அனுப்பும் கடிதங்களுக்கு பதில் அனுப்ப தெரியாத வங்குரோத்து அரசியல்வாதிகள்! சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு ஆதங்கம்
அனுப்பும் கடிதங்களுக்கு பதில் அனுப்ப முடியாத வங்குரோத்து நிலையில் அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் இருக்கின்றனர் என சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் செயற்குழு உறுப்பினர் க.அருந்தவராசா தெரிவித்துள்ளார்.
வவுனியா கமநல சேவைகள் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஊடகசந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,
வவுனியா, கற்குளம் கிராமத்திற்கான 5 கிலோமீற்றர் தூரமான பாதையை புனரமைப்பு செய்வதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நாம் முன்னிறுத்தியுள்ளோம். இவ்விடயம் தொடர்பாக நாம் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், மற்றும் அரச திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு 16 கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது. எனினும் சிவசக்தி ஆனந்தன் பாராளுமன்ற உறுப்பினர் மேற்படி கடிதம் தொடர்பாக தங்களது கோரிக்கையை வட மாகாண அமைச்சர் டெனிஸ்வரனுக்கு அனுப்பி வைத்திருக்கின்றேன் என தெரிவித்திருந்தார்.
அத்துடன் சிறிடெலோ கட்சியின் செயலளார் கா.உதயராசா பத்திரிகை செய்தியை வெளியிட்டிருந்தார். மற்றும் டெனிஸ்வரன் அமைச்சர் இவ் வீதி பிரதேசசபைக்கு உட்பட்ட விடயமாகினும் இது தொடர்பாக ஆவண செய்வேன் என தெரியப்படுத்தியிருந்தார். எனினும் ஏனையவர்கள் எமக்கு எந்தவிதமான பதில்களையும் அனுப்பவில்லை. இந் நிலையில் நாம் வேண்டிக்கொள்வதெல்லாம் சமூக நாகரீகம் தெரிந்தவர்களாக நாம் எம்மை மாற்றிக்கொள்ளவேண்டும். எழுதப்பட்ட கடிதம் கிடைத்தது என்று பதில் எழுதக்கூட முடியாமல் வங்குரோத்தான நிலையில் இருப்பது மிகவும் கவலையான விடயமாகவே உள்ளது.
அத்துடன் வவுனியா மாவட்டத்தில் பல சமூகம் சார்ந்த விடயங்களை எமது சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு கவனத்தில் எடுத்துள்ளது. அதற்கான வேலைத்திட்டத்தை நாம் மேற்கொண்டு எடுத்துச்செல்ல நாம் இருக்கின்றோம். அவற்றில் அண்மைக்காலத்தில் வேதனைக்குரிய விடயமாக மாறிவரும் சிறுவர் துஸ்பிரயோகம் என்பது பயங்கரமான விடயமாக மாறியுள்ளது. சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்ந்துகொண்டே வருகின்றது. ஒவ்வொரு துஸ்பிரயோகம் நடக்கும் போதும் நாம் ஊர்வலங்களை நடாத்துகின்றோம். அது எமது கண்டனங்கைள தெரிவிப்பதற்கும் சர்வதேசத்திற்கு தெரிவிப்பதற்காக நடத்தினாலும் தொடர்ந்தும் இவ்வாறான சம்பவங்கள் நடக்கும்போது தொடர்ந்தும் ஊர்வலங்களை நாம் நடத்தப்போகின்றோமா என்கின்ற கேள்வி எம்மிடம் இருக்கின்றது.
எனவே இதற்கான காரணங்களை ஆராய்கின்றவர்களாக நாம் இருக்கின்றோம். அந்தவகையில் சிறுவர் துஸ்பிரயோகம் மட்டுமல்லாது பெண்களின் பாதுகாப்பு தொடர்பிலும் கவனம் செலுத்தவேண்டும். வவுனியா மாவட்டத்தில் ஏறத்தாழ 15 மதுபான சாலைகள் இருக்கின்றன. இவை எமது மக்களுக்கு எதிர்வளைவுகளை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதுடன் அவை ஆலயங்கள், பாடசாலைகள், மக்கள் செறிந்து வாழும் கிராமங்களுக்கு அருகில் நடத்துவது என்பது மிகவும் மோசமான வியடமாக உள்ளது. இவை அகற்றப்படவேண்டும் என்பதுடன் மக்கள் அதிகமாக உள்ள இடங்களில் மதுபானசாலைகள் இல்லாமல் செய்யப்படவேண்டும் என்பது எமது கோரிக்கை.
தவசிகுளம், மருக்காரம்பளை, செட்டிகுளம் போன்ற இடங்களில் எல்லாம் சாதாரணமாக மதுபானசாலைகள் இயங்கி வருகின்றது. இது மோசமான நிலைமையாக உள்ளது. அத்துடன் போதைப்பொருட்கள், மாபா கடைகள் எல்லாம் வவுனியாவில் பகிரங்கமாகவும் மாணவர்களிடம் கொடுத்து விற்கும் அளவிற்கும் காணப்படுகின்றது. இது மாணவாகளையும் இளைஞர்களையும் எந்தளவு தூரத்திற்கு பாரதூரமாக கொண்டு செல்லும் என்பது எல்லோருக்கும் தெரியும்.
அண்மைக்காலமாக வவுனியாவில் புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள விடயம் மசாஜ் நிலையங்கள். இரண்டு நாட்களுக்கு முன்பு கூட வேப்பங்குளத்தில் இருந்து மசாஜ் நிலையம் எரியூட்டப்பட்டுள்ளது. நகரத்தின் மத்தியிலும் மசாஜ் நிலையம் இயங்குகின்றது. இது ஆயுர்வேதம் சம்பந்தப்பட்டாக கூறப்பட்டாலும் இது பாலியல் நோக்கம் கொண்டதாகவே உள்ளது. ஏனெனில் இங்கு ஆயுர்வேதம் தொடர்பான வைத்தியர்கள் எவரும் இல்லாத நிலையில் இயங்குகின்றது. ஆகவே இதனை நாம் வவுனியாவில் இயங்க அனுமதிக்க வேண்டுமா.
இந் நிலையில் இவற்றை விட்டுவிட்டு பிரச்சனைகள் வரும்போது ஊர்வலங்களை நடத்துவது எந்த அளவிற்கு சிறப்பானதாக அமையும். எனவே சமூக நீதிக்கான வெகுஜன அமைப்புடன் சமூகம் சார்ந்து சிந்திக்கின்றவர்கள் ஒன்றிணைந்து செயற்பட முன்வரவேண்டும் என தெரிவித்தார்.
N5





