இலங்கை-இந்தியாவை இணைக்கும் பாலம் குறித்து டில்லியுடன் பேசவில்லை
இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் பாலமொன்றை நிர்மாணிப்பது தொடர்பில் இந்தியாவுடன் எந்த பேச்சும் இடம்பெறவில்லை என்று பிரதமர் ரணில் விக்கிரம சிங்க சபையில் திட்டவட்டமாக அறிவித்தார்.
பாராளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மகிந்த ஆதரவு அணியை சேர்ந்த கொழும்பு மாவட்ட எம்.பி.யான உதய பிரபாத் கம்மன்பில எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் விக்கிரம சிங்க இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
தமது இந்திய விஜயத்தின் போது இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் பாலமொன்றை நிர்மாணிப்பது தொடர்பில் பேச்சுகள் எதுவும் இடம்பெறவில்லை என்றும் அத்தகைய பேச்சுவார்த்தையொன்று இடம்பெறும் பட்சத்தில் அதுபற்றி பாராளுமன்றத்துக்கு அறியத் தருவதாகவும் பிரதமர் பாராளுமன்றத்தில் கூறியிருந்த போதிலும் இலங்கை பிரதமரின் இந்திய விஜயத்தின் போது அவர் இந்த பாலம் குறித்து இந்தியப் பிரதமருடன் பேசியதாக இந்திய வீதிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்காரி 2015.12.16 அன்று இந்திய லோக் சபாவில் அறிவித்திருப்பதாக கூறி உதய கம்மன்பில எம்.பி. கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரம சிங்க , இந்திய அமைச்சர் கட்காரியின் உரை அந்நாட்டு பாராளுமன்ற ஹன்
சாட் அறிக்கையில் இந்தி மொழியிலேயே இருப்பதாகவும் ஆங்கில மொழி பெயர்ப்பு கிடைக்கவில்லை என்றும் இங்கு யாருக்கேனும் இந்தி மொழி தெரியுமெனில் மொழி பெயர்த்து தருமாறு கூறினார்.
அத்துடன், இந்திய அமைச்சர் நிதின் கட்காரி இந்தப் பாலம் தொடர்பில் மிகுந்த அக்கறையுடன் இருப்பதாக கூறிய பிரதமர் விக்கிரம சிங்க, இருப்பினும் அவ்வாறான பாலமொன்று பற்றி இந்தியாவுடன் எந்த பேச்சுகளும் இடம்பெறவில்லை என்றும் குறிப்பிட்டார்.
n10




