நாவல்,சிறுகதைகளை தருகின்ற பெண் படைப்பாளிகள் தற்போது குறைவு என்கிறார் கவிஞர் வேலணையூர் தாஸ்: ஒரு நேர்காணல்
நேர்கண்டவர்: பஸ்தீனா
நாவல், சிறுகதை போன்ற படைப்புக்களை தருகின்ற பெண் படைப்பாளிகள் தற்போது குறைவு என்று கூறும் யாழ் இலக்கிய குவியத்தின் தலைவரும் கவிஞருமாகிய வேலணையூர் தாஸ், முகநூலில் பல பெண்கள் எழுதுகிறார்கள் என்றும் ஆனால் பொது வெளியிலே அவர்களின் இலக்கிய செயற்பாடுகள் குறைவாகவே இருப்பதாக சொல்கிறார்.
வாசிப்பு ஆர்வம், இலக்கிய ஆர்வம் என்பவற்றை இளையவர்களிடம் ஏற்படுத்தும் முயற்சி மாணவர்களிடம் இருந்தே ஆரம்பிக்க வேண்டும் என்றும் கூறும் தாஸ் இதற்கான பொறுப்பு ஆசிரியர்களிடமே இருக்கிறது என்றும் கூறுகிறார்.
தாஸை அவரது அவரது அலுவலகத்தில் சந்தித்து உரையாடியபோது அவர் எம்முடன் யாழ்ப்பாணத்தின் இலக்கிய வளர்ச்சியின் பல விடயங்கள் குறித்து ஆழமாக பேசினார்:
1.நீங்கள் யாழ் இலக்கியக் குவியத்தின் தலைவராக இருகின்றீர்கள். அண்மைக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல இலக்கிய நிகழ்வுகளை உங்கள் குவியம் ஏற்பாடு செய்திருக்கின்றது .இதன் பின்னணியில் யாழ்ப்பாணத்தின் இலக்கியப் போக்கு எவ்வாறு இருகின்றது ?
ஆம், பல இலக்கிய நூல்களுக்கான அறிமுகங்களையும் விமர்சன நிகழ்வுகளையும் நாம் ஏற்பாடு செய்திருக்கின்றோம் .புலம்பெயர்ந்த எழுத்தாளர்களும் ஈழத்தில் தொடர்ச்சியாக எழுதிவருவோருடைய படைப்புக்கள் பற்றிய நிகழ்வாகவே அவை இருந்தன. இந்த வகையில் தான் இலக்கியச்சூழல் அவ்வளவு செழிப்பானதாக காணப்படவில்லை . ஏற்கனவே எழுதியவர்களே தொடர்ந்தும் எழுதிக்கொண்டு இருகின்றார்கள். இளைஞ்சர்கள் புதிதாக படைப்புகளை கொண்டுவர வேண்டும் . அப்போதுதான் ஆரோக்கியமான இலக்கியச்சூழல் உருவாகும் .
2.புதியவர்கள் எழுத்துலகில் பிரவேசிக்கவில்லை என்று கூறி இருந்தீர்கள் , ஆனால் முகநூலிலும் சஞ்சிகைகளிலும் பல புதியவர்கள் எழுதுகிறார்களே இதனைக் குறித்து உங்கள் கருத்து.
புதியவர்கள் எழுதவில்லை என்பது அல்ல. அவர்களது படைப்பாக்கங்கள் நூலுருவாக வெளிவருவது மிக மிக குறைவாக இருக்கிறது .அண்மைக்காலத்தில் இளைஞர்களது கூட்டுத் தொகுப்பாக வந்த மயான காண்டம் ,நேதாமோகன் ,லவன் நிலவன் போன்ற சிலரது கவிதைதொகுதிகளும் அனோயனுடைய சிறுகதை தொகுதி போன்றவையே புதிய படைப்புகளாக வெளிவந்துள்ளன . இந்த நிலைமையானது இலக்கிய வளர்ச்சியின் ஒரு தேக்க நிலையை காட்டுகின்றது எனலாம் .
3. புதிய படைப்புக்கள் தோன்றாமைக்கு என்ன காரணம் ? போர் நின்று விட்டதால் காத்திரமான பாடுபொருள் இல்லாமல் இருக்கின்றதா ?
வாசிப்பு குறைந்து விட்டதே முக்கிய காரணம் எனலாம் . இலத்திரனியல் ஊடகங்களின் அதிக பாவனை வாசிப்பு குறைந்தமைக்கு ஓர் காரணம் எனலாம் . ஆழமான வாசிப்பே சிறந்த படைப்புக்களை உருவாக்கும் .போர் நின்று இருக்கிறதே தவிர எமது பிரச்சினைகள் தீர்ந்து விடவில்லை . வாழ்வின் பிரச்சினைகள் தீர்ந்து விடுவதில்லை. எனவே பாடுபொருள் இல்லை என்பதை ஏற்க முடியாது .
4.இலக்கியம் என்பது கவிதை ,கதை , நாடகம் ,இசை என ஒரு விரிந்த படைப்பை உடையது . இதில் தங்களது இலக்கியக் குவியம் எத்தகைய இலக்கிய முயற்சிகளை ஊக்குவித்து வருகின்றது ?
நீங்கள் சொன்னது போல இலக்கியக் குவியமும் கவிதை , இசை , நாடகம் என எல்லாத் துறைகளையும் முன்னெடுக்க வேண்டும் என்றே நினைக்கின்றது .இருந்தாலும் கதை ,கவிதை ,கட்டுரை சார்ந்த அரங்குகளையே ஏற்பாடு ஏற்பாடு செய்து வந்திருகின்றது . இசை, நாடகம் போன்ற துறைகளை ஊக்குவிப்பதற்கான திட்டங்களும் இருக்கின்றது .ஆனால் அவற்றை நடைமுறைபடுத்துவதற்கு இலக்கிய செயற்பாட்டாளர்களின் பற்றாக்குறை தடையாக உள்ளது .
5.ஈழத்து இலக்கியத்துறையில் கவிதை எழுதுபவர்களே அதிகமாக இருகின்றார்கள், நாவல் ,சிறுகதை எழுதுபவர்கள் மிகக்குறைவாக இருக்கிறார்கள் . இது பற்றிய உங்கள் கருத்து யாது ?
உண்மைதான். அண்மையில் மறைந்த செங்கையாழியான் பல நாவல்களை ஈழத்து இலக்கிய உலகிற்கு அளித்திருந்தார் .70,80 களில் இருந்தளவிற்கு நாவல் , சிறுகதை எழுதுபவர்களின் தொகை குறைவாகத்தான் இருக்கிறது .கருணைரவி ,யோகர்ணன் , அனோஜன் பாலகிருஷ்ணன் , தமிழ் கவி போன்றோர் அண்மைக் காலங்களில் கனதியான நாவல் , சிறுகதை படைபுக்களை தந்துள்ளார்கள் . ஈழத்தில் இருப்பவர்களை விட புலம்பெயர் எழுத்தாளர்களிடமிருந்து கூடுதலான நாவல் , இலக்கியம் வெளிவந்துள்ளது . சயந்தன் -ஆதிரை , சாத்திரி -ஆயுத எழுத்து , குணாகவியழகன் -நஞ்சுண்டகாடு ,விடமேறிய கனவு போன்ற நூல்களை குறிப்பிடலாம் .
6.யாழ்பாணத்தில் பெண்களுக்கான இலக்கிய வெளி எவ்வாறு இருக்கின்றது ?
நாவல் ,சிறுகதை போன்ற படைப்புக்களை தருகின்ற பெண் படைப்பாளிகள் தற்போது குறைவு .முகநூலில் பல பெண்கள் எழுதுகிறார்கள் . கவிதைத்துறையில் அடையாளப்படுத்த கூடிய கவிதைகளை தருகின்றார்கள். மதுசா மாதங்கி ,பிரியாந்தி , பிறைநிலா, கெளதமி , அதிசயா போன்றவர்களை குறிப்பிடலாம் . எனினும் பொது வெளியிலே இலக்கிய செயற்பாடுகளில் ஈடுபடும் பெண்கள் குறைவாகவே உள்ளனர் .
7. வாசிப்பு ஆர்வம், இலக்கிய ஆர்வம் என்பவற்றை இளையவர்களிடம் ஏற்படுத்துவதற்கு எத்தகைய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள் ?
இதற்கான முயற்சி மாணவர்களிடம் இருந்தே ஆரம்பிக்க வேண்டும் என்றே கருதுகின்றேன். ஆசிரியர்கள் மாணவர்களது தனித்திறமைகளை இனங்கண்டு ஊக்குவிக்க வேண்டும். குறிப்பாக தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்கள் இலக்கிய இரசணையை தமது கற்பித்தல் மூலம் ஊக்குவிக்க வேண்டும்.
8. இந்த விஷயத்தில் ஆசிரியர்களின் பங்களிப்பு எப்படி இருக்கிறது ?
இங்கு ஒரு ஆரோக்கியமான சூழ்நிலை அமையவில்லை என்றே குறிப்பிட வேண்டும். பெரும்பாலான ஆசிரியர்கள் தாம் கற்பிக்கின்ற பாடங்களில் உயர்வான அளவு மட்டத்தை பெற வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர மாணவர்களின் தனிப்பட்ட திறமைகளையோ இலக்கியம் சார்ந்த ஆற்றலையோ ஊக்குவிப்பது இல்லை. இன்னொரு கவலை தரும் விடயம், தமிழ் ஆசிரியர்களே இலக்கியத்தில் ஆர்வம் அற்றவர்களாக காணப்படுகிறார்கள். அண்மையில் தமிழ் ஆசிரியர் ஒருவரிடம் யாழ்ப்பாணத்தில் என்னென்ன தமிழ் சஞ்சிகைகள் வருகின்றன என கேட்டேன். குமுதம், ஆனந்தவிகடன் வந்தது அது இப்போது வருகிறதோ தெரியவில்லை என்றார்.இப்படி இருக்கிறது நிலைமை.
9. நீங்கள் சஞ்சிகைகள் பற்றி குறிப்பிட்டதால் கேட்கிறேன். இலக்கிய வளர்ச்சிக்கு ஊடகங்களின் பங்களிப்பு (பத்திரிகை, சஞ்சிகை) எப்படி இருக்கிறது ?
உதயன், தினக்குரல், வலம்புரி, தினமுரசு போன்ற பத்திரிகைகள் யாழ்ப்பாணத்தில் இருந்து வருகின்றன. வீரகேசரி, தினகரன், மித்திரன் என்பன கொழும்பில் இருந்து வருகின்றன. இந்த பத்திரிகைகளின் வாராந்த வெளியீடுகள் படைப்பாளருக்கு களம் அமைத்துக்கொடுக்கிறன. ஆனால் இந்த இலக்கிய பக்கங்கள் பல நேரங்களில் பக்கம் நிரப்பும் செயற்பாடாக மட்டுமே அமைகிறது. தரமான ஆக்கங்கள் வெளிவருவதில் இவர்கள் அக்கறை செலுத்த வேண்டும். சஞ்சிகைகளை பொறுத்தவரை கலைமுகம், ஜீவநதி போன்றன யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவருகின்றன . இவற்றினுடைய கலைப்பணி கனதியானது, கொழும்பிலிருந்து வெளிவருகின்ற ஞானம் சஞ்சிகையும் பல படைப்பாளர்களின் களமாகின்றது.



