையில் சமஷ்டி அரசொன்று உருவாக்கப்பட்டவேண்டுமென்ற யோசனையை நிபுணர்குழு முன்வைக்கின்றது என்பதை எடுத்த எடுப்பிலேயே புரிந்துகொள்ள முடிகிறது. ‘இலங்கை ஒரு சமஷ்டிக் குடியரசாக இருக்கும்’ என்று ஆட்சிமுறை என்ற தலைப்பின் கீழ் (பக்கம் 4) யோசனை கூறப்படுகிறது. இரண்டாவது சபையொன்றுக்கான (செனட்) யோசனையும் முன்வைக்கப்பட்டிருக்கிறது. எனவே நிபுணர் குழு சமஷ்டி வாதத்தைப்பற்றியே பேசுகிறது என்பது தெளிவாகிறது. சமஷ்டி முறையொன்றையே தமிழ் மக்கள் பேரவை யோசனையாக முன்வைக்கின்றதென்றால் ஏன் அது யோசனைகள் வரைவு ஒன்றைத் தயாரிக்க வேண்டும்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே அதன் அரசியல் சுலோகமாக சமஷ்டிவாதத்தை ஏற்றுக்கொண்டிருக்கிறது. அதனால், தமிழ் மக்கள் பேரவையின் யோசனைகளில் வேறு ஏதோ இருக்கிறது. இங்குதான் உன்னிப்பாக அவதானிக்க வேண்டிய தேவை எழுகிறது.
கூட்டாட்சி அரசு
யோசனைகள் வரைவை மிகவும் அவதானமாக வாசிக்கும் போது தமிழ் மக்கள் போரவையின் நிபுணர்குழு உண்மையில் தளர்வானதொரு கூட்டாட்சி முறையையே (Confedaral State) பிரேரித்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கிறது. முதலில், தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமையைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்ற திரும்பத் திரும்ப வலியுறுத்துகின்ற வரைவு அந்த உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டுமென்று கூறுகிறது. தமிழ் மக்களின் தனித்துவமும் அவர்களின் சுயநிர்ணய உரிமையும் அங்கீகரிக்கப்பட வேண்டும் (பக்கம் 1) தமிழர் பராதீனப்படுத்த முடியாத சுயநிர்ணய உரிமையுடனான தனித்துவமான ஒரு மக்கள் பிரிவினர்; தங்களின் சுயநிர்ணய உரிமையுடனான தனித்துவமான ஒரு மக்கள் பிரிவினர். தங்களின் சுயநிர்ணய உரிமையை மதித்து உறுதிப்படுத்துகின்ற ஐக்கியப்பட்டதும் பிரிவுபடாததுமான ஒரு இலங்கை மீது தமிழர்கள் பற்றுறுதியைக் கொண்டிருப்பார்கள் (பக்கம் 4) என்று கூறப்படுகின்றது.
இரண்டாவதாக, உச்ச அளவு அதிகாரப்பரவலாக்கல் வடிவம் ஒன்றுக்கான கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது. உதாரணமாக, தமிழர்கள் கூடுதல்பட்ச சுயாட்சியை (Maximum Self Government) கொண்டவர்களாக இருக்க வேண்டும். (பக்கம் 6) என்று கூறப்பட்டிருக்கிறது. வடக்கு – கிழக்கைப் போன்று நாட்டின் வேறு எந்தப் பகுதியும் கூடுதல்பட்ச சுயாட்சிக்கான உரிமைக் கோரிக்கையை முன்வைக்கலாகாது என்பது அங்கீகரிக்கப்பட வேண்டுமென்று தமிழ் மக்கள் பேரவையின் நிபுணர்குழு வலியுறுத்தியிருப்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதாகும். உச்ச அளவு அதிகாரப்பரவலாக்கத்துக்கான கோரிக்கைக்கான இன்னொரு உதாரணத்தை வெளியுறவுக் கொள்கையுடன் தொடர்புடைய யோசனைகளில் காணக்கூடியதாக இருக்கிறது.
வெளியுறவுக்கொள்கை சமஷ்டி (மத்திய) பட்டியலுக்கான விடயதானமாக இருக்கும் (பிரிவு 12.1) என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால், மாநிலத்துக்கான பட்டியலில் உள்ள விடயதானம் ஒன்று வெளியுறவுக் கொள்கைத் தீர்மானமொன்றுக்கு உள்ளாகும் போது (மாநிலங்களின் அதிகாரங்கள் அல்லது அவற்றின் அத்தியாவசியமான நலன்களுடன் சம்பந்தப்பட்ட) வெளியுறவுக்கொள்கை தீர்மானங்களை எடுக்கும் செயன்முறைகளில் மாநிலங்கள் பங்கேற்கக் கூடியதாக இருத்தல் வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது.
சமஷ்டி அரசாங்கம் (மத்திய) மாநிலங்களுக்கு முன்கூட்டியே நேரகாலத்தோடு முழுமையாக அறிவித்து ஆலோசனை கலக்க வேண்டும். மாநிலங்களின் நிலை அவற்றின் அதிகாரங்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் குறிப்பிடத்தக்களவுக்கு வலுவானதாக இருக்கும் இந்த விவகாரங்களில் பொருத்தமான சர்வதேச பேச்சுவார்த்தைகளில் மாநிலங்கள் பங்கேற்கும் என்று வரைவில் கூறப்பட்டிருக்கிறது. மாநிலங்களின் பொருளாதார, கல்வி மற்றும் கலாசார நலன்களை மேம்படுத்துவதற்கு இலங்கையின் தூதரகங்களில் தனியான பிரிவு ஒன்று இருக்க வேண்டும்மென்றும் தமிழ் மக்கள் பேரவையின் நிபுணர் குழு விரும்புகிறது (பக்கம் 11)
சுருக்கமாகக் கூறுவதானால், வரைவின் பல பிரிவுகள் குறிப்பாக காணி, பொலிஸ் அதிகாரம், கல்வி, பொதுச்சேவை போன்ற விவகாரங்களில் ஒரு அரசு இரு நிர்வாகங்கள் (One State two administrations) என்று அழைக்கப்படக்கூடிய யோசனையை முன்வைக்கின்றது போலத் தெரிகிறது. அதாவது வடக்கு – கிழக்கிற்கு ஒரு நிர்வாகம். நாட்டின் ஏனைய பகுதிக்கு ஒரு நிர்வாகம்
இந்த யோசனைகள் எல்லாம் எனது அபிப்பிராயத்தின் படி நான்கு முக்கிய பிரச்சினைகளைக் கிளப்புகின்றன. (1) அவை பெரும்பாலும் நிராகரிக்கப்பட்ட யோசனைகள் (2) இனத்துவ சமூகங்கள் மத்தியிலான நல்லிணக்க நிலையைப் பாதிக்கக்கூடிய ஆற்றல் கொண்டவை (3) வடக்கில் உள்ள மக்களின் பாதுகாப்புக்கு ஊறுவிளைவிக்கக் கூடியவையாக அமையலாம் (4) யதார்த்தபூர்வமற்றவை.
நிராகரிக்கப்பட்ட யோசனைகள்
போரின் முடிவும் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட விதமும் இலங்கையில் தனியான அரசொன்றை தமிழர்கள் ஒரு போதுமே கொண்டிருக்க முடியாது என்பதை நிரூபித்திருக்கின்றன. இந்த விளக்கப்பாடுதான் தமிழர்களின் பிரதான அரசியல் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் 2010 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் விஞ்ஞாபனத்தில் உத்தியோகபூர்வமாக தனிநாட்டுக் கோரிக்கையை கைவிடுவதற்கு நிர்ப்பந்தித்தது. அத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்முறையையும் நிராகரித்துவிட்டது. சமஷ்டி முறையை அடிப்படையாகக் கொண்ட தீர்வொன்றை ஏற்றுக்கொள்ளத் தயாராயிருப்பதாகவும் கூட்டமைப்பு பிரகடனம் செய்தது.
2010 தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு அமோகமாக வாக்களித்தார்கள், 2015இல் சமஷ்டித்தீர்வு மீதான பற்றுறுதியை கூட்டமைப்பு மீளவும் வலியுறுத்தியது. அதேவேளை விக்கினேஸ்வரன் சுயநிர்ணய உரிமைக்காகக் குரலெழுப்பிய கட்சிகளை ஆதரித்தார். விக்கினேஸ்வரன் விடுத்த அழைப்பை தமிழ் மக்கள் முற்றாக நிராகரித்தார்கள். சுயநிர்ணய உரிமைக் கோரிக்கையை முன்வைத்து தேர்தலில் நின்ற கட்சிகளினால் ஒரு ஆசனத்தைக் கூட வெற்றிபெற முடியாமல் போனது. எனவே, தமிழ் மக்கள் பேரவையின் நிபுணர் குழுவின் வரைவை தமிழ் மக்களின் யோசனைகள் என்று முன்வைப்பதற்கான அருகதை விக்கினேஸ்வரனுக்கும் அந்தப் பேரவைக்கும் கிடையாது. அந்த வரைவை வைத்துக்கொண்டு விக்கினேஸ்வரன் என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டியிருக்கிறது.
நல்லிணக்கத்தை மலினப்படுத்தல்
இரண்டாவதாக, ஐக்கியப்பட்ட நாடொன்றுக்குள் சமூகங்கள் வாழக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதே இலங்கையில் இனங்கள் மத்தியிலான நல்லிணக்க நிலைக்கான முன்நிபந்தனைகளில் ஒன்றாகும். தமிழர்கள் இன்னமும் தனிநாடொன்றுக்கான சிந்தனையுடனேயே செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணம் அந்த வடிவிலான அதிகாரப்பரவலாக்கத்தையும் இன நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படக்கூடிய நடவடிக்கைகளையும் ஏற்றுக்கொள்வதில் இருந்து சிங்கள மக்களைத் தடுக்கும், அதிகாரப்பரவலாக்கத்துக்கான நியாயபூர்வமான எந்தவொரு திட்டமும் இல்லாமல் தமிழர்கள் சிங்களவர்களுடனான தங்களின் வேறுபாடுகளை தீர்த்து நல்லிணக்கமாக வாழ இயலாமல் போகும்.
தனிஅரசு ஒன்றுக்கான உண்மையான கோரிக்கைகள் அல்லது தனி அரசுக்கோரிக்கை முன்நோக்கப்படுகிறது என்ற எண்ணமோ முரண் நிலையை நீடிப்பதற்கே உதவும். அத்துடன் தீவிர தேசியவாத சிங்களக் குழுக்கள் தமிழ் மக்கள் பேரவையின் யோசனைகளைப் பயன்படுத்தி தமிழ் மக்கள் மீதான பாரபட்சத்தையும் அரசியல் தாக்குதல்களையும் நியாயப்படுத்தும் என்பது நிச்சயம். தமிழ் மக்கள் பேரவையின் யோசனைகள் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை தாமதிக்கும் அல்லது பாதிக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது.
தமிழரின் பாதுகாப்பு
மூன்றாவதாக விடுதலைப்புலிகள் அழித்தொழிக்கப்பட்டு, போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னரும் கூட, முன்னைய ராஜபக் ஷ அரசாங்கம் வடமாகாண மக்களின் மீதான இறுக்கமான இராணுவக் கட்டுப்பாட்டைத் தொடர்ந்து பேணியது. புதிய அரசாங்கம்தான் சில கட்டுப்பாடுகளைத் தளர்த்தி பெருமளவுக்கு வழமை நிலை திரும்புவதை அனுமதிக்கத் தீர்மானித்தது. இராணுவ கட்டுப்பாடுகள் நீக்கப்பட வேண்டும் என்பதே தமிழ் மக்களின் இடையறாத கோரிக்கையாக இருந்துவருகின்றது.
தமிழர்கள் இன்னமும் பிரிவினைக் கோரிக்கையையே நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டக் கூடிய சான்றுகள் தற்போதைய அரசாங்கத்தினாலோ அல்லது எதிர்காலத்தில் பதவிக்கு வரக் கூடிய வேறு ஒரு அரசாங்கத்தினாலோ கண்டிப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் உட்பட சிலவகையான கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டுவரப்படுவதை நியாயப்படுத்துவதாக அமைந்துவிடும். அது மக்களின் குறிப்பாக வடமாகாணத்தில் வாழும் தமிழர்களின் சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் பாதிப்புக்குள்ளாக்கிவிடும். போரின் போது உயர்பாதுகாப்பு வலயத்தை உருவாக்குவதற்காக இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விடுவிப்பது போன்ற நடவடிக்கைகளை அரசாங்கம் தாமதிக்கவும் கூடும்.
2009 மே மாதத்துக்கு முன்னரான உலகம்
இறுதியாக, தமிழ் மக்கள் பேரவையின் வரைவும் அதில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளும் நாட்டில் இன்று நிலவுகின்ற அரசியல் – இராணுவ யதார்த்த நிலைமைகளைப் பற்றிய விளக்கப்பாடு அவர்களுக்கு இல்லை என்பதை வெளிக்காட்டுகிறது. வட மாகாணத்துக்கு அதிகாரங்களைப் பரவலாக்கம் செய்யவேண்டுமென்ற எந்த நெருக்குதலும் தற்போது இலங்கை அரசாங்கத்துக்கு இல்லை. கூட்டு எதிரணியிடமிருந்தும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற ஏனைய சிங்கள தேசியவாதக் குழுக்களிடமிருந்தும் வரக்கூடிய எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது நியாயபூர்வமான அதிகாரப்பரவலாக்கல் திட்டமொன்றை புதிய அரசியலமைப்பில் அறிமுகப்படுத்தக் கூடியதாக இருக்குமா என்பது சந்தேகத்துக்குரியதே.
எனவே, தமிழ் மக்கள் பேரவையினால் முன்வைக்கப்பட்டுள்ள உச்ச அளவு அதிகாரப்பரவலாக்க யோசனைகள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு வாய்ப்பு இல்லை. அரசாங்கம் ‘இல்லை’ என்று மறுத்தால் என்ன செய்வதற்கு தமிழ் மக்கள் பேரணி உத்தேசித்திருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. அரசாங்கம் மீது நெருக்குதலைப் பிரயோகிக்கக் கூடிய போராட்டமொன்றை பேரவை முன்னெடுக்குமா? கிளர்ச்சியை தோற்றுவிக்குமா? இந்தக் கட்டுரையாளர் அறிந்தவரை, ஆர்ப்பாட்டம் செய்த வரலாறு எதையும் கொண்டவரல்ல விக்கினேஸ்வரன்.
பொஸ்னியா – ஹெர்சோகோர்வினை நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக கைச்சாத்திடப்பட்ட டேய்ரன் உடன்படிக்கை அல்லது வட அயர்லாந்து நெருக்கடிக்குத் தீர்வுகாண்பதற்காகச் செய்து கொள்ளப்பட்ட பெரிய வெள்ளி உடன்படிக்கை போன்றதொரு உடன்படிக்கையை இலங்கை அரசாங்கம் அரசியலமைப்பை வரைவதற்கு முன்னதாக தமிழ்த் தலைமைத்துவத்துடன் (விக்கினேஸ்வரனுடனாக இருக்கலாம்) செய்துகொள்ள வேண்டுமென்று முன்வைக்கப்பட்டிருக்கும் யோசனை மிகவும் கவனத்தைத் தூண்டுவதாக இருக்கிறது. டேய்ரன் உடன்படிக்கையும் பெரியவெள்ளி உடன்படிக்கையும் நெருக்கடிகளில் சம்பந்தப்பட்ட தரப்புக்கள் இராணுவ வலிமையைப் பயன்படுத்தக்கூடிய ஆற்றலுடன் இருந்த வேளையில் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காகக் கைச்சாத்திடப்பட்டவை. இலங்கையில் விடுதலைப்புலிகள் இப்போது இல்லை. தமிழர்களிடம் இராணுவ வல்லமையும் இல்லை.
R-06




