சுதந்திரக் கட்சியை சின்னாபின்னமாக்கி சீரழிக்க மகிந்த முயற்சி: சந்திரிகா
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சின்னாபின்னமாக்கி சீரழித்து திருடர்களுடன் சேர்ந்து தப்பித்துக்கொள்ளும் முயற்சியிலேயே மஹிந்த ராஜபக்ஷ ஈடுபட்டுள்ளார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம்சுமத்தியுள்ளார்.
மின்சாரத் துறை பொறியியலாளர்களின் எதேச்சதிகாரம் உள்ளது. அவர்கள் தங்களது கடமைகளை நிறைவேற்றுவதில்லை என வும் முன்னாள் ஜனாதிபதி குற்றம் சாட்டியுள்ளார். களனி தேர்தல் தொகுதியில் நேற்று முன் தினம் இடம்பெற்ற சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் இங்கு தொடர்ந்து உரையாற்று கையில் முக்கியமாகத் தெரிவித்ததாவது:
“எமது கட்சி 20 வருடகாலம் ஆட்சியில் இருந்தது. ஆனால் தவறுகள் செய்ததால் ஆட்சி பறிபோனது. நாட்டையும் கட்சியையும் நாசமாக்கி விட்டார்கள். இவர்களால் கட்சி இல்லாமல் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கட்சி அழிந்தாலும் நாடு அழிந்தாலும், மக்கள் சீரழிந்தாலும் இவர்களுக்கு பிரச்சினையில்லை.
மக்களுக்கு பொய்களைக் கூறி மீண்டும் ஆட்சியை பிடித்து சீரழிவுகளை ஏற்படுத்துவதே இவர்களது நோக்கமாகும். இது தொடர்பில் கிராமம் கிராமமாகச் சென்று மக்களை தெளிவுபடுத்த வேண்டும். சுதந்திரக் கட்சியும் ஐ.தே.க. வும் இணைவதென்பது முரண்பாடு மிக்கதுதான். ஆனால் இன்றைய நிலையில் நாட்டையும் மக்களையும் பற்றிச் சிந்தித்தே இந்த முடிவை எடுத்தோம்.
அத்தோடு கட்சியை கொலைகாரர்களிடம் அல்லது ஊழல் மோசடிக்காரர்களிடம் கையளிப்பதா என்ற கேள்வியும் எம்முன் காணப்பட்டது. இன்று நல்லாட்சிக்கு எதிராக செயற்பாடுகளை முன்னெடுக்கும் மஹிந்த ராஜபக் ஷ கட்சியைச் சீரழித்து சின்னாபின்னமாக்கி திருடர்களுடன் சேர்ந்து வெளியேற முயற்சிக்கின்றார்.
எனது ஆட்சிக் காலத்தில் கொள்வனவு செய்த ஆயுதங்களின் மூலமே ராஜபக்ஷவிற்கு யுத்தத்தை முடிப்பதற்கு முடிந்தது. இன்று மின்சாரத்தடை தொடர்பில் அரசை விமர்சிக்கின்றார்கள். கடந்த ஆட்சியில் மட்டுமல்ல அனைத்து ஆட்சிக் காலங்களிலும் மின்சாரத்துறை பொறியியலாளர்களின் எதேச்சதிகாரம் மின்சார சபைக்குள் இருந்து வருகிறது. பொறியியலாளர்கள் இத்துறையின் அனைத்தையும் தமது ஆதிக்கத்தில் வைத்துள்ளனர்.”
R-06




