நடிகர் சங்கத்தில் இருந்து சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோரை நீக்க ஆலோசனை!
நடிகர் சங்க கட்டட முறைகேடு தொடர்பாக முன்னாள் நடிகர் சங்க நிர்வாகிகள் சரத்குமார், ராதாரவி, வாகை.சந்திரசேகர் உள்ளிட்டோரை நடிகர் சங்கத்திலிருந்து நீக்குவது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழுவில் விரிவாக விவாதிக்கபட்டுள்ளது.
சென்னை நாரத கான சபாவில் நடிகர் சங்கம் சார்பில் நலிந்த கலைஞர்களுக்கு குருதட்சணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், ஏ.சி.எஸ்.மருத்துவக் கல்லூரி சார்பில் நடிகர் சங்க உறுப்பினர்கள் சிகிச்சை பெறுவதற்கான மருத்துவ அட்டைகள் 3 ஆயிரத்து 500 கலைஞர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கபட்டிருப்பதாக தெரிவித்தார். நடிகர் சங்க கட்டட முறைகேடு தொடர்பாக முன்னாள் நடிகர் சங்க நிர்வாகிகளான சரத்குமார், ராதாரவி, வாகை.சந்திரசேகர் உள்ளிட்டோரை நீக்குவது தொடர்பாக விவாதிக்கபட்டிருப்பதாகவும், விரைவில் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட இருப்பதாகவும் தெரிவித்தார். முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய விஷால், இன்னும் 2 ஆண்டுகளில் தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக கட்டடம் கட்டி முடிக்கப்படும் என்றும் அவர் உறுதிப்பட தெரிவித்தார்.
N5




