3 மாதங்களில் நான் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவேன்;வலிகாமத்தில் ஜனாதிபதி வாக்குறுதி
யாழ்.வலிகாமம் வடக்கு மக்களை மீள்குடியேற்ற 6 மாதங்கள் கால அவகாசம் தாருங்கள் என தேசிய நத்தார் தின நிகழ்வில் கேட்டிருந்தேன். அதில் 3 மாதங்கள் நிறைவடைந்து விட்டன மீதமாக உள்ள 3 மாதங்களில் மக்களுடைய காணிகளை மக்களிடமே வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
மேலும் தங்களுடைய நிலங்களை தங்களிடமே கொடுங்கள் என மக்கள் கேட்கிறார்கள். அந்த பொறுப்பையும், மக்கள் எங்கள் மீது கொண்டிருக்கும் எதிர்பார்ப்பையும் நாங்கள் நிறைவேற்றுவோம் எனவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 26 வருடங்களாக உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் முடக்கப்பட்டிருந்த காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி இன்றைய தினம் மக்களிடம் கையளிக்கப்பட்டது.
நடேஸ்வரா கல்லூரி வளாகத்திலேயே நடைபெற்ற மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நிகழ்வில் மேலும் அவர் உரையாற்றுகையில்,
மீள்குடியேற்ற அமைச்சினால் அமைக்கப்படும் வீடுகளை பார்ப்பதற்கும், மக்களுடைய காணிகளை வழங்குவதற்கும் நான் இங்கே வந்திருக்கிறேன். முதலில் மீள்குடியேற்ற அமைச்சினால் அமைக்கப்பட்டுள்ள இரு வீடுகளை பார்க்கச் சென்றிருந்தபோது அங்கே மக்கள் கேட்டிருந்தார்கள் எங்களுடைய காணிகளை எங்களிடம் கொடுங்கள் என. அந்த மக்கள் மற்றவர்களுடைய காணிகளை கேட்கவில்லை.
அவர்கள் தங்கள் சொந்தக் காணிகளையே கேட்கிறார்கள். எனவே அந்த பொறுப்பை, மக்கள் எங்கள் மீது கொண்டிருக்கும் நம்பிக்கைகளை நாங்கள் நிறைவேற்ற வேண்டும்.
மேலும் மக்களுடைய காணிகளை மக்களிடம் வழங்குவதே எங்கள் அரசாங்கத்தின் முக்கியமான நோக்கமாகும் என்பதுடன் அண்மையில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இங்கே வந்துவிட்டு என்னைச் சந்தித்தபோது அவர் என்னிடம் கேட்டுக் கொண்ட முக்கியமான விடயம் மக்களுடைய நிலங்களை மக்களிடமே வழங்குங்கள் என்பதேயாகும்.
இந்நிலையில் தேசிய நத்தார் தின நிகழ்வில் நான் பேசியபோது கூறியிருந்தேன். 6 மாதங்களுக்குள் மக்களுடைய காணிகளை வழங்குவேன் என அதில் 3 மாதங்கள் நிறைவடைந்திருக்கின்றன.
மிச்சமாக உள்ள 3 மாதங்களில் நான் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை நிச்சயமாக எடுப்பேன்.
உங்களுடைய காணிகளை நான் உங்களிடமே கொடுக்கும்போது தென்னிலங்கையில் சிலர் இனவாதம் பேசுகிறார்கள்.
விமர்சனங்களை முன்வைக்கின்றார்கள், எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள். அவர்களுக்கு நான் மீண்டும் சொல்வேன். அங்கிருந்து பேசிக் கொண்டிருப்பதில் பயனில்லை. இங்கே வாருங்கள். மக்களை பாருங்கள் அதற்குப் பின்னர் பார்க்கலாம்.
தேசிய நல்லிணக்கம், இன ஒற்றுமை முயற்சிகளை வடக்கில் இருந்தல்ல. தெற்கில் இருந்தே தொடங்க வேண்டும். தெற்கில்தான் இனவாதிகளும், கடும்போக்காளர்களும் அதிகம்.
தேசிய நல்லிணக்கம், இன ஒற்றுமை முயற்சிகளை செய்கின்ற இயக்கங்கள், நிறுவனங்கள் வடக்கு மாகாணத்திற்கு வருகிறார்கள், வடக்கு மக்களிடம் இருந்தே தொடங்கவேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால் அதனை தெற்கில் இருந்தே தொடங்க வேண்டும்.
தெற்கு மக்கள் மத்தியிலேயே இனவாதிகளும், கடும்போக்காளர்களும் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
சமத்துவம், சமவுரிமை கொண்ட மக்களையும், அந்த மக்களை கொண்ட நாட்டையும் உருவா க்குவதற்கு நாங்கள் முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம்.
இந்நிலையில் எங்கள் மீது எதிர்ப்புக்களும், விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. நாங்கள் அதனை பொருட்படுத்திக் கொள்ளவில்லை. ஆயினும் அவ்வாறான எதிர்ப்புக்களை, விமர்சனங்களை முன்வைப்பவர்கள் தங்களுடைய பொறுப்புக்களை உணர்ந்து கொண்டு செயற்படவேண்டும்.
எதிர்ப்புக்களையும், விமர்சனங்களையும் யார் வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் தங்கள் பொறுப்பு க்களை உணர்ந்து ஒற்றுமை மிக்க நாட்டை உருவாக்குவதே அனைவரினதும் கடமையாகும். என்பதை நான் அவர்களுக்கு சுட்டிக்காட்டுவதற்கு விரும்புகிறேன் என்றார்.
n10
















