செய்திகள்
தங்க நகைகள் வடக்கு மக்களிடம் கையளிக்கப்படும்
இறுதிக்கட்ட யுத்தத்தில் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட வடக்கு மக்களின் தங்க நகைகளை மீண்டும் அம்மக்களிடம் கையளிக்க அரசு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என உறுதியளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இதற்காக பாதுகாப்பு அமைச்சர், மத்திய வங்கி ஆளுநர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண எம்.பி.க்களுடன் கலந்துரையாடப்படும் என்றும் கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற பிரதமரிடம் கேள்வி கேட்கும் நேரத்தின் போது ஜே.வி.பி. தலைவரும் எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவுமான அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஜே.வி.பி. எம்.பி. நளிந்த ஜயதிஸ்ஸ, தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. சிறீதரன் ஆகியோரால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இவ்வாறு பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இது தொடர்பில் மேலும் கூறுகையில் ;
யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளிடமிருந்து 150 கிலோ கிராம் தங்கம் இராணுவத்தினரால் மீட்கப்பட்டது. இத்தங்கத்தின் பெறுமதி 131 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும். இதில் மத்திய வங்கியின் கண்காணிப்பில் 32 கிலோ தங்கம் அதற்குரிய மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 80 கிலோ தங்கம் உரியவர்களை கண்டுபிடிக்க முடியாத நிலையில் இராணுவத்தினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.
வட பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும் அப்பகுதி மக்களின் தங்க நகைகளை மீளக் கையளிப்பதற்குமான பொறுப்பு இப்பாராளுமன்றத்திற்குண்டு. எனவே இது தொடர்பில் நிலையியல் குழுக்களின் உதவிகள் பெறப்படும். அத்துடன் குழுவொன்றும் அமைக்கப்படும்.
அதுமட்டுமன்றி தங்க நகைகளை வடபகுதி மக்களிடம் மீளக் கையளிப்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர், மத்திய வங்கி ஆளுநர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடபகுதி எம்.பி.க்களுடன் மிக விரைவில் கலந்துரையாடப்படும். இதன்மூலம் அவர்களின் உதவிகள், ஆலோசனைகளைப் பெற்றவுடன் தங்க நகைகள் உரியவர்களிடம் கையளிக்கப்படும் என்றார்.
n10




